by
- படைப்பல ஆற்றலை பரீட்சிக்கும் அமெரிக்காவும் ஈரானும்
- எரிபொருள் விநியோகம் பற்றிய கரிசனையில் உலக நாடுகள்
ஏதோவொரு மூலையில் போர் மேகங்கள் சூழுமாயின், உலகம் முழுவதும் அச்சம் ஏற்படுவது சமகால அரசியல், பொருளாதார உலகின் துரதிருஷ்டம் எனலாம்.
இன்று ஓமானையும், ஈரானையும் அண்டிய ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக சூழும் போர் மேகங்களால், உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் முடங்கி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலகின் பல பாகங்களுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் எண்ணெய்த் தாங்கிகள் கடந்து செல்லும் கடற்பரப்பு. அங்கு தாங்கிகள் தாக்கப்படுவதும், ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் வழமையான விடயமாக மாறியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வல்லரசு நாடுகளின் இராணுவ ஆற்றல்களை சோதிக்கும் பலப்பரீட்சைக் களமாக மாறியது, இன்று நேற்றல்ல. அதன் வரலாறு ஈரானிய, ஈராக்கிய யுத்தம் வரை நீள்கிறது.
கடந்த மே மாதம் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகின. ஜூன் மாதம் இரு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, பிரச்சனைகள் தீவிரம் பெற்றிருந்தன.
இன்று தமது போர்க்கப்பலை ஈரான் தடுத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது. அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரானும், ஈரானின் உளவு விமானத்தை அமெரிக்காவும் சுட்டுவீழ்த்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையையும், ஈரானிய வான்பரப்பையும் தாண்டி, ஊடக பிரசார யுத்தமாகப் பரிணமித்துள்ள நெருக்கடி. இதன் ஆழத்தில் மறைந்துள்ள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு கடந்த காலம் பற்றிய புரிந்துணர்வு அவசியம்.
உன் எதிரியிடம் தோல்வி கண்டாயா, எதிரியைக் குற்றவாளியாக சித்தரித்து விடு என்ற அரசியல் கோட்பாட்டை ஹேர்முஸ் நீரிணைப் பிரச்சனையில் பொருத்திப் பார்க்க முடியும்;. இது ஈரான் – ஈராக் போர்க் காலத்தில் இருந்து தொடரும் கதை.
1980களில் இரு நாடுகளும் கடும்போரில் ஈடுபட்டிருந்த சமயம், ஈரானின் கை மேலோங்கியிருந்தது. இதன்போது, ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களைத் தாக்குவதைத் தவிர, ஈராக்கிற்கு வேறு வழியிருக்கவில்லை.
ஏவுகணைகள் மூலம் ஈரானிய கப்பல்களை ஈராக் தாக்கிய சமயத்தில், ஈரான் பதிலடி கொடுத்தது. இந்த யுத்தத்தில் அயல்நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் தப்பவில்லை. அயல்நாடுகளை பிரச்சனைக்குள் ஈர்ப்பதே ஈராக்கின் தேவையாக இருந்தது.
ஹோர்முஸ் நீரிணை போர்க்களமாக மாறியதால், அங்கு பயணிக்கும் எரிபொருள் தாங்கிக் கப்பல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கரிசனை எழுந்தது. இதனைக் காரணம் காட்டி, அமெரிக்கா வளைகுடா கடலுக்கு போர்க் கப்பல்களை அனுப்பியது.
1987ஆம் ஆண்டு மே மாதம். அமெரிக்காவிற்கு சொந்தமான USS Stark என்ற போர்க்கப்பல் தாக்குதலுக்கு இலக்காகியது. இந்தத் தாக்குதல் சூட்சுமமானது. இதனை நடத்தியது ஈரான் அல்ல. ஈராக் தான். ஈரான் மீது பழியைப் போடுவது ஈராக்கின் நோக்கம்.
ஈரான் மீது பழி விழுந்ததோ இல்லையோ, தமது கப்பல் தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி, அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க் கப்பல்கள் அனுப்பியது. அங்கு படைகள் குவிக்கப்பட்டன. ஈரானிய – அமெரிக்க முறுகல் நிலை தீவிரம் பெற்றது.
ஒரு கட்டத்தில், மேற்குலக சக்திகள் அமெரிக்காவிற்கு வலுவான முறையில் துணை நிற்க, படைவலுச் சமநிலை மாற்றம் கண்டது. தனித்து விடப்பட்ட ஈரான் பின்வாங்கியது. இதன் காரணமாக, தாங்கிகளின் யுத்தம் தவிர்க்கப்பட்டது.
அன்று ஈராக் செய்ததை இன்று அமெரிக்கா செய்கிறது. ஹோர்முஸ் கடலில் நிகழும் தாங்கிகளின் சண்டையில் ஈரானை வில்லனாக சித்தரித்து, அதன்மூலம் அரசியல் இலாபம் பெறுவது அமெரிக்காவின் நோக்கம்.
இதற்குரிய காரணம் வேறொன்றும் அல்ல. உலகின் பலம்பொருந்திய நாடுகள் ஒன்றுகூடி உருவாக்கிய உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகியதால் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப டொனல்ட் ட்ரம்ப் எண்ணுகிறார்.
இந்த உடன்படிக்கை ஈரானின் அணுசக்தி ஆற்றலுடன் தொடர்புடையதாகும். இந்நாடு அணுவாயுதங்களை உருவாக்குகிறது என்று டொனல்ட் ட்ரம்ப் பூச்சாண்டி காட்டியதால், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஆறு நாடுகள் உடன்படிககையை எட்டியிருந்தன.
இதில் அமெரிக்கா, ஈரான் தவிர, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மன் ஆகிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கை கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இதன் பிரகாரம், ஈரான் யுரேனிய செறிவாக்கலை மட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பதிலாக, உலக நாடுகள் ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளைத் தளர்த்த வேண்டும் என்பது உடன்படிக்கையின் பிரதான ஏற்பாடு.
அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அளவிற்கு அல்லாமல், நாட்டுக்குத் தேவையான மின்வலுவை உற்பத்தி செய்யும் அளவிற்கு மாத்திரம் யுரேனியத்தை செறிவாக்க ஈரான் இணங்கியது. அத்துடன், இணக்கப்பாட்டை மதித்து நடந்தது.
பராக் ஒபாமா கஷ்டப்பட்டு உருவாக்கிய உடன்படிக்கையில் இருந்து டொனல்ட் ட்ரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். இந்த உடன்படிக்கை மிகவும் மோசமானது என்பதைத் தவிர வேறொரு விளக்கத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை.
டொனல்ட் ட்ரம்பின் தீர்மானத்தை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நட்பு நாடுகள் வலுவாக ஆட்சேபித்தன. உலக நாடுகள் கண்டித்தன. இது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் உரிய பதிலை அளிக்க முடியவில்லை.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்தது. உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதலான யுரேனியத்தை செறிவாக்கியதாக ஈரானிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட ராஜதந்திர தோல்வி.
இன்று ஹோர்முஸ் நீரிணையில் பதற்றநிலையை ஏற்படுத்துவதன் மூலம் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் முடக்கப்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கி, இதற்கு ஈரான் மீது பழிபோடுவது தான் அமெரிக்காவின் ராஜதந்திரம்.
இந்த மூலோபாயம் பிரச்சனைக்குரியது. அன்று அமெரிக்க போர்க் கப்பலை ஈராக் தாக்கியபோது, ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் அவ்வளவு படைப்பல ஆற்றல்கள் இருக்கவில்லை.
ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கையில் நிலைமை அபாயகரமானதாக உள்ளது. இரு தரப்புக்களும் படைப்பல ஆற்றல்களை வலுப்படுத்தியுள்ளன. கண்ணிவெடிகளையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் பயன்படுத்த முடியும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இது தவிர, இந்த நெருக்கடி கடலைத் தாண்டி ஆகாயம் நோக்கி விஸ்தாரம் பெற்றிருப்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளும் கூறுவதை அவதானிக்க முடியும்.
ஹோர்முஸ் நீரிணையில் எரிபொருள் தாங்கிக் கப்பல்களின் பயணத்திற்கு ஆபத்து என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என்றால், அந்த நோக்கம் நிறைவேறி வருவதை கள நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இங்கு பிரிட்டனுக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. ஏனைய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்குகிறது.
இந்தப் பிரச்சனைக்குள் பிரிட்டனும் ஈர்க்கப்பட்டுள்ளது. கிப்ரல்டார் நீரிணையில் ஈரானுக்கு சொந்தமான கப்பலொன்றை வழிமறித்துத் தடுத்து வைத்துள்ளதாக இம்மாத முற்பகுதியில் பிரிட்டன் அறிவித்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் என்ற தாங்கிக் கப்பலை கையகப்படுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், கப்பலுக்கு நேர்ந்த கதி தெளிவாகத் தெரியவில்லை.
இருந்தபோதிலும், தனது முயற்சியில் இருந்து ஈரான் பின்வாங்க வேண்டும் என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை நோக்கி மூன்றாவது போர்க் கப்பலையும் அனுப்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.
பிரச்சனையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஊடகங்கள் வாயிலாக வார்த்தைப் போரை முன்னெடுத்துச் சென்றபோதிலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய தெளிவான முயற்சிகள் எதுவும் தெரிவதாக இல்லை.
இருந்தாலும், இந்த வார்த்தைப் போர் தாங்கிகளின் யுத்தமாக பரிணமிக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருக்கிறது. ஈரானை ஓரங்கட்ட வேண்டுமென டொனல்ட் ட்ரம்ப் நினைத்தாலும், ஹோர்முஸ் நீரிணை போர்க்களமாவதை சர்வதேசம் விரும்பாது.
கடந்த காலத்தில், பெரும் கூட்டணி அமைத்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகளைத் திசை திருப்பி விடுவதில் அமெரிக்கா வெற்றி கண்டதென்னவோ உண்மையே. இன்று அதனை முற்றுமுழுதாக சாத்தியப்படுத்துவதில் ட்ரம்ப்பிற்கு தோல்வியே.
இதற்கு காரணங்கள். இந்த மனிதர் கூட்டாளி நாடுகளை சரியாக மதிப்பதில்லை என்பதும் சர்வதேச சமூகத்தின் விருப்பத்திற்கு புறம்பாக ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அவர் விலகியதும் முதன்மைக் காரணங்கள்.
இது தவிர, தற்போதைய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்பதை நேட்டோ அறியும். இதன்மூலம், அமெரிக்காவிற்கு அன்றி ஏனைய நாடுகளுக்கு நஷ்டம் என்பதும் நேட்டோவிற்குத் தெரியும்.
எனவே, ஹோர்முஸ் நீரிணையில் போர் மேகங்கள் சூழ்வது போன்ற தோற்றம் தெரிந்தாலும், போரின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புக்களும் அறிந்தே வைத்திருக்கின்றன.
இத்தகைய பின்புலத்தில், போர் நிகழ்வதற்குரிய சகல வாய்ப்புக்களும் உள்ளபோதிலும், நிகழும் என்று நிச்சயமாகக் கூற முடியாதொரு நிலைமையே இருக்கிறது எனலாம்.
(2019ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரையின் இணைய வடிவம்)