Tuesday, January 24, 2012

எமது அறிவுபூர்வ பாரம்பரியத்தில் பெண்களின் பாத்திரம்



தற்போதைய எமது காலத்தில் அலசப்படும் முக்கியமான விடயங்களில் இன்றைய பல்வேறுபட்ட துறையகளில் பெண்களின் பாத்திரங்கள்; எவ்வாரு இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இது விடயமாக ஆண்களும் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

ஆணாதிக்கம் இத்தனை ஆண்டுகள் நடை பெற்றப் பின்னர் அவர்களுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? எப்படி இந்த திடீர் ஞானோதயம்? இது, ஆண் பெண் சமத்துவதத்திற்காக தேட்டம் பொதுவாக அதிகரித்துள்ளதாலா? அல்லது இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத விதத்தில் ஆண்கள் 'அச்சுறுத்தலுக்கு' ஆளாகி இருப்பதாக அவர்கள் உணர ஆரம்பித்ததாலா?

உலகில் 'புகழ் பெற்ற' ஆண்கள் 'புகழ் பெற்ற' பெண்களை விட எப்பொழுதும் அதிகமான எண்ணிக்கையிலேயே இருப்பர். ஆயினும் ஒரு மரபிட்கான பங்களிப்பில் ஆண்களும் பெண்களும் சமமாக பங்களிப்புச் செய்வது அவசியமென்றே நான் கருதுகின்றேன். ஒருவருடைய துணையின்றி மற்றவருக்கு எதுவுமே சாத்தியமாகாது என்பதே உண்மை நிலை.


திருக்குர்ஆனும் அல் ஹதீஸும் இந்த விடயத்தைப் பற்றி இவ்வாரான கோட்பாடுகளையே கொண்டுள்ளது. இருப்பினும் இந்த விடயத்தைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு நான் முன் வந்திருந்தாலும், நான் ஒரு ஆசிரியையே தவிர, மார்க்க அறிவை முழுமையாக கற்றவளோ அல்லது இந்த விடயத்தில் நிபுனத்துவம் பெற்றவளோ அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, எல்லாவற்றிட்கும் மேலாக, ஒரு பெண் என்ற கோதாவில் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே நான் வந்துள்ளேன்.

இது போன்ற விடயங்களை நிபுனத்துவம் உள்ள அறிவு ஜீவிகள் விவரிக்கும்போது, மிக விசித்திரமான புதிய வார்த்தைகளை கையாள்வதுண்டு. உதாரணமாக ஆங்கிலத்தில் epistemology, ontology, teleology போன்ற சொற்களை அவர்கள் அள்ளி வீசுவார்கள். இவ்வாரு அவர்கள் செய்வதன் நோக்கம் தாங்கள் ஒரு விஷேட அறிவு ஜீவிகள் குழுவொன்றை சேர்ந்தவர்கள் என்பதை நாம் மறக்காமல் இருப்பதற்கேயன்றி, அவர்கள் கூறும் விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற என்னத்தினால் அல்ல என்று நான்  நினைப்பதுண்டு. இவ்வாரான, எமது 'தலைக்கு மேலே' செல்லக்கூடிய வார்த்தை பிரயோகங்களால், அவ்விடயம் நமது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பானது என்ற நினைப்பே எம்மை விட்டு வெறுண்டோடி விடுவதுண்டு. ஆகையால் நான் நம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் சம்பாஷிக்கவே விரும்புகின்றேன். என்னால் முடிந்ததும் அது மாத்திரம்தான்.




என்னை பொருத்தமட்டில் பாரம்பரியம், மரபுறிமை என்றால் மனிதர்களே. மனிதர்கள் என்றால் சிந்தனையும் செயலுமாகும். பாரம்பரியமாகவும் மரபாகவும் பிற்காலத்தில் ஆவது மனிதர்களின் இந்த சிந்தனையும் செயல்களுமே.

இஸ்லாமிய பாரம்பரியம் என்றால், அல்லாஹ்வை திருப்திப் படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல்களென்றே நான் நம்புகின்றேன். அதைத் தவிர உள்ள அனைத்தும் வெரும் சரித்திறமேயன்றி இஸ்லாமிய மரபுறிமையாக கொள்ள முடியாது.

எனது வாழ்க்கை பிள்ளைகளையும் வாலிபர்களையும் சுற்றிச் சுழன்றுகொண்டிருப்பதாகும். அவர்களே என் ஆசான்கள். 12 முதல் 20 வயதான இவர்களில் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து மரபுறிமை என்று அவர்கள் நினைப்பது எதை என்று நான் கேட்டேன். அவர்களில் பெருமபான்மையானோர், கலை, கட்டிடடக்கலை என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த பதில்கள் எனக்கு ஏமாற்றத்தை தந்தாலும் ஆச்சரியத்தைத் தரவில்லை.

பிறகு நான் அதே கேள்வியை வேறு விதமாக கேட்டேன். அறிவுபூர்வ மரபுறிமை என்றால் என்ன என்று கேட்டேன். அப்பொழுது பதில்கள் இலக்கியம், காவியம் என்ற ரீதியில் வெளிப்பட்டது. மேலும் சில் கருத்துப் பரிமாற்றலுக்குப் பிறகு நப்ஸுடன் (அதாவது உள்ளுணர்வுடன்) செய்யப்படும் போராட்டங்களை ஏற்படுத்துவதே அறிவுபூர்வ மரபுறிமை என்று அவர்கள் கூறினர்.

இந்தக் கட்டுரையில் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது 'இஸ்லாத்தில் உள்ள பெண்' என்பதற்கும் 'முஸ்லிம் பெண்' என்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முஸ்லிம் பெண் என்பவள் வேறு எங்கும் காண முடியாத, ஒப்புவமையற்றவள் ஆவாள். பொதுவாக தவறாக கருதப்படும் 'ஆண் பெண் சமத்துவம்' என்ற விடயத்தை போலல்லாது, இஸ்லாம் கூறும் இச்சமத்துவம் ஆணையும் பெண்ணையும் மனிதப் பிறவிகளாக கருதும் அடிப்படையில் எழுந்ததாகும். அவர்கள் இருவரையும் சமமானவர்கள் என்று பொய்யாக குறிப்பிட விரும்பாததன் காரணம், இஸ்லாம் எப்பொழுதும் நயவஞ்சகத்தனமாக விடயங்களை கூற விரும்பாததனாலேயாகும்.

மனித சமுதாயத்தின் சரித்திறத்தில் நாகரீகங்களின் தோற்றம் முதலிய முக்கியமான விடயங்களை நோக்கும் போது அவ்வெதிலுமே பெண்ணின் பாத்திரம்; குறிப்பிடுமளவு இருந்ததில்லை என்பது தெளிவாகும். கிரேக்க சிந்தனையாளர்களையும் ஏனைய மேதைகளையும் எடுத்துக்கொண்டால்; அவர்கள் அனைவருமே ஆண்களே. பிரெஞ்சுப் புரட்சி மற்றும் ரஷ்யப் புரட்சி ஆகியவற்றின் பின்னனியும் ஆண்களே. ஐக்கிய அமெரிக்காவை கட்டியெழுப்பியவர்களும் ஆண்களே.

ஆனால், இஸ்லாத்தை கட்டியெழுப்புதலில் பெண்கள் குறிப்பிடுமளவு பங்கேற்றுளமையை நாம் காணலாம். அதே போன்று இஸ்லாமியக் கல்வியின் முக்கிய அம்சமொன்றாகிய ஹதீஸ் அறிவிப்புக்களை பாதுகாத்து அறிவித்ததன் மூலம் பிறகு தோன்றிய சமுதாயங்களுக்கு இஸ்லாhத்தை கிடைக்கச் செய்யும் மாபெரும் கைங்கரியத்திலும் முஸ்லிம் பெண்களின் பங்கு மகத்தானதாக இருப்பதை நாம் காணலாம்.

ஆணையும் பெண்ணையும் ஒரே ஆத்மாவில் இருந்து படைத்ததாகவே திரு மறை கூறுகின்து. 'மனிதர்களே! ஒரே ஆன்மாவில் இருந்து உங்களை படைத்து பிறகு அதிலிருந்து அதன் துணையை படைத்த உங்கள் இரட்சகனை பயந்துகொள்ளுங்கள்' (அந்நிஸா: 1)


ஆக, உடல் ரீதியாகவே இவ்விருவரும் வேறுபடுகின்றார்கள். மறுமை எனும் ஒரு பொதுவான குறிக்கோளை அடைவதற்கு அல்லாஹ்வினால் வித்தியாசமான 'உடல்கள்' எனும் மாறுபட்ட 'கறுவிகள்' தரப்பட்ட, ஆனால் ஒரே மூலத்தில் இருந்து படைக்கப்பட்டவர்களே இந்த ஆணும் பெண்ணும். பெண்ணுடன் ஒப்பிடுகையில் ஆணை பலமிக்கவனாகவும், பிடிவாதமுள்ளவனாகவும் வெளிப்புற வாழ்க்கையை அதிகம் விரும்புபவனாகவும்; அறிவுமிக்கவனாகவும் அல்லாஹ் படைத்திருப்பதை காணலாம். ஆனால் இதற்கு மாறாக பெண்கள் தனது உணர்வுகளை மறைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும், தனது கண்ணியம் பற்றி அதிகம் கவலை கொள்ளக்கூடியவளாகவும் இருப்பதை காணலாம். இதை பலஹீனங்களின் அடையாளங்களாக தவறாக எடை போடப்பட்டாலும், இதுவே உண்மையான மனித பலங்களாகும்.

ஜலாலுத்தீன் றூமி இது பற்றி இவ்வாரு கருத்துத் தெரிவித்துள்ளார்.

'அறிவு என்ற விடயத்தை நோக்கும்போது ஆண் வானமாகவும் பெண் பூமியாகவும் இருக்கின்றனர். வானம் வீசக்கூடியதை பூமி காத்துக்கொள்;கின்றது'

எனவே, உணர்ச்சி எனும் சக்தியை கட்டுப்படுத்தி கடிவாளமிடுவதில் பெண்கள் அதிக ஆற்றலுள்ளவர்கள் எனக் குறிப்பிடலாம். ஆகவே, மனிதர்கள் தங்களது வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதற்குத் தேவையான அரூபமான அந்த ஆற்றலின் அஸ்திவாரத்தை இடுபவள்; பெண் என்றே நான் கருதுகிறேன். இந்த அஸ்திவாரத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்காக, நமது வீட்டின் அன்றாட விடயங்களில் இந்த அஸ்திவாரம் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தின் பக்கம் நமது கவனத்தை செலுத்துவது பயனளிக்கும். துரதிருஷ்டம் என்வெனில், இதற்காக நாம் வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை என்பதுதான்.

வீடு என்பது இப்பிரபஞ்சத்தின் ஒரு அணுவாகும். ஒரு வீட்டில் இடப்படும் சரியான, உறுதியான அஸ்திவாரமானது, அவ்வீட்டில் மற்றுமன்றி ஏனைய வீடுகளுடனான மற்றும் சமூகத்துடனான தொடர்புகளில் அமைதி, ஒற்றுமை, சந்தோஷம் பேன்றவற்றை உறுதிப்படுத்தும். ஆகவே இந்த அஸ்திவாரத்தை இடும் தன்னுடைய பாரிய பொறுப்பை பற்றிப் பெண்கள் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த பயனளிக்கும். இதில் பயிற்சி பெறும் பெண் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் ஈடுபடும்போது பல சமயம் ஆண்களை விட வெற்றிகரமாக அத்துறைகளில் செயலாற்றக்கூடியவளாகின்றாள்.

இதற்காக, பெண்களுக்கு கல்வியறிவு தரப்படுவது அவசியமாகும். இதனால் மாத்திரமே மனித சமுதாயம் சரியான வெற்றியை அடையும். கல்வி என்பதன் மூலம் இங்கு நாடப்படுவது உலகாதாயக் கல்வியை மாத்திரமல்ல. வாழ்க்கையை புரிந்த கொள்ளும் கல்வியே உன்னதக் கல்வியாகும். மத்திம யுகத்திலும் கல்வியின் நோக்கமாக இருந்தது ஆன்மாவை மேம்படுத்தும் இத்தகைய அறிவூட்டல்களே. இதற்காக மனிதர்களால் வரையறுக்கப்படடுள்ள விடயங்களை விட்டு விட்டு, படைத்த நாயனால் வகுக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான திட்டத்தை பற்றி ஆராய முனைவது மிகுந்த பயன் அளிக்கும். இதனால் பெண்கள் உலகக் கல்வியை கற்கக் கூடாது என்பதோ, அவர்கள் உத்தியோகம் பார்க்கக் கூடாது என்பதோ கருத்தல்ல. ஆண்களுக்கு பணிவிடை செய்து கொன்டு அடிமை வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணை நீங்கள் இப்பொழுதே கற்பனையில் கண்டுகொண்டிருந்தால் நீங்கள் அதை விட உண்மையை விட தூரமாக முடியாது. நான் கூறுவதன் அர்த்தம் அதுவல்ல. பெண்களை 'அவர்களாக ஆக விடுங்கள்' என்றே நான் வேண்டுகிறேன்.

ஆணாதிக்கத்தை தினிக்கும் விதத்தில் ஆண்கள் பற்பல நூற்hண்டுகளாக செயற்பட்டதன் விளைவாக தாம் புறக்கனிக்கப்பட்டு வருகிறோம் என்ற என்னத்தில் பெண்களும் ஆண்களை விட பிடிவாத குனம் உள்ளவர்களாக மாறி விட்டிருப்பதை நாம் இன்று காண்கிறோம். ஏனெனில் பெண்கள் எவ்வாரு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ, அவ்வாரு இருக்க வேண்டிவர்களேயன்றி அவர்கள் ஆண்களோ சமுதாயமோ விரும்பும் விதத்தில இருக்க வேண்டியவர்கள் அல்ல. தாங்கள் பலஹீனமானவர்கள் என்று என்னும் விதத்தில் பெண்கள் நடாத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதை நீங்கள் புரிந்துகொண்ட நிலையிலேயே நான் மேலும் தொடர விரும்புகின்றேன்.

உதராணப் பெண்களை தேடும்போது, தாங்கள் பாட்டிகளாக, தாய்மார்களாக, மனைவியராக, சகோதரிகளாக, மகள்களாக இருப்பதை ஒரு காரணியாக கருதாது, சமுதாயத்தை சீராக்கும் பணியில் வெற்றி கண்ட மற்றும் சமூகத்தில் முத்திரை பதித்த பெண்களையே தேட நான் முற்பட்டேன்.

இதற்காக நான் முதலில் ஆராய்ந்தது திருக்குர்ஆனையாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களில் உதாரணங்களில் முதலில் ஸையிதா ஹாஜரா நாயகியை முன்வைக்க எண்ணுகின்றேன்.

அவர் (நபி இப்றாஹீம்) ஒரு மகத்தான இறை தூதராக இருந்தார்கள். ஹாஜராவோ இறைவனின் ஒரு பாக்கியம் பெற்ற அடிமையாக இருந்தார்.

அவர் ஒரு வீட்டை கட்டினார். ஹாஜரா அதைச் சூழ அலங்கரித்தார்கள்.

அவரது பாதங்களின சுவடு கல்லொன்றில் பதியப்படடிருந்தது. ஹாஜரின் சுவடுகளோ 'ஸஈ' யாக மாறியது.

அவர் பலியிடும் ஒரு கனவைக் கண்டார். ஹாஜரின் மகன் அதை நனவாக்கினார்.

மற்றுமொரு உதாரணமாக பிர்அவுனின் மனைவி ஆஸியாவை குறிப்பிடலாம். ஒரு முழு இனத்தையே துன்புறுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டிருந்த ஒரு கொடுங்கோள் அரசுனுக்கு எதிராக ஆஸியா நின்றார்கள் என்று கூறுவதே அவர்களின் சிறப்பிற்கு போதுமானதாகும். அதுவும் ஆஸியாவுடைய விடயத்தில் அந்த கொடுங்கோளன் அவருடைய கணவனாகவே இருந்தான். அப்பொழுது அவர் அல்லாஹ்வை அழைத்து பிரார்தித்ததாக ஏக வல்லவன் தனது திரு மறையில் சிலாகித்து இவ்வாரு கூறுகின்றான். 'என்னுடைய இரட்சகனே! சுவனபதியில் உன்னிடத்தில் எனக்கொரு வீட்டைக் கட்டுவாயாக' (தஹ்ரீம:; 11)

இவ்வாரு அவர் வேண்டி நின்றது அல்லாஹ்வின் திருப்தியையே ஆகும். தன் மனைவியுடைய மன உறுதி பிர்அவுனை நிலை தடுமாறச் செய்தது. அவனது மனதிற்கு விருப்பமான அந்த மனைவியின் வாயை அடைக்கும் நிலை அவனுக்கு ஏற்பட்டது.

மற்றுமொரு உதாரணம் ஸையிதா மர்யமுடையதாகும். அவர் உலகம் என்ன நினைக்கும் என்பதை பொருட்படுத்தவில்லை. ஒரு ஒழுக்கமிக்க கண்ணிப் பெண்ணுக்கு தன்னுடைய கற்பும் நற்பெயரும் எந்தளவு முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். ஆனால் தனது இரட்சகனின் வாக்கின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக திருமணமாகாமலேயே சிசுவொன்றை சுமக்கும் அவப்பெயரை ஏற்கத் துனிந்து, பிறகு தைரியமாக அந்த கைக்குழந்தையுடன் தனது ஊர் மக்களை சந்திக்கச் சென்ற அவரைப் போன்ற நம்பிக்கை உறுதி மிக்க வேறொரு கண்ணிப் பெண்ணை நாம் எங்கும் காண முடியாது. அது மட்டுமல்ல. இதே போன்ற ஒரு சோதனையை தாங்கிய வேறு ஒரு ஆணை காணவும் முடியாது.

மேற்குறிப்பிட்ட அப்பெண்மணிகள் அனைவரும் தங்களுக்கும் தன் இரடசகனுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையை சரியாக புரிந்து கொண்டதனாலேயே மாபெரும் வெற்றிகளை பெற்றார்கள்.

இதே போன்று ஹதீஜா அம்மையார், பாத்திமா நாயகி, ஜைனப் போன்ற மாதர்குல மானிக்கங்களை நாம் குறிப்பிடலாம். திருக்குர்ஆனில் சிலாகிக்கப்பட்ட பெண்களுக்கான அனைத்து நற்குனங்களும் இவர்களிடமும் இருந்தன. இவர்கள் எல்லோரும் ஹாஜராவின் பொறுமையை கைகொண்டார்கள். ஆஸியாவின் தைரியத்தை பெற்றிருந்தார்கள். மர்யமின் மன உறுதியோடு செயற்பட்டார்கள்.

சரித்திற ஏடுகளை புரட்டிப் பார்க்கும்போது, இவ்வுயர்ந்த மாதர்களை பின்பற்றிய புகழ்பெற்ற பல முஸ்லிம் பெண்மணிக்ளை நான் கண்டு வியப்புற்;றேன். மொங்கோல் காதூன்ஸ், துர்க்கியின் அரசி ஸஜாரத் அல் தூர், யெமனில் வாழ்ந்த அரசிகளான அஸ்மா மற்றும் அற்வா, மேலும் மாலைத்தீவிலும் இந்தோநேசியாவிலும் வாழ்ந்த அரசிளங்குமரிகள், சமீபத்தில் பங்களாதேஷில் ஆட்சி புரிந்த காலிதா ஸியா, ஷேக் ஹஸீனா, பாகிஸ்தானின் பெனாஸிர் பட்டோ போன்ற உதாரணப் பெண்கள் பலர் முஸ்லிம்களில் இருந்துள்ளனர்.



இவர்கள் எல்லோரும் அரசியல் துறையில் ஆண்களுக்கு சமமாக, ஏன் சில சமயம் ஆண்களை விட திறமையாக, செயற்பட்டவர்கள்.

இதே போன்று விஞ்ஞானம், மருத்துவம், விமானத்துறை, கட்டிடக்கலை போன்ற பல துறைகளில் பெண்கள் தம்முடைய முத்திரையை பதித்துள்ளனர். அறிவியல் துறைக்கு பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர்கள் என நான் கருதும் 3 பெண்களை தேர்ந்தெடுத்துள்ளேன். நான் முன்பு குறிப்பிட்டது போன்று தன்னுடைய இரட்சகனுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை சிறந்த முறையில் பேனியவர்களாக இவர்களை நான் காண்கின்றேன். தங்களுடைய கருத்துக்களுக்கு வரவேற்பு இல்லாதிருந்த போதிலும் அவைகளுக்கு தேவை இருந்த இடங்களில் அவற்றை தைரியமாக வெளிப்படுத்தியவர்கள் என இவர்களை குறிப்பிடலாம். சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தருனங்களில் பலமிக்கவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் இவர்கள் தளரவில்லை. அவர்களது வாழ்க்கை சரிதையை படிக்கும்போது அவர்கள் அடைந்த துன்பங்களை என்னாலும் உணர முடிந்தது. அவர்கள் ஒப்பற்றவர்கள். இருப்பினும், அவர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு சராசரி பெண்ணின் கரத்திட்கும் எட்டும் தூரத்தில் உள்ளவைகள் என்றே நான் நம்புகின்றேன்.

பின்தல் ஹுதா (1940-1980) இவருடைய பெயரின் பொருளே 'நேர்வழி நடத்துபவரின் மகள்' என்பதாவதுடன் இவருடைய இயற்பெயர் அமீனாவாகும். இவருடைய தந்தையின் பெயர் ஸெய்யித் ஹைதர் அஸ் ஸத்ராவதுடன், இவருடைய பரம்பரை பல தலைமுறைகளாக ஈராக்கில் உள்ள முஸ்லிம்களை வழிநடத்தியவர்கள் ஆவார்கள்.



அமீனா தன்னுடைய சகோதரனிடமிருந்து மார்க்கக் கல்வியை கற்றதோடு தன்னுடைய திறமையை மிகவும் ஆரம்ப வாலிபப் பருவத்திலேயே வெளிப்படுத்த முற்பட்டார். அவர் சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தபோது, அவை மக்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆரம்பித்ததுடன் உலமாக்களின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தது. இஸ்லாமிய கோட்பாடுகளை மிகவும் எளிய நடையில் பாமர மக்களுக்கும் புரியும் வித்தில் அமீனாவின் கட்டுரைகள் அமைந்திருந்தன. அவர் எழுதிய நூற்களில்,Virtues and Victories, Empty and Lost, O! If Only I Have Known and Struggled போன்றவை குறிப்பிடத்தக்கவை.

O! If Only I Have Known and Struggled  ஒரு சிறுகதை தொகுப்பாவதுடன் இந்நூல் பற்றி அமீனா இவ்வாரு கூறுகின்றார்:

'வாழ்க்கையின் பல்வேறு லியடங்களைப் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டத்தை மானசீக சித்திரங்களாக விவரிப்பது இந்த சிறுகதை தொகுப்பின் நோக்கமாகும். ஒரு விடயம் வெறும் சித்தாந்தமாக இருக்கும் வரை அதற்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளாக ஆகும்போது அது பயன்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் அல்லாஹ் இஸ்லாத்தின் வழி காட்டல்களை வெறும் அறிவுரைகளாக மாத்திரம் உபதேசிக்காது, தனது தூதர்களது வாழக்கையின் நடந்த உண்மை சம்பவங்ளாக விவரிக்கின்றான். மேலும் அவைகளின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் பிரம்மாண்டமான நிகழ்வுகள் மூலம் வலியுறுத்துகின்றான்'

பெண்மை பற்றி குறிப்பிடும் அவர் இவ்வாரு கேள்வி எழுப்புகின்றார்: 'மார்க்கத்தை கற்று அதை பின்பற்றுபவர்களும், அல்லாஹ் பெண்களுக்கு திருக்குர்ஆனில் இடாத சங்கிலிகளையும் வேலிகளையும் இடுவதற்கு முயற்சிப்பது ஏன்?'

பிந்தல் ஹுதா என்கிற அமீனா கத்மயான் நகரில் பெண்களுக்காக ஒரு கல்விக்கூடத்தை ஆரம்பித்தார். சில அரசியல் காரணங்களுக்காக அமீனாவின் சகோதரர் பாகிர் அல் ஸத்ர் 1979ல் கைது செய்யப்பட்டபோது, அவரை விடுவிப்பதற்காக அமீனா ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். அதன் பயனாக ஸத்ர் விடுதலை செய்யப்பட்டார். இருந்த போதிலும் மீண்டும் பாகிர் மறு ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி கைது செய்யப்பட்டபோது அதிகாரிகள் அமீனாவையும் சேர்த்தே கைது செய்தனர். அதற்குப் மூன்று நாட்களுக்குப் பிறகு இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

நனா அஸ்மாவு (1793-1865) இவர் ஷேஹ் சேகு உத்மான் டான் போடியோ (போடியோ என்றால் 'பகீஹ்' என்று பொருள்) என்பவரின் மகளாவார். 'சொகோடோ கிலாபத்' எனும் மக்கள் செல்வாக்குள்ள அரசியல் கட்சியும் சிறந்த கல்விமான்களின் அங்கத்துவமும் பெற்ற அமைப்பின் தாபகரான போடியோ, ஒரு சிறந்த அறிவாலியாகவும் இருந்ததுடன், அவருடைய புரட்சிக் கருத்துக்களின் காரணமாக 1804ம் ஆண்டு அவரது தாய் நாடான நய்ஜீரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி, குறிப்பாக பெண்கள் கல்வி பெறுவது பற்றிய முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்த போடியோ அதை தனது செய்றபாட்டு இலக்குகளில் முதலாவதாக வைத்திருந்ததோடு, தனது பெண் மக்களின் கல்வி தொடர்பான விடயங்களில் தனிப்பட்ட விதத்தில் தீவிரக் கண்கானிப்புள்ளவராக இருந்தார்.

நனா என்று இன்றும் அன்புடன் நினைவுகூரப்படும் நனா அஸ்மாவு தனது தந்;தையின் இந்த ஆவலை நன்கு புரிந்துகொண்டவராக தனது கல்வி விடயத்தில் மிகவும் அக்கறை காட்டி வந்தவர், நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பொன்றை எழுதினார். அதில் நபியவர்களின் இறைதூது, திருக்குர்ஆனின் உபதேசங்கள், அல்லாஹ்வின் தூதரின் ஒப்பற்ற நற்குனங்கள் முதலிய விடயங்களை சிலாகித்துப் பல கவிதைகளை இயற்றியிருந்தார். இவரது கவிதைகள் ஆண்களாலும் பெண்களாலும் மாணவ மாணவியராலும் மணணம் செய்யப்பட்டு அவை கல்வி கற்கும் வட்டாரங்களில் எல்லாம் ரீங்காரமிட்டது. பலவிமதான யுத்தங்கள், மோதல்கள் மற்றும் பகைமையின் காரணமாக உலகிற்கு ஏற்படும் அழிவைப் பற்றி தொடர்ந்து கவலை தெரிவித்து வந்த நனா, மனிதர்களுக்கு இடையிலும் நாடுகளுக்கிடையிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் முதலியவற்றை பலத்தையும் ஆயுதத்தையும் பயன் படுத்தி தீர்த்துக்கொள்ள முயன்று அழிந்து பொவதற்கு பதிலாக, இறைவன் மனித குலத்திற்கு தந்தருளியிருக்கும் அறிவையும் ஆன்மிக ஞானத்தையும் கொண்டு நியாயமான முறையில் தீர்த்துக் கொள்வதன் சிறப்பு பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அதிகமாக பேசவும் எழுதவுமானார்.

இதே போன்று கிறாமப்புறங்களில் உள்ள சில பெண்களை அழைத்து வந்து அவர்களுக்குச் சில விடயங்களைக் கற்றுக்கொடுத்து பிறகு அவர்களை தத்தமது ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள ஏனைய பெண்களுக்கு அவைகளைக் கற்றுக்கொடுக்கும் ஒரு திட்டத்தை நனா ஆரம்பித்தார். இவரின் இந்தத் திட்டம் இன்றும் நைஜீரியாவில் நடைமுறையில் இருந்து வருகின்றது. இவ்வாரு கல்வி கற்பவர்களை 'யான்-தாரு' என்று நைஜீரியாவில் அழைப்பதுண்டு. இதன் பொருள் 'ஒத்தாசைப் புரிந்துகொள்பவர்கள்' என்பதாகும். இது பிற்காலத்தில் நைஜீரியாவில் மட்டுமன்றி பல தென் ஆபிரிக்க நாடுகளிலும் மக்கள் ஆதரவு பெற்றதொரு பலம் மிக்க இயக்கமாகவே எழுச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிறகு நனாவின் தந்தையும் கணவரும் இறந்து போகவே நைஜீரிய வளக்குப்படி நனா தன் சகோதரனின் வீட்டில் வாழ்ந்து வந்ததோடு, தொடர்ந்தும் தன்னுடைய புரட்சி எழுத்துப் பணியை மேற்கொண்டு வந்தார். நனா இறைவனடி சேர்ந்தபோது பல்லாயிரக் கணக்கில் மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் வாழ்ந்து வந்த சிறிய வீட்டிற்கு வந்து கூடினர். அப்பொழுது அவரது சகோதரர் ஈசா இவ்வாரு கூறினார்: 'சேகு போடியாவின் பிள்ளைகளாகிய நாம்  அனைவரும் எங்கள் மதிப்பிற்குரிய சகோதரி நனாவின் வழிகாட்டலி லேயே எமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டோம். அந்த பிரகாசமான வழிகாட்டும் ஒளி விளக்கு எங்களை விட்டும் பறிக்கப்பட்டு விட்டது. அவர் மாந்தரின் இதயங்களை சுகமாக்கியவர் என்பதை எல்லோரும் அறிவர்'.

நனா அவரது தந்தையின் கல்லறையின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டதோடு இன்றும் மக்கள் அங்கு வந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

குல்தூம் குலாம் ஹுசேன் காசிம் (திருமதி ஹிம்ஜீ) (1899-1976) இவர் இந்தியாவில் 'குச்' பிரதேசத்தில் பிறந்தார். தனது 14 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து ஏழே மாதங்களில் கணவனை இழந்து விதவைக் கோளம் பூண்டார். தனது தனிமையை போக்குதல் மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதை விரும்பிய குல்தூம், ஒரு மத்ரஸாவை ஆரம்பித்து அதில் எழுத்து, வாசிப்பு, திருக்குர்ஆன், தொழுகை பேன்ற மார்க்க அனுஷ்டானங்களையும் உர்து மற்றும் குஜராத்தி மொழிகளையும் கற்றுக் கொடுத்தார். மேலும் இரவு பாடசாலையொன்றை பெண்களுக்காக ஆரம்பித்து அவர்களுக்கும் மார்க்க சட்டங்கள் மற்றும் எழுதும் படிக்கும் அறிவையும் கற்றுக்கொடுத்தார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த, காலம் சென்ற கணவனின் பெற்றோரும் இறந்து விடவே குல்தூம் ஸன்ஜிபாருக்கு புளம்பெயர்ந்து அங்கு 'மஜாலிஸ்' கற்க ஆரம்பித்தார். அவரது ஒரே மகளான ஜைனப்பின் திருமணத்திற்குப் பிறகு பலரின் வேண்டுகோளுக்கிணங்க குல்தூம் மறுமணம் செய்துகொள்ள இசைந்தார். தனக்குள்ள கடன்களை கொடுத்து முடிப்பதையே 'மகராக' அவர் வேண்டி நின்றதோடு தன்னுடை எஞ்சிய வாழ்நாட்களில் தப்லீகுடைய சேவையை செய்வதற்கும் அவர் அனுமதி பெற்றார். குல்தூம் தன்னுடைய இச்சேவைகளுக்காகவும் தான் கற்ற மஜாலிஸ் பாராயனத்திற்காகவும் ஆபிரிக்கக் கண்டத்தில் பல நாடுகளுக்கு சென்றார். இவருடைய சொற்பொழிவுகளையும் மஜாலிஸ்களையும் கேட்பதற்கு தூர இடங்களில் இருந்தும் பெண்கள் வரலாயினர்.

திருமதி ஹம்ஜீ எனப்பிரபலமாகி வந்த குல்தூம் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தவும் பாடுபட்டார். மேலும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து திருமணங்களையும் செய்து வைத்ததோடு கருத்து வேறுபாடு எற்பட்டு விவாக ரத்துச் செய்து கொள்ளும் நிலையை அடையும் தம்பதியரை மீண்டும் இணைத்து வைக்கும் சேவையையும் செய்து வந்தார் குல்தூம். இதே சமயத்தில், தனது இரண்டாவது திருமணத்தின் மூலம் மேலும்; இரண்டு பிள்ளைகளையும் பெற்றிருந்த குல்தூம், அவர்களுடன் தனது கணவனின் முந்தைய திருமணத்தின் மூலம் அவர் பெற்றிருந்த பிள்ளைகளையும் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. பிறகு அவருக்கு ஏற்பட்ட முதுகு உபாதையின் காரணமாக படுக்கையில் விழுந்த குல்தூம் அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாது மஜாலீஸ் பற்றியதொரு நூலை எழுதி முடித்தார். அதன் பிறகு இரண்டாவது கணவனும் இறந்து விடவே குல்தூம் மறுபடியும் விதவையானார். தனது அந்திம காலத்தில் அவர் ஸையிதா ஜைனப் (ரலி) பற்றி ஒரு நூலை எழுதினார்.

குல்தூமை தனிப்பட்ட முறையில் அறிந்து அவரால் பயன் பெற்றிருந்த ஒரு சிலரை நான் சந்தித்து குல்தூமைப பற்றிய அவர்களது கருத்தை கேட்டபோது அவர்களின் பதில்களில் பொதுவாக நான் கீழே குறிப்பிடும் 5 விடயங்கள் உட்பட்டிருந்ததை அவதானிகக்கூடியதாக இருந்தது:

'முஹர்ரம் பற்றியும் மஜாலிஸ் பற்றியும் மக்களிடையே உள்ள கருத்தை அவர் சீராக்கினார். மேலும் அவர் மிம்பரை ஒர அறிவைப் பெறும் மேடையாக ஆக்க பாடுபட்டார்'

'அவர் மார்க்கத்தை எமது வாழ்க்கைக்குள் அழைத்து வந்தார். மார்க்கம் என்பது 'இதை செய்' 'அதை செய்யாதே' என்பது மாத்திரமல்ல என்பதை அவர் எங்களுக்கு புரிய வைத்தார்'

'அவர் சரித்திறத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்தார்'

'அவர் திருக்குர்ஆனையும் அல் ஹதீஸையும் நாம் காணக்கூடிய மாணசீக பிம்பங்களாக மாற்றினார்'

சிறு பிள்ளைகளாக இருந்தபோது குல்தூமின் பேச்சுக்களுக்கு செவிமடித்து, இன்று சமூகத்தில் முக்கிய அந்தஸ்துகளில் இருக்கும் சிலரை நான் சந்தித்தபோது குல்தூம் பற்றிய அவர்களது நினைவு பசுமையாக இருந்ததோடு அவரைப் பற்றிய தங்களது கருத்துக்களை அவர்கள் இவ்வாரு முன்வைத்தனர்:

'இஸ்லாத்தை நாம் கற்க வேண்டும் என்று எங்கள் தாய்மார்கள் மூலம் ஆர்வமூட்டியவர் குல்தூம் அவர்களே'

'குல்தூமின் சொற்பொழிவொன்றிட்கு எங்கள் தாய்மார்களோ சகோதரிகளோ சென்ற விட்டு வந்தால், அவர் அங்கு குறிப்பிட்ட கருத்துக்களை பற்றி ஆர்வத்துடன் கலந்துரையாடுவதன் காரணத்தால் எங்களது வீடுகள் கோளாகலமாக இருக்கும்'

'கல்வி கற்பதை அன்பு வைக்கும் மனப்போக்கை அவர் ஏற்படுத்தினார்'

1976 செப்டெம்பர் மாதம் ரமழான் பிறை 18ல் அவர் இறைவனடி சேர்ந்த அவர் தாருஸ் ஸலாமில் அடக்கம் செய்யப்படடுள்ளார்.

கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர்கள் போன்ற பெண்களின் வாழ்க்கை சரிதையை நோக்கும்போது, இன்று நாம் கற்கும் ஆன்மிக பின்னனியற்ற விடயங்களின் மூலம் அவர்கள் போன்ற சிறந்த பெண்கள் எம்மத்தியில் தோன்றுவார்களா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இன்று எம்மை ஈர்ந்தெடுக்கும் ஒரே விடயம் உலகாதாயமும் வஸ்துக்களை அடைவதும் மாத்திரமாகவே உள்ளது. ஆனால் அவை ஏராளமாக நம்மை வந்தடைந்த பின்பும் ஒரு வெறுமையையே நாம் உணர்கின்றோம் என்றால், நாம் எங்கு சென்றுகொண்டிருக்கின்றோம்? எதை தேடிக்கொண்டிருக்கின்றோம்?

இந்த நிலையை மாற்றும் பொருப்பில் பெரும் பங்கு பெண்களின் கரத்திலேயே உள்ளது. அல்லாஹ் நமக்கு அளித்துள்ள ஆற்றள்களைக் கொண்டு நாம் எதை அடைய முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம்? இரவல் பெற்ற சித்தாந்தங்களால் எந்த பயனும் நாம் அடைய வில்லை என்பது தெளிவாகியிருக்கும் இந்த தருனத்தில் இஸ்லாத்தின் ஒப்பற்ற வழி நடத்தல்களை சிரமேற்கொண்டு வாழ நாம் தயாராக வேண்டும். பெண்களிடம் மறைந்துள்ள ஆற்றள்கள் இவ்விடயத்திற்கு மிகவும் அவசியமானவையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1 comment:

  1. Assalaamu Alaikkum.

    This is Uvais Ahamed from Chennai(Tamilnadu-Chennai) on behalf of Mellinam Publishers-Chennai. If you can give you your personal email id, it would be useful for me to discuss with you.

    Wassalaam.

    ReplyDelete