Thursday, July 11, 2013

உண்மையான எகிப்திய வசந்தம்.



-கலாநிதி எலியஸ் அக்லே

ஜூன் 28 வெள்ளிக் கிழமை ஆரம்பமான, மில்லியன் கணக்கான எகிப்திய பிரஜைகளை (37 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது) உள்ளடக்கிய அதிபர் முஹம்மத் முர்ஸிக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரும் பிரவாகமெடுத்து பிரதான வீதிகளையும் எகிப்திய மாகாணங்களின் முக்கிய நகர சதுக்கங்களையும் நிறைத்து நாட்டையே ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அதிபர் முர்ஸி பதவி விலக வேண்டும் எனவும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் அதிகாரம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோஷமெழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மக்களின் கோரிக்கைகளைக் கவனத்திலெடுத்து ஆவண செய்ய முர்ஸிக்கு 48 மணி நேரக் காலக்கெடுவை இராணுவத்தினர் விதித்தனர். முர்ஸி அதனை உதாசீனம் செய்ததால் அவர் உடனடியாக இராணுவத்தினரால் பதவி கவிழ்க்கப்பட்டதோடு புதிய அரசியல் யாப்பும் ரத்து செய்யப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கான ஒரு இடைக்கால அரசாங்கத்தை இராணுவம் நிறுவியுள்ளது.


இந்தப் புரட்சி 2011ல் முன்னைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்க்க வைத்த புரட்சியைவிட வித்தியாசமானது. சீ.ஐ.ஏ. அணுசரனையுடனான 'சுதந்திர இல்ல நிறுவனம்'(Freedom House Organization) எனப்படும் நிறுவனத்தினூடாகவே 2011 புரட்சி திட்டமிடப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அதன் 43 உறுப்பினர் அன்று எகிப்திய பொலீஸாரினால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 17 மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக அவர்கள் சாதுர்யமாக இஸ்ரவேலுக்கு நாடுகடத்தப்பட்டு பத்திரமாக அமெரிக்கா சென்றடைந்தனர். என்றாலும் 2013 ஜனவரி 4ம் திகதி எகிப்திய நீதிமன்றம் அவர்கள் இல்லாத நிலையிலும் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. கடந்த காலங்களில் அந்த அரச சார்பற்ற நிறுவனம் பல லத்தீன் அமெரிக்க அரசாங்கங்களை இவ்வாறு பதவி கவிழ்த்துள்ளமை கவனிக்கத்தக்கது. எகிப்தில் ஜனாதிபதி முபாரக் முதுமையடைந்து நோயாளியாக இருந்ததோடு அவரது அராஜகக் கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியும் ஆரம்பமானது. அதேநேரம் அவரது மகன் கமலை அவ்விடத்துக்கு பதிலீடு செய்வதும் கடினமானதொன்றாக இருந்தது.
தற்போதைய புரட்சி பல கோணங்களில் மிக வித்தியாசமானது. இது விரக்தியடைந்த இளம் எகிப்தியர்களினால் திட்டமிடப்பட்டு, ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டது. முதலாவது புரட்சியில் தடைகள் உடைத்தெரியப்பட்டபோது மக்கள் அஞ்சினர். முதலாவது புரட்சியில் பங்கெடுக்க அஞ்சிய இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உட்பட மில்லியன் கணக்கான எகிப்தியர் போராளிகளுடன் கைகோர்த்தனர். முதலாவது புரட்சியிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பாடம் கற்ற முன்னணி இளைஞர்கள் தற்போது போராளிகளுக்கான முறையான திட்டங்களுடனும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றைக் கவனத்திலெடுத்தும் அவர்களது கோரிக்கைகளுக்கான தூரநோக்குடனும் களமிறங்கினர். இதுவே அவர்களின் உண்மையான எகிப்திய வசந்தமாகும்.


இந்தப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கியது இளம் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட தமர்ரத் (கிளர்ச்சி) இயக்கமாகும். அவர்கள் முர்ஸியின் வெளியேற்றத்தை நாடி 25 மில்லியன் கையெழுத்தை சேகரித்தனர். முர்ஸி ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடத்தின்பின் அதாவது, ஜூன் 3ம் திகதி தேசிய மீட்பு முன்னணி என்ற கட்சியோடு இணைந்து வீதியிலிறங்கி உடனடியான ஜனாதிபதி தேர்தலை முன்வைத்துப் போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு எகிப்திய சமூக அமைப்புகள் வீதிகளிலிறங்கினர். இதில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகரவாசிகள், அலுவலகப் பணியாளர், தொழிற்சங்கங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழில்சார் ஊழியர்கள், அரசாங்க உத்தியோகத்தர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள், இல்லத்தரசிகள், சிவில் நிறுவனங்களின் உறுப்பினர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பொலிஸ் படை,இராணுவத்தினர் மற்றும் பல்வேறு கூட்டத்தினர் இதில் பங்கேற்றனர். முஸ்லிம்களும் கிரிஸ்தவர்களும் தோளோடு தோள் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் அரசியல் யாப்பு சபை உறுப்பினர் மற்றும் அமைச்சர்களும் தமது ரஜினாமாக்களைச் சமர்ப்பித்தனர். மொத்தம் 13,000 நீதிபதிகள் அரசியல் யாப்பை மீறியமைக்காக முர்ஸிமீது வழக்குத் தொடர்ந்தனர். 'நாம் பொது மக்களின் பாதுகாவலரேயன்றி அரசாங்கத்தின் பாதுகாவலரல்ல' எனக் கூறி பொலிஸ் படை அவருக்கெதிராகக் கிளம்பியது. இராணுவமும் தனது முதற்பணி பொது மக்களைப் பாதுகாப்பதே எனக் கூறி மக்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்கும்படி முர்ஸிக்கு 48 மணிநேரக் காலக்கெடு விதித்தனர். முர்ஸி தமது மக்களின் குரலுக்கு மதிப்பளிக்வில்லை.முஹம்மது முர்ஸி 1948, 1954, 1965 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர். எகிப்தில் மிக மோசமாகப் பெருகிவரும் மேற்கத்திய செல்வாக்கையும் ஆக்கிரமிப்பையும் நிராகரித்து அடிப்படை இஸ்லாமிய போதனைகளை எழுச்சியடையச் செய்யும் நோக்கில் 1928ல் ஹஸன் அல் பன்னா அவர்களால் உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு.

 இவ்வமைப்பு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கெதிராக ஆயுதப் போராட்டங்களையும் படுகொலைகளையும் மேற்கொண்டனர். அவர்கள் அன்று எகிப்தியர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட 1952ல் கமால் அப்துல் நஸார் தலைமையிலான முடியாட்சிக்கு எதிரான புரட்சியையும் ஆதரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தைக் கைப்பற்றி தமது பாணியிலான ஒரு போலி ஷரீஆ சட்டத்தினடிப்படையிலான ஆட்சியொன்றை அமைக்கத்துடித்த தீவிரவாதிகள் சிலரால் இந்த இயக்கம், கைப்பற்றப்பட்டது. எனவே, சமயப்பற்றற்ற சோவியத் யூனியனுடன் நஸாரின் அரசாங்கம் கைகோர்த்து நிற்பதை சாக்காகக் காட்டி நஸாரைஎதிர்க்கத் தலைப்பட்டனர்.


 அவர்கள் நஸாரைக் கொல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடையவே 1954ல் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டு பலர் சிறையிலடைக்கப்பட்டனர். ஆனாலும் 1981ல் இஸ்ரவேல் சென்று இஸ்ரவேலிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட எகிப்திய அதிபர்அன்வர் சதாத்தைப் படுகொலை செய்வதில் வெற்றி கண்டது. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஹொஸ்னி முபாரக் மிகக் கொடூரமான முறையில் சகோதரத்துவ அமைப்பை அடக்கி ஒடுக்கி அனேகரைச் சிறையில் தள்ளியதோடு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தினார். 2011 ஜனவரி 30ல் கிளர்ச்சிக் கும்பல் ஒன்று வாடி அல் நெட்ரோன் சிறைச்சாலையை உடைத்து கைதிகளை விடுவிக்கும்வரை முஹம்மது முர்ஸியும் அவரது சகாக்கள் பலரும் சிறையிலேயே இருந்தனர். 2011 புரட்சிக்குப் பின் சகோதரத்துவ அமைப்புக்கு முர்ஸியைத் தலைவராகக்கொண்ட 'விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி'(Freedom and Justice Party)என்ற அரசியல் கட்சியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.


2011 புரட்சியின் பின் ஏற்பட்ட ஒரு கலவரமான நிலையில், அரசியல் யாப்பு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டபூர்வமான ஒரு ஜனநாயக முறைமையற்ற ஒரு சூழலில் 2012ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. முஹம்மது முர்ஸியுடன் முபாரக்குடைய ஆட்சியில் பிரதமராகப் பதவி வகித்தவரும் முன்னைநாள் விமானப் படைத் தளபதியுமான அஹமத் ஷபீக் போட்டியிட்டார். திருப்தியற்ற இரண்டு சுற்று வாக்கெடுப்பின் பின் மிகவும் குறைந்த 2மூ பெரும்பான்மையுடனும் இராணுவ அதிகார சபையின் உதவியுடனும் முர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரவேலுடனான உடன்படிக்கைகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என்ற நிபந்தனையின்பேரில் சீ.ஐ.ஏ நிதியுதவியுடன் விடுதலைக்கும் நீதிக்குமான கட்சி (FJP)வாக்குகளை வாங்கியதாக வாந்திகள் உலாவிய நிலையில் முர்ஸி தனது வெற்றிப் பேருரையின்போது எகிப்து தனது எல்லா சர்வதேச உடன்படிக்கைகளையும் மதித்து நடக்கும் என உறுதி கூறினார். இதில் இஸ்ரவேலுடனான உடனபடிக்கைகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே, சிவில் அரசியல் முறைமையை மீள் அறிமுகம் செய்து தமது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வன்முறை வடிவத்தை சீரமைத்துக்கொள்வதற்கு முர்ஸிக்கு அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் அவராலேயே மண்ணாக்கப்பட்டது. ஐந்து வருடங்களாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஒரு பொறியியலாளரான முர்ஸி ஒரு ஜனாதிபதிக்கு அவசியமான அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. எகிப்தின் புதிய அரசியல் அரங்கத்தை அவர் தவறாகவே விளங்கியிருந்தார்;. சகோதரத்துவ அமைப்பு மீதான அவரது குருட்டுத்தனமான அபிமானம் அவரது அரசியல் நோக்கை வரையரைக்குட்படுத்தியது. அதாவது, நாட்டு நலனைவிட அவரது இயக்கத்தின் அடிப்படைவாத ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கே அவர் முக்கியத்துவம் அளித்தார்.

முர்ஸி 2012 நவம்பரில் எவ்வித சட்ட ஞானமுமின்றி,  வரையரையற்ற சட்டவாக்க அதிகாரத்தைத் தன் கையிலெடுத்து, டிஸம்பரில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி அதனை மக்கள்மீது திணிக்க முற்பட்டார். முக்கிய அரசாங்கப் பதவிகளுக்காகத் தமது சகோதரத்துவ சகாக்களை நியமிக்கும் வரை அவர் ஏனைய அரசியல் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தட்டிக்கழித்ததோடு பாராளுமன்றத் தேர்தலையும் தாமதப்படுத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டையும் அரசாங்கத்தையும் மதப்பிரிவினைவாதப் போக்கில் மீளக்கட்டமைக்கும் பணியிலேயே அவர் ஈடுபட்டார்.


முர்ஸி தனது சகோதரத்துவ அமைப்பின் மீது அதிகாரத்தைக் குவித்ததன் காரணமாக எகிப்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் பிரஜைகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலிருந்து அவர் தூரமாக்கப்பட்டிருந்தார்.இது பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது. லிபியாவின் 2 பில்லியன் அமெரிக்க டாலர், சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் ஒவ்வொரு பில்லியன் அமெரிக்க டாலர், 3.5மூ வட்டியுடனான எகிப்திய திரைசேரி உண்டியல் மீதான 3 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உட்பட கட்டாரின் 3 பில்லியன் அமெரிக்க டாலர் எதனாலும் எகிப்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. முர்ஸி நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற நாள் தொட்டு நிலவிய தொடர்ச்சியான பவுனின் மதிப்பிறக்கம், வெளிநாட்டு நாணய ஒதுக்கீடு குறைவடைந்தமை,உல்லாசப் பயணத்துறை வருமானம் சுருங்கியமை என்பன எகிப்திய பொருளாதாரத்தை பாதாளத்துக்கு இட்டுச் சென்றது. மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வரிச் சலுகைகள், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குப் பதிலாக எகிப்தில் தேசியக் கடன் சுமையையே அதிகரிக்கச் செய்தது. இறுதியில் முர்ஸியின் சகோதரத்துவ அமைப்பால் 'தெய்வ குற்றம்' என வர்ணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்(IMF) கடனுக்குக் கையேந்தும் நிலையே அவருக்கு ஏற்பட்டது.
நாளுக்கு நாள் பொருளாதாரப் பிரச்சினை மக்களை வெகுவாக வாட்டி வதைத்தது. அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்தால் மக்கள் நீண்ட கியூ வரிசைகளில்நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் எதையுமே பெறாது வெறுங்கையோடு வீடு திரும்பினர். எகிப்து கோதுமையை இறக்குமதி செய்யும் பிரதான நாடாக மாறியுள்ளது. எகிப்து தொடர்ந்தும் உலக சந்தையைவிட மிகக் குறைந்த விலையில் இஸ்ரவேலுக்கான வாயு விற்பனையை மேற்கொள்வதால் உள்ளுரில் சமையல் வாயுவுக்கான தட்டுப்பாடு பெருகி வருகின்றது. முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எவ்வித கல்வித்தகைமையும் பாராது உத்தியோகங்கள் வழங்கப்படுவதால் ஆயிரக் கணக்கான உயர்கல்வித் தகைமை பெற்ற பல்கலைக் கழகப் பட்டதாரிகள் உத்தியோகமின்றி அலைந்து திரிகின்றனர். தனது தேர்தல் பரப்புரையின்போது முர்ஸி வாக்களித்த எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டதோடு எவ்வித பொருளாதார அல்லது சீர்திருத்த திட்டங்களோ முன்னெடுக்கப்படவுமில்லை.
முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் மதப்பிரிவினைவாதமே மேலோங்கிக் காணப்பட்டது. தேவாலயங்களையும் வீடுகளையும் கொளுத்துவது உட்பட கொப்டிக் கிருஸ்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளதோடு மெஸ்பெரோ படுகொலை பேன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அவர்களது சட்டரீதியான போராட்டங்களும் தாக்குதல்களுக்குள்ளானது. மேலும் திரையிடாத முஸ்லிம் பெண்களும் அடிக்கடி முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

முர்ஸி தனது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியையே தழுவியுள்ளார். எகிப்திய மக்கள் பலஸ்தீனப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகக் கருதி, இஸ்ரவேலர்களைத் தமது பிராந்திய எதிரிகளாகவே பார்க்கின்றனர். எனவே அவர்கள் இஸ்ரவேலுடனான அமைதி உடன்படிக்கையை ரத்து செய்யுமாறும் இஸ்ரவேல் தூதரகத்தை மூடிவிடுமாறும் இஸ்ரவேலுக்கான வாயு ஏற்றுமதியை நிறுத்துமாறும் எல்லாவற்றுக்கும் மேலாக காஸாவுடனான ரபா எல்லையைத் திறந்து தமது ரத்த உறவுகளுக்கு எதிரான இஸ்ரவேலிய இராணுவ, பொருளாதார முற்றுகையைத் தளர்த்த உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் முர்ஸி இதற்கு செவிசாய்க்காது அதற்கு முற்றிலும் மாறான கொள்கைகளையே கடைபிடித்து வந்தார். சகோதரத்துவ அமைப்பின் ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னா பலஸ்தீனப் பிரச்சினையை ஒரு பிரதான விவகாரமாக முன்னெடுத்தார். ஆனால் அவருக்குப் பின் வந்தோர், அதனை ஓரம்கட்டி வெறும் கோஷமாக மட்டும் அதனை மாற்றிவிட்டனர். இஸ்ரவேலிய முற்றுகையை பராமரிப்பதன் மூலம் காஸா மீதான அழுத்தத்தை முர்ஸி அதிகரித்தார். எல்லாவற்றையும்விட அவரது மோசமான செயல் என்னவென்றால் 1.5 மில்லியன் பலஸ்தீனர்களின் வாழ்வாதாரமான காஸா சுரங்க வழிப்பாதைகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்கியமையாகும்.




 அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திலிருந்து கசிந்துள்ள கடிதங்களின்படி முர்ஸி முபாரக்கைவிட மோசமானவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எகிப்திய எல்லையூடாக காஸாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள் போன்றவற்றைத் தடைசெய்தல், சினாயில் இஸ்ரவேலிய பாதுகாப்பை அதிகரித்தல், காஸாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இஸ்ரவேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவி செய்தல், சுயஸ் கால்வாய் மூலமாக அமெரிக்க ஊடுகடத்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்களுக்காக எகிப்திய வான்வெளியைத் திறந்துவிடல் போன்றவை அமெரிக்க இராணுவ நிதியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக முர்ஸி செய்து வரும் துரோகங்களாகும்.
2010 செப்டமபரில் இஸ்ரவேலர்களை இரத்தக் காட்டேரிகள், போர் வெறியர்கள் என்றும் மனிதக் குரங்குகளினதும் பன்றிகளினம் சந்தியினர் என்றும் சாடிய முர்ஸி, 2012 அக்டோபரில் இஸ்ரவேல் ஜனாதிபதி சீமன் பெரஸுக்கு எமுதிய கடிதத்தில்,'எனது அன்புக்குரிய மாபெரும் நண்பா,' என விளித்து 'எமது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் மகிழ்ச்சிகரமான நட்புறவைப் பலப்படுத்திப் பராமரிக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.இவ்வாறான முரண்பாடான நிலைப்பாடு எகிப்திய மக்களின் கவனத்திலிருந்து ஒருபோதும் தப்பிவிடாது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான அல் அக்ஸாவையும் ஜெரூஸலமையும் விடுவிப்பதற்காக ஜிஹாத் செய்யவேண்டும் எனக் கூறிவரும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, கடந்த மாதம் முர்ஸியும் சில தீவிரவாத சலபி அரசியல் மதவாதிகளும் இணைந்து தமது ஜிஹாதை இன்னொரு முஸ்லிம் அரபு நாடான சிரியா மீது திருப்பிவிட்டுள்ளனர். இஸ்ரவேலிய எதிரிகளுடனான நட்புறவைத் துண்டித்து கெய்ரோவில் அவர்களது தூதரகத்தை மூடி பலஸ்தீன விடுதலைக்கு அரைகூவல் விடுவதை விட்டு முர்ஸி தற்போது சிரியாவுடனான நட்புறவைத் துண்டித்து அவர்களது தூதரகத்தை மூடி அவர்களுடன் ஜிஹாத் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். பலஸ்தீனுக்கும் ஏனைய அரபு நாடுகளுக்கும் எதிரான எண்ணற்ற குற்றச் செயல்களையும் பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதை விடுத்து சிரியாவுக்கு மேலாக விமானத் தடை வலையமொன்றை ஏற்படுத்த வேண்டுமென முர்ஸி ஐ.நா.வைக் கேட்டுள்ளார்.

முர்ஸியின் சாயம்வெளுத்துவிட்டதுளூ முபாரக்கைப் போன்று இவரும் ஒரு அமெரிக்க-ஸியோனிஸ அடிவருடியே! இவரது ஒரு வருட ஆட்சி காலத்தில் எகிப்திய மக்கள், பலமுறை வீதிகளில் இறங்கி சீர்திருத்தங்களுக்கான சந்தர்ப்பத்தினையும் எச்சரிக்கையினையும் முர்ஸிக்கு வழங்கினர். அவற்றையெல்லாம் முர்ஸி உதாசீனம் செய்தமையால் இளம் எகிப்தியர் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவையும் புதிய தேர்தலையும் வேண்டி மீண்டும் விதிகளில் இறங்கினர். இதன் மூலம் முர்ஸிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தோல்வியும் மக்களுக்கு வெற்றியும் கிடைத்தது.
மக்கள் முர்ஸிக்கு நாட்டை வழிநடத்துவதற்கான சட்டரீதியான அதிகாரத்தைக் கையளித்தனர். ஆனால் அவர் அதனைத் துஷ்பிரயோகம் செய்தமையால் மக்கள் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றனர். இதுவே மக்கள் விருப்புக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத்தின் உயர் நிலையாகும்.
தமிழில்: றஹ்மத் அலி