Wednesday, April 29, 2015

யெமன் மீதான சவூதியின் ஆக்கிரமிப்பு

அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம்

யெமனில் என்ன நடக்கிறது?


 சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் ஆதிபத்திய வல்லரசுகளினால் 1948ல் பலஸ்தீன் பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட் இஸ்ரேல் ஸியோனிஸ ஆட்சி, சென்ற ஆண்டு காஸா நிலக்கூறில் விமானத் தாக்குதல்கள் நடாத்தி, நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை  ஈவிரக்கமின்றி கொன்று குவித்த நிகழ்ச்சி நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. அரபுலகமும், ஏன் சர்வதேச சமூகமும் பலஸ்தீனர்களைப் பாதுகாக்க  எந்தவித உருப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் நமக்குத்தெரியும். 


இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதிலிருந்து அவதானித்தால், படுமோசமான மனிதாபிமான நெருக்கடி நிலை இதுவாகும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் வருணித்திருக்கும் சிரியாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல் லப்பட்டும், பல இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துமுள்ளனர். ஆனால் அரபு நாடுகளோ,  யுத்த உக்கிரத்தைத் தணிக்க எந்தத் துணிவும் கொள்ளாது, உருப்படி யான  எந்த கூட்டு முயற்சிகளிலும் இறங்காது, அரசியல் சதுரங்கமாடி, ஆயுதக் குழுக்கள் ஏதாவதொன்றிற்கு முழு ஆதரவு வழங்கி, சிரிய நெருக்கடி நிலைமையை மேலும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளன.
இது இவ்வாறு இருக்க, இப்போது சவூதி அரேபியா திடீரெனத் தீரம் கொண்டு, தனது இராணுவ பலத்தைக் காட்டுவதில்  முனைந்திருக்கிறது, 


இது முஸ்லிம் களின் பொது எதிரியான இஸ்ரேலுக்கு எதிராக என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஏனென்றால் அவை இரண்டும் ஏற்கனவே ஈரானுக்கும் சிரியா வுக்கும் எதிரான செயல்பாடுகளில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விஷயம் வெட்டவெளிச்சமாகி விட்டதுளூ உதாரணமாக, அண்மையில் ஈரானிய அணு உலைகளைத் தாக்க தனது வான்பரப்பைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியதைக் குறிப்பிடலாம், ஆனால் தற்போது சவூதி அரேபியா யெமனின் ஹவ்தி போராளிகளுக்கெதிரான நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு, தனது இராணுவ பலத்தைக் காட்டி, 100க்கும் அதிகமான போர் விமானங்களைக் கொண்டு குண்டு வீசி, இரண்டாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி யெமனியக் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு இஸ்லாமிய புனிதத் தலங்களின் காவலனாகத் தன்னைதானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் சவூதி ஆட்சியாளர்;, மனிதாபிமானமற்ற விதத்திலும், நீதி நியாயத்திற்கும் அப்பாற்பட்டும் சக இஸ்லாமி யர்களை எல்லை மீறிச்சென்று  தாக்கி அழிக்கின்ற கயமையை நாம் இன்று காண் கிறோம். 


யெமன் நாட்டையும் அதன்  ஹவ்தி புரட்சியாளர்களையும் பற்றியும், அங்கு சவூதி அரசினால் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புப் பற்றியும் இணையத் தளங்களிலிருந்தும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்திப் பத்திரிக்கைகளி லிருந்தும் சில தகவல்களைத் திரட்டித் தருவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

ஹவ்திப் புரட்சியாளர்கள்
யெமன் ஜனாதிபதி அப்துல் மன்சூர் அல ஹாதியை பதவியை விட்டு விரண்டோடச் செய்த, 10 நாடுகளை  இணைத்துக் கொண்டு சவூதி அரேபியா விமானத் தாக்குதல் மேற்கொண்டும் கூட, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் முன்னேறிச் சென்று அவற்றை தம் கைவசப்படுத்தும், இந்த ஹவ்திப் புரட்சியாளர்கள் யார்? ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஜும்ஆத் தொழுகைகளின் போது யெமனின் இரு பள்ளிவாசல்களில் தக்ஃபீரி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் குண்டு வெடிக்கச் செய்து நூற்றுக்கணக்கானோரை ஷஹீதாக்கியிருக்கும் நிலையில், அரபுத்தீபகற்ப அல்-காயிதாவின் தாய்த்  தளமாக யெமன் அமைந்திருக்கும் நிலையில், அந்த பயங்கரவாதிகளைத் தாக்கி அழிக்கா மல், சவூதி அரசு, யெமன் பூமியை ஆக்கிரமித்து குண்டு வீச்சு நடாத்தி மார்ச்26 முதல் இன்று(ஏப்ரல்20)வரை 2600க்கும் அதிகமான அப்பாவி பிரஜைகளைக் கொன்று குவித்து வருவதற்கான காரணம் என்ன?


ஹவ்திகள் ஸைதி இமாமிய வழிமுறையைப் பின்பற்றும் ஷீஆ முஸ்லிம்களாவர். இவர்கள் ஈரானிலிருக்கும் ஜஅஃபரி ஷீஆக்களிலிருந்து வேறுபட்டவர்கள்ளூ ஸுன்னி இஸ்லாத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்ளூ நாட்டின் ஜனத்தொகையில் ஏறக் குறைய அரைப்பங்கினர். ஆனால் யெமனில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை, சவூதிகள் சொல்வது போல் ஸைதிகளுக்கும் ஸுன்னிகளுக்கும் இடையிலான தகராறு ஒன்றன்று.
ஹவ்தி என்ற பெயர், 2004ல் யெமன் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஹுஸைன் பத்ருதீன் அல் ஹவ்தி யெமன் இராணுவத்தால் கொல்லப்பட்டதால், அவரது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகும். இப்போது அந்த இயக்கம் அப்துல் மலிக் ஹவ்தி என்பவரின் தலைமையின் கீழ் செயற் படுகிறது. 2009ல் எல்லைப்புற சண்டையொன்றில் ஹவ்திகளிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து சவூதிகள் கடும் வைராக்கியம் கொண்டு பகைமை காட்டி வருகின்றனர். புரட்சியாளர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் திராணி யில்லாத, சவூதி கொலைகாரர்கள், யெமன் மக்களின் குடியிருப்புகளையும் பள்ளி வாசல்களையும் பள்ளிக்கூடங்களையும் அங்காடிகளையும் மருத்துவமனைகளையும்  குண்டு வீசி அழித்து வருகின்றனர். நாட்டை சர்வநாசம் செய்ய கங்கணம் கட்டியிருக்கின்றனர்.
வடயெமனை 1978முதல் 1990வரைக்கும், பின் 1990யிலிருந்து 2012ல் பதவி யிறங்கும் வரைக்கும் ஒன்றுபட்ட  யெமனையும் ஆட்சி செய்த ஜனாதிபதி அலீ அப்துல்லாஹ் சாலெஹ்வும்  ஒரு ஸைதி ஷீஆ முஸ்லிம்தான். சவூதிதான் அவரது அரசாங்கத்திற்கு பெருமளவில் அனுசரணை வழங்கி வந்தது. அவருக்கு எதிராக ஜனநாயகக் கோரிக்கையுடன் மக்கள் மாதக் கணக்கில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியதால்தான், வளைகுடா கூட்டுறவு நாடுகள் வகுத்த ஒரு திட்டத்தின் கீழ் அவர் அகற்றப்பட்டு, துணை ஜனாதிபதியாகவிருந்த ஹாதி அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.
ஹாதி கூட ஒரு ஸைதி ஷீஆ முஸ்லிம்தான். ஆயினும் அவர் சவூதி அரேபியாவினது விருப்பத்திற்கேற்ப நடப்பவராகவும், அமெரிக்காவின் கட்டளைகளை நிறைவேறற்றுபவராகவும் இருந்து வந்தார். நாட்டின் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன் னெடுத்துச் செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.


1960 களில் வடயெமன் உள்நாட்டுச் சண்டையில் பாதிக்கப்பட்டிருந்த போது, சவூதி அரசு யெமனின் ஸைதி ஆட்சியாளர்களை ஆதரித்து நின்றது. அதே வேளை எகிப் தும், சோஷலிஸ முகாமும் இராணுவப் புரட்சியாளர்களை ஆதரித்தது. அச்சமயத் தில், ஸுன்னிகள் பெரும்பான்மையாக வாழும் தென்யெமன், பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தென்பகுதி 1967ல்தான் விடுதலை பெற்றது. 1989 இறுதியில் தான், வடயெமன் மற்றும் தென்யெமன் ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டரசை அமைத்துக் கொண்டன. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதே இக்கூட்டமைப்புக்கு முக்கியத் தூண்டுகோலாக அமைந்தது எனக் கூறப்படுகிறது.
ஹவ்திகள் ஜனாதிபதி ஹாதி மீதான நம்பிக்கையை இழந்ததனாலேயே இப் போதைய  நிலைமை உருவானது. அன்சாருல்லாஹ் (அல்லாஹ்வின் உதவியாளர் கள்) என்றழைக்கப்படும் ஹவ்திகள், சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தலை நகர் சனாவைக் கைப்பற்றி, ஹவ்திகளுடனும் ஏனைய கோத்திரங்களுடனும் அதிகா ரத்தை பகிர்ந்து கொள்ள ஹாதியைக் கட்டாயப்படுத்தினர். ஹாதி அதற்கு உடன் பட்டாலும், யாருமறியாமல் தந்திரமாக சவூதி மற்றும் அமெரிக்காவின் உதவியுடன், ஹவ்திகளின் புரட்சிக்கு இராணுவரீதியான பதிலடி கொடுக்கத் திட்டமிட்டார். ஹவ்தி களின் வெற்றிக்கான காரணமாக முன்னைய ஜனாதிபதி சாலெஹ்விற்கு விசுவாசமான அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இராணுவத்தின் ஆதரவையும் குறிப்பிடலாம். ஹவ்திகள், ஹாதியை கொன்றிருக்கவோ சிறையிலடைக்கவோ செய் திருக்கலாம். ஹாதியின் திட்டங்கள் பற்றிய சந்தேகங்கள் ஊர்ஜிதமான போது, ஹவ்தி தலைவர்கள் அவரை இராஜிநாமா செய்ய வைத்தனர்;. மேலும், அவர் ஏடனுக்கு செல்வதற்கும், அதன் பின்னர் சவூதி அரேபியாவுக்கு தப்பி ஓடுவதற்கும் வழிவிட்டனர்.
யெமன் அரசியல் அவதானிகளின் தகவல்களின்படி, ஹவ்தி புரட்சியானது பெரும் பான்மை யெமனியர்களால் -அதாவது, ஸைதிகளைப் போலவே ஸுன்னிகளினாலும்- ஆதரிக்கப்படுகிறது. ஹாதியுடைய் சொந்த கட்சியான யெமன் பொதுமக்கள் கொங்கிரஸ் கூட அவரைத் தலைமைப் பதவியிலிருந்து  நீக்கிவிட்டது. ஹாதி இராஜிநாமா செய்ததன் பின்னர், சென்ற ஃபெப்ரவரியில் ஹவ்திகள் இடைக்கால அரசங்கமொன்றை நிறுவினர்.


இந்த அர்சியல் நெருக்கடிக்கு, பிராந்திய அரசியல் போட்டியும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இதனாற்றான், ஹவ்தி புரட்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாக போலியான  ஒரு காரணத்தைச் சோடித்துக் கொண்டு சவூதி அரேபியா களத்தில் இறங்கியிருக்கிறது. ஏற்கனவே, சவூதி அரசு, ஈரான் இஸ்லாமியக் குடியரசை வெறுக்கிறதுளூ அதன் தென் எல்லையில் ஈரானுக்கு ஆதரவான ஒரு  நாடு நிர்மாணம் பெறுவதை கண்டு பயப்படுகின்றது. சவூதி அரேபியாவினால் அமெரிக்க உதவியுடன்  உருவாக்கப்பட்ட அல் காயிதா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய தக்ஃபீரி அமைப்புகளை எதிர்த்து சிரியாவிலும், ஈராக்கிலும்  இராணுவரீதியாக வியூகம் வகுத்து, ஈரான் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதைக் கண்டு, சவூதி;களும், அமெரிக்கர்களும் கதிகலங்கிப் போயிருக்கின்றனர். மறுபுறத்தில் ஹவ்திகள் முழு யெமனையும் தமது அதிகாரத்திற்குள் கொண்டு வருவார்களேயானால், யெமனில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் போர் ஆயுத அமைப்பு முறைகளைப் பற்றிய அதன் இரகசியங்களையும் தகவல்களையும் ஈரான் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்கா அஞ்சுகிறது. 


இதுதவிர, துறைமுக நகரான ஏடன், ஹவ்திகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டால், அவர்களினால் செங்கடலைச் சூழடைப்பு  செய்து, அதனூடாக கப்பற் போக்குவரத்தைத் தடை செய்துவிட ஏதுவாய் போய்விடும் என சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் பயப்படுகின்றன.
ஆனாலும், தற்போது அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் சவூதி அரேபியா, யெமன் மீது தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு-அழிச்சாட்டிய யுத்தம், நெருக்கடியை மென் மேலும் கிளறி விட்டு கொழுந்து விட்டெரியச் செய்ய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
விமானத்தாக்குதல்கள் போர் வெற்றியைக் கொண்டு வருவதில்லை. தரைப் படையினால்தான் அதனைச் சாதிக்க முடியும். அதற்குரிய வல்லமை சவூதி அரசிடம் இல்லை, இதனால்தான் அது பாகிஸ்தானின் தரைப்படையை களத்தில் இறக்க முஸ்தீபு செய்கிறது. ஆயினும், சவூதியிடம் உதவி பெற்றுவரும் பாகிஸ்தான் அரசோ, சவூதி மற்றும் அதன் நேசஅரபு நாடுகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது, இந்த நெருக்கடி நிலைமையிலும்  நடுநிலைமை வகிக்கின்றது. யெமன் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசியல் தீர்வு காணக் கோருவதாக அது பிரகடனஞ் செய்துள்ளது, மேலும், யெமன் நாட்டின் எல்லையைத் தாண்டி சவூதியின் தலைமையில் கூட்டணியின் தரைப்படை உள்நுழைந்தால், அவர் களை எதிர்த்து நின்று முறியடிப்பதற்காக எவ்வளவு காலமும் போராடத் தாம் தயாராயிருப்பதாக ஹவ்திகள் அறிவித்திருக்கின்றனர்.
யெமனின் வரலாற்றை ஆராய்ந்தால், அது ஆப்கானிஸ்தானைப் போன்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு புதைகுழியாக அமைந்திருப்பதைக் கண்டு கொள்ள முடிகின்றது, உதுமானியர்களும் பிரிட்டிஷாரும் யெமனில் மிகவும் கசப்பான பாடங்களைப் படித்துக் கொண்டார்கள். 1960களில் உள்நாட்டுப் போரின் போது, எகிப்து அனுப்பிய 70ஆயிரம் துருப்புகள் சுவடு தெரியாமல் போய் விட்ட துர்ப்பாக்கியத்தையும் இங்கு நினைவு கூரலாம்.


அதுமட்டுமல்ல, சவூதி தலைமையிலான இந்த யெமன் ஆக்கிரமிப்பு, சர்வதேசச் சட்டங்களுக்கும், ஐ.நா.சாஸனத்திற்கும் முரணானதாகும். அதாவது, இராஜினாமா செய்த அல்லது பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி இன்னொரு நாட்டுக்கு தப்பிச் சென்று, சர்வதேச இராணுவ உதவியைக் கோரித் தலையிடச் சொல்வதற்கான உரிமை கிடையாது.. அமெரிக்காவின்  முன்னைய  ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உடைய சண்டித்தனமான -ஐ.நா.சபையை மதிக்காத- மரபைப் பின்பற்றித்தான் சவூதி அரசு, இப்போது செயல்படுகிறது. அது தவறான முன்னுதாரணம் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
உக்ரேன் நெருக்கடியில் ரஷ்யா தலையிட்டதற்கு அமெரிக்காவும் மேற்குலகமும் எத்துணை கண்டனக் கணைகளையும் தடைகளையும் தொடுத்திருக்கின்றன என்பது எமக்குத் தெரியும். ஆயினும், சவூதியின் யெமன் ஆக்கிரமிப்பு யுத்தம் பற்றி, அவை மௌனம் சாதித்து வருவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
பயங்கரவாதிகளுக்கும் வம்பர்களுக்கும் ஆக்கிரமிப்பளர்களுக்கும் அத்துமீறுபவர் களுக்கும் அநியாயமாக அப்பாவிகளைக் கொன்று குவிப்பவர்களுக்கும், பிறநாட்டு மக்களின் உடைமைகளை சர்வநாசம் செய்பவர்களுக்கும் சாதகமாக சர்வதேசச் சமூகம் நடந்து வருவதைப் பார்த்தால், உலகம் அழியும் நாள் நெருங்கிவிட்டதோ என நினைக்க வேண்டியுள்ளது.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி, 'உலகில் அநீதியும் அக்கிரமும் அழிச் சாட்டியமும் மேலோங்கி இருக்கும் வேளை, அந்நிலைமையை மாற்றி நீதியும், நேர்மையும் செழிப்பும் மேலோங்கச் செய்வதற்காகத் தோன்றும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை'க்காக நாம் இரு கரமேந்தி பிரார்த்திப்போமாக!


--------------------------------------------------------------------------------------------------------------------------
பின்னிணைப்பு - 1
ஷைத்தானின் கொம்பு
அபதுல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்ததாக  ஸஹீஹுல் புகாரி ஹதீத் கிரந்தத்தில் பதியப்பட்டிருக்கும் நபிமொழி, நமக்கு ஃபித்னா எனும் குழப்பங்கள் எங்கிருந்து புறப்படும் என்பதை தெட்டத் தெளிவாக விளக்குகிறது.
'நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்: 'அல்லாஹ்வே! எங்களின் ஷாமை (இப்போதைய சிரியா, ஈராக் பிர்தேசங்களை உள்ளடக்கியது) எங்களுக்கு வளமும் நற்பேறும், புனிதமும் பெற்றதாக ஆக்குவாயாக!' அல்லாஹ்வே! எங்களின் யெமனை எங்களுக்கு வளமும் நற்பேறும், புனிதமும் பெற்றதாக ஆக்குவாயாக!' அப்போது சபையிலிருந்த சிலர் கேட்டனர்: 'எங்களின் நஜ்துக்காக துஆ செய்யுங்கள்'. ஆயினும், நபி(ஸல்)அவர்கள் மீண்டும் பிரார்த்தித்தார்கள்: 'அல்லாஹ்வே! எங்களின் ஷாமை எங்களுக்கு பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' அல்லாஹ்வே! எங்களின் யெமனை பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' மற்றவர்கள் திரும்பவும் கேட்டார்கள்: 'எங்களின் நஜ்த்!' மீண்டும் 'நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்: 'அல்லாஹ் வே! எங்களின் ஷாமை எங்களுக்கு பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' அல்லாஹ் வே! எங்களின் யெமனை பரக்கத் பெற்றதாக ஆக்குவாயாக!' மற்றவர்கள் மூன்றாவது தடைவையாகவும் 'எங்களின் நஜ்த்' என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;: 'அங்குதான்(நஜ்தில்) பூமி அதிர்வுகளும், குழப்பங்களும், பித்னாக்களும் இடம்பெறும், மேலும், அங்கிருந்துதான் ஷைத்தானின் கொம்பு  (ஷைத்தானிய தலைமுறை) தோற்றம் பெறும்.' (ஹதீத் இல.846 ஸஹீஹுல் புகாரி பாகம் 2 பாடம் 17)
நஜ்த் என்பது தற்போதைய சவூதி அரேபியாவிலுள்ள றியாத் மற்றும் அதன் சூழவுள்ள பிரதேசங்களாகும். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவரின்  'வஹ்ஹாபிய தீவிரவாதக் கொள்கை'யைப் பின்பற்றும் இன்றைய சவூதி அரேபியா வின் ஆட்சியாளர்கள் இங்கிருந்துதான் தோன்றியுள்ளனர். மேலும், ஹதீதில் 'ஷைத்தானின் கொம்பு வெளிப்படும்' என்ற சொற்றொடரே பயன்படுத்தப் பட்டிருந்தாலும், ஹதீஸ் கலை அறிஞர்கள் அது 'ஷைத்தானின் சந்ததி'யையே குறிப்பிடுகின்றது என விளக்கியுள்ளனர்.
இறைவனுக்கு உருவம் உண்டு எனவும், தமது தீவிரவாத-குறுகிய கண்ணோட் டத்துடனான கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே முஸ்லிம்கள் - ஏனையோர் காஃபிர்கள் எனவும் அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் எனவும், தக்ஃபீரி சிந்தனையோடு செயல்படும் நஜ்திய வஹ்ஹாபி கொலைகாரர்களின் பொய்ப் பிரச்சாரத்தினால் ஏமாறாத முஸ்லிம்கள், இன்று முஸ்லிம் உலகில் பித்னா எங்கிருந்து  தொடங்குகிறது என்பதையும், அவர்களுக்குப் பக்கபலமாக  இருக்கும் கொடூரமான இஸ்லாம்-முஸ்லிம் விரோதிகளையும் இனங்கண்டு கொள்வார்கள்ளூ மேலும், தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சமூகத்தையும் இந்த கோடரிக்காம்புகளின்  கோரப்பிடியில் அகப்படாமல் பாதுகாத்துக் கொள்வார்கள். அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக!


--------------------------------------------------------------------------------------------------------------------------
பின்னிணைப்பு - 2

யெமன் மீதான சவூதியின் ஆக்கிரமிப்பு போர் பற்றி நடுநிலை யான அரசியல் விமர்சகர்களின் கூற்றுக்கள்
பேராசிரியர் பெர்னாட் ஹய்கல் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அண்டை கிழக்கத்திய  கற்கைத்துறை): 'யெமனிலுள்ள பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பது அல்லது குறைந்தபட்சம் எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி, அவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவில்லை என நான் நினைக்கிறேன்........ யெமனிலிருந்தும், அங்கிருந்து வெளிக்கிளம்பும்  வன்முறைகளிலிருந்தும், சவூதிகள் எவ்வாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை.'
பத்திரிகையாளர் ரொபெர்ட் ஃபிஸ்க் (தி இண்டிபெண்டன் யூ.கே): 'சவூதிகள் பாக்கிஸ்தானியர்களிடம் அவர்களின் மிகப்பெரிய இராணுவத்தின் ஒரு பகுதியை, இந்த கொதித்து நிற்கும் கொப்பரைக்குள் அனுப்பக் கோருகின்றனர். அது நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதன்றுளூ மாறாக எண்ணெய்க்குள் நெருப்பை அள்ளிப் போடுவது போன்றதாகும்.... ஈரானின் துணை வெளிநாட்டமைச்சர், சவூதியின் யெமன் மீதான தாக்குதலை, 'போர்த்திறஞ் சார்ந்த ஒரு தவறு' எனக் கூறியுள்ளார், அதன் அர்த்தம்  என்னவென்றால், யெமனில் யுத்தமொன்றைத் துவங்குவது சவூதிகளுக்கு இலகுவாக இருந்திருக்கலாம்ளூ ஆனால் அதனை முடிவுக்கு கொண்டுவருவதை அவர்கள்  சாதிக்கமாட்டார்கள் ...,.......... உண்மையில் சவூதி அரேபியா ஒரு படுபாதாளத்தில்தான் பாய்ந்திருக்கிறது. யெமன் மீதான  அதன் விமானத் தாக்குதல்கள், சவூதி முடியாட்சிக்கும், ஏன் முழு மத்திய கிழக்கிற்குமே, வரலாற்று ரீதியான, நிகழச்சாத்தியமான அழிவார்ந்த ஓர் இடர் எனச் சொல்லலாம்.'
'அரபு நாடுகளுள் ஓர் ஏழ்மையான நாட்டில், இந்த வழக்கம் தவிர்ந்த, வரம்பு மீறிய யுத்தத்தை நடாத்துவதற்கு யார் முடிவு செய்தனர்;? தங்களின் மன்னர் நாட்டு விவகாரங்களில் முடிவுகள் எடுக்கத் திறமையற்றவர் என அரபுலகில்  பரவலாக  வதந்திகள் அடிபடும் நிலையிலுள்ள சவூதி ஆளும் வர்க்கத்தினரா? அல்லது தங்களின் சொந்தப் பாதுகாப்பு படைகளே முடியாட்சிக்கு விசுவாசமாயிருக்க மாட்டாது எனப் பயப்படும், சவூதி இராணுவத்தின் உயர்மட்ட இளவரசர்களா?'
அரசியல் விமர்சகர் ரொட்னி ஷேக்ஸ்ஃபியர் (லண்டன்): 'இந்த இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிகையானதுஆல சவூத் குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்திருக்க மேற்கொண்டிருக்கும், மிகவும் தீமையான, மிருகத்தனமான செயலா கும்...... சஊத் குடும்பம் சவூதி அரேபியாவில்  சர்வாதிகரமான  ஆட்சியொன்றை ஸ்தாபித்திருப்பதால், அது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வரையறையற்ற முழுமையான எல்லா முயற்சிகளையும் செய்யும்....சவூதி அரேபியா, யெமனுடனான யுத்தத்தில் அமெரிக்காவுடன் பங்காளியாக இணைந்துள்ளது. இந்தத் தாக்குதல் முதன்மையாக ஜனநாயகத்தை நசுக்குவதற்காகத்தான் தொடுக்கப்பட்டுள்ளது .......சவூதிகளுக்கு தனது சொந்த மக்களின் மத்தியிலேயே உண்மையான ஆதரவில்லை. இறுதியில் இந்த ஆட்சி மண்ணைக் கவ்வுமளூ;; உலகம் அவர்களைத் துடைத்தெறிந்து விடும்.'
மனித உரிமைகள் செயல் தீரர் அஜாமா பராக்கா (கொலம்பியா): 'சவூதி அரேபியாவை இராணுவ ரீதியாக யெமனில் தலையிடுவதற்கு அனுமதிக்கும் சட்டமீறிய தன்மையை, சர்வதேச சமூகம் கண்டும் வாளாவிருப்பது ஒரு கொடுமையான நடைமுறையாகும், அமெரிக்கா சவூதிக்கு ஆயுதங்களையும், சாதனங்களையும் வழங்குகிறது என்பதால், சவூதி அரேபியாவின் தலைமை யினாலான இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்காவின் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.'
கெலன் ஃபோர்ட் ( பிளக் அஜெண்டா றிபோர்டின் நிர்வாக ஆசிரியர், அமெரிக்கா): 'இன்று நேசநாடுகளின் கூட்டணிக்கு சவூதி அரேபியா தலைமை தாங்கி அமெரிக்காவின் பங்கையே நிறைவேற்றி வருகிறது. இதே பங்கைத்தான் இதற்கு முன்பு அமெரிக்கா உலகின் அந்த பிரதேசத்தில் கடந்த பல தசாப்தங்களாகச் செய்து வந்தது. இப்போது ஜனாதிபதி ஒபாமா, பின்னாலிருந்து இயக்குவிக்கும், குறைந்த வடிவத்தை உலகிற்கு காட்ட விரும்புகிறார். ஆனாலும், பெருமளவிலான துருப்புகளையோ அல்லது போர் ஆயுதங்களையோ சுமக்கும் சக்தியற்ற பல நாடு களை ஈடுபடுத்தி, மிகப் பெரும் நடவடிக்கையொன்றை எடுப்பதென்பது இலேசான தன்றுளூ அவற்றுக்கு மீள் விநியோகம் செய்யக் கூடிய ஏகாதிபத்திய இராணுவச் சக்தியான அமெரிக்கா பின்னால்  இருப்பதுதான்..'
மத்திய கிழக்கு விவகார நிபுணர் ஜேம்ஸ் பெட்ராஸ் (நிவ்யோர்க், அமெரிக்கா): 'இந்த யுத்தம், அதிக விலை கொடுக்க வேண்டியதொன்றாகும். குறிப்பாக சவூதி கள் தமது தரைப்படைகளை யெமனிற்குள் அனுப்பினால், பெருத்த நஷ்டத்தை அடைய நேரிடும். சவூதி அரேபியா, இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமான நாடா கும். அது நிறைய ஆயுதங்களை கொண்டிருந்த போதிலும், பெருமளவிலான மக்கள் ஆதரவு அதற்கில்லாததால், ஒரு நீடித்த யுத்தத்திற்கு தாக்குப் பிடிக்க அதனால் முடியாமற் போகும். யெமன் மக்களோ, வெளிநாட்டு  ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கூலிப்பட்டாளங்களுக்கும் எதிராக ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இந்த நாடு(யெமன்) சவூதி முடியாட்சிக்கு. புதைகுழியாக மாறிப் போகும் வாய்ப்புள்ளது.'
மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான விமர்சகர் டேனி மக்கி (லண்டன், இங்கிலாந்து): 'சவூதி அரசாட்சி இந்த பிரதேசத்திலுள்ள அரசாங்கங்களை கவிழ்ப்பதற்காக, மத்திய கிழக்கில் இயங்கிவரும்  பல தீவிரவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. யெமனின் பாதியை அல்-காயிதா கைப்பற்றுவதற்கும் சவூதிதான் வழியமைத்துக் கொடுத்தது. சவூதி அரேபியா யெமனில் அல்-காயிதாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. யெமனில் ஹவ்தி இயக்கத்தின் மீது தாக்குதல் நடாத்துகின்றோம் என்ற பெயரில், அது பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் தாக்கி அழித்து வருகிறது. இந்த விமானத் தாக்குதல்களின் மூலம் யெமன் மீது தான் பலமான முறையில்  செயல்பட்டு வருவதாக ஒரு செய்தியை உலகத்திற்கு அனுப்புவதாக சவூதி அரேபியா நினைக்கிறது. ஆனால், உள்ளியல்பைப் பார்க்கப் போனால், அது அமைதியின்மையை அதிகமதிகம் உருவாக்கி வருகிறது. அது மிகக் கூடிய சீக்கிரத்தில், சவூதி அரசாட்சி மீது திரும்பித் தாக்கும்.'
ஷலோகா பியானி (உள்வாரியாக புலம் பெயர்ந்த அகதிகளுக்கான  ஐ.நா.வின் மனித உரிமைகள் விசேஷத் தொடர்பாளர்): 'சவூதிக் குண்டு  வீச்சுகளிலிருந்து சிவிலியன்கள் தப்பியோடி வருவதால், பெருமளவிலான இடம்பெயர்வும் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது, நிலைமையை சமாளிக்க சர்வதேச சமூகம் தயாராக வேண்டும். உடனடியாக நெ


ருக்கடி தீர்க்கப்படாவிட்டால், நடக்கும் யுத்தமும், விமானத்தாக்குதல்களும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யலாம். சர்வதேச சமூகம் இராஜதந்திர ரீதியான தீர்வொன்றைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வது அத்தியாவசியமாகும். ஏனென்றால், கள நிலவரம் அத்துணை பயங்கரமானதாகும். அவசரமாக மனிதாபிமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட வேண்டும். சென்ற மார்ச் 30ம் திகதி வடயெமனிலுள்ள அகதி முகாம் மீது சவூதி விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியிருப்பது, ஏற்கனவே தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் சிவிலியன்கள் மீதான பாரதூரமான்  அத்துமீறல் சம்பவமாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.'


No comments:

Post a Comment