Friday, November 2, 2012

சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!



 - செல்வம்.

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறுகாலனியாக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சிரியா குறிவைக்கப்பட்டுள்ளது. வடக்கே துருக்கியையும், கிழக்கே ஈராக்கையும், மேற்கே இஸ்ரேல் மற்றும் லெபனானையும் எல்லைகளாகக் கொண்ட சிரியா, மேற்காசியாவின் தொன்மையான நாகரிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 1960களில் சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டு, ஹாபிஸ் அல் அஸாத் சிரியாவின் அதிபரானார். அவர் இறந்த பின் அவரது மகனான பஷார் அல் அஸாத் சிரியாவின் அதிபராக முடிசூட்டப்பட்டார்.
பாத் கட்சியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவசரநிலை பாசிச காட்டாட்சிதான் நடந்து வருகிறது. பெயரளவிலான முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உரிமைகள்கூட அந்நாட்டு மக்களுக்கு பாத் கட்சி ஆட்சியின் கீழ் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். அதேசமயம், பாத் கட்சியின் ஆட்சியை எதிர்க்கும் எதிர்த்தரப்பு ஒன்றும் சொக்கத் தங்கம் கிடையாது. மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியா, இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெறும் துருக்கி, மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சி, ஜிஹாதிகள் உள்ளிட்ட ஒரு கும்பல்தான் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் நிறைந்த கும்பல்தான் சிரியாவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சியைத் தூக்கியெறிந்து, அங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்கும் பொம்மையாட்சியொன்றை நிறுவ வேண்டும் என்பதைத் தாண்டி, இக்கும்பலுக்கு வேறு நோக்கமும் கிடையாது.
சிரியாவில் பாத் கட்சியின் தலைமையில் உள்ள அரசு, ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்தே அந்நாட்டினை ஆதரித்து வருவதோடு, ஈரானுடன் நெருக்கமான அரசியல், இராணுவ உறவுகளைப் பேணி வருகிறது. இன்னொருபுறம், இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிக் குழுவையும் பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வரும் ஹமாஸ் குழுவையும் ஆதரித்து வருகிறது. சிரியாவின் பாரம்பரியப் பகுதியான கோலான் மலைக் குன்றின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பதால், இஸ்ரேலுடன் சமாதானமாகச் செல்லுவதற்கும் அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.
இந்தக் காரணங்களால்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிரியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றன. மேலும், மேற்காசியாவில் ஈரானின் செல்வாக்கை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதை முதல்படியாகக் கருதுகின்றன. சிரியாவும் ஈரானும் வீழ்ந்தால், எண்ணெய் வளம் நிறைந்த மேற்காசியா தொடங்கி மத்திய ஆசியா வரை தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, அப்பகுதியிலிருந்து ரஷ்யா சீனாவின் செல்வாக்கையும் அப்புறப்படுத்திவிடலாம் என்பதுதான் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.
அமெரிக்கா, சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பல திரைமறைவு வேலைகளைச் செய்துவருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா  தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்தத் தொடங்கிய சமயத்திலேயே, அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் சிரியாவைத் தீய நாடுகளுள் ஒன்றாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் இலக்குகளுள் ஒன்றாக வைத்தார். ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தி வந்த சமயத்தில் நேடோ படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் வெஸ்லி கிளார்க், 'ஈராக் போர் முடிந்த பிறகு அமெரிக்கா ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் ஏழு நாடுகளுள் சிரியாவும் ஒன்று' எனக் குறிப்பிட்டார். '2009ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சிரியாவின் எதிர்தரப்பிற்கு உளவு பார்க்கும் தொலைதொடர்புச் சாதனங்களைக் கொடுத்ததை' விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வீசுவதாகச் சொல்லப்படும் 'அரபு வசந்தம்' அமெரிக்காவிற்கு சிரியாவில் நேரடியாகத் தலையீடு செய்யும் வாய்ப்பை வழங்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிரியாவின் டேரா பகுதியில் அதிபர் பஷாருக்கு எதிராக ஒரு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தவுடனேயே, சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற ஜிஹாதிகள், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து தாக்குதலைத் தொடங்கினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆயுதந்தாங்கிய எதிர்த்தரப்பு நடத்தும் தாக்குதல்கள் சிரியாவில் வசிக்கும் சிறுபான்மை மத, இன பிரிவினருக்கு எதிரான வன்முறையாகயும், அரசின் நிலைகளைத் தாக்கி விட்டு ஓடும் பயங்கரவாத நடவடிக்கையாகவும்தான் இருந்து வருகின்றன.
சிரிய அதிபரை எதிர்த்து இன்று ஆயுதத் தாக்குதல்களை நடத்தி வரும் கூட்டணியில் உள்ள குழுக்களிலேயே முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிதான் ஓரளவு பெரியதும் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும். இது, சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தின் ஆதரவைப்  பெற்றுள்ள, அடிப்படைவாத அமைப்பாகும். இந்தக் கட்சியையும், அஸாத்துடன் நடந்த பதவி அதிகாரத்திற்கான போட்டியில் தோற்று நாட்டைவிட்டு ஓடிப்போய் துருக்கியிலும், மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் ஒன்றிணைத்துதான் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் 'சிரியா தேசிய கவுன்சில்' என்ற பெயரில் ஒரு கதம்பக் கூட்டணியையும், 'சுதந்திர சிரிய இராணுவ'த்தையும் அமைத்துள்ளன.
அரபு வசந்தம் பற்றிய நூலொன்றை எழுதிவரும் மும்பையைச் சேர்ந்த அலியா அல்லானா என்ற பத்திரிகையாளர், 'சிரியா தேசிய கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கும் சிரிய மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவர்கள் அனைவரும் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் உட்கார்ந்துகொண்டு, தமது எஜமானர்கள் வீசியெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்வதாக' அம்பலப்படுத்துகிறார் (தி ஹிந்து, 24.07.2012, பக்.9). மேலும், சுதந்திர சிரிய இராணுவம் அமெரிக்காவுக்கு நெருக்கமான அல் காய்தா பிரிவைச் சேர்ந்த ஜிஹாதிகளையும் லிபியாவிலிருந்து கொண்டுவரப்படும் கூலிப்படையினரையும் கொண்டு கட்டப்பட்டிருப்பதை இங்கிலாந்தைச் சேர்ந்த டைம்ஸ் இதழின் நிருபர் ஜாஃப்ரி கேட்டல்மேனும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகளும் அம்பலப்படுத்தியுள்ளன.
சிரியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அலெப்போவில் மட்டும் ஏறத்தாழ 12,000 சுதந்திர சிரிய இராணுவத்தினர் ஊடுருவியிருப்பதாகவும், இவர்களுள் சரிபாதிப்பேர் ஆப்கான், செசன்யா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஜிஹாதிகள் எனக் குறிப்பிடுகிறார், பிரேம் சங்கர் ஜா என்ற இந்தியப் பத்திரிகையாளர். (தி ஹிந்து, ஆக்.7, பக்.8)
அமெரிக்க, இஸ்ரேலின் கூலிப்படையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சுதந்திர சிரிய இராணுவம், 'ஷியா பிரிவு அலாவி முஸ்லீம்களைக் கல்லறைக்கும் கிறித்தவர்களை பெய்ரூட்டுக்கும் அனுப்புவோம்' என வெளிப்படையாகவே மதவெறிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இக்கூலிப்பட்டாளத்திற்கான பயிற்சியினை துருக்கி வழங்குகிறது. இதற்குத் தேவைப்படும் நிதியை சவூதி அரேபியாவும் கத்தாரும் வழங்குகின்றன. இவர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களை அமெரிக்கா கொடுக்கிறது. இக்கூலிப்பட்டாளம் சிரியாவினுள் நடத்திவரும் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதமாகத்தான் கருதமுடியுமே தவிர, அதனை ஜனநாயக உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டமாகவோ, மக்கள் இயக்கமாகவோ கருதமுடியாது.
•••
மார்ச் 2011க்குப் பின் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அஸாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகப் பல்வேறு சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதையடுத்து, அதிபர் அஸாத், 'அவரச நிலைச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது, எதிர்க்கட்சிகளின் மீதான தடைகளை விலக்கிக் கொள்வது, புதிய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கி, அதனைப் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடுவது, புதிய அதிபர் தேர்தலை 2014 இல் நடத்துவது' உள்ளிட்டுப் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்ததோடு, அவற்றைச் செயல்படுத்தவும் முனைந்தார். மேலும், .நா.வின் முன்னாள் தலைவர் கோஃபி அன்னான் அளித்த அமைதி திட்டத்தின்படி 300 .நா. பார்வையாளர்கள் நாட்டு நடப்புகளைக் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டனர். அரபு லீக் கூட்டமைப்பு கோரியபடி, சிறிய நகரங்களிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டது.
இந்த அரசியல் சீர்திருத்தங்களும் சலுகைகளும், 'தான் ஆட்சியில் தொடருவதற்கு அமெரிக்காவின் சம்மதத்தைப் பெற்றுத் தரும்' என எதிர்பார்த்தார், பஷார் அல் அஸாத். ஆனால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆட்சி மாற்றத்திற்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன. அது மட்டுமின்றி, கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் சதிகளிலும், சிரிய அதிபருக்குப் பல்வேறு முனைகளில் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கின.
அரபு நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும், முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்தும் சிரியா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது. அரபு நாடுகளின் கூட்டமைப்பும் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு சிரியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என .நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று முறை தீர்மானங்களைக் கொண்டு வந்தன. அதிபர் பஷார் அல் அஸாத்தை ஆதரிக்கும் சீனாவும், ரஷ்யாவும் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானங்களைத் தோற்கடித்தன. மூன்றாவது முறையாகவும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டவுடனேயே, 'நாங்கள் .நா.விற்கு அப்பாற்பட்டுச் செயல்படுவோம்' என அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய யூனியனும், துருக்கியும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை சிரியா மீது விதித்தன.
இந்த அரசியல் நெருக்கடிகள் ஒருபுறமிருக்க, 'சுதந்திர சிரிய இராணுவத்தினருக்கு அமெரிக்காவின் உளவு அமைப்புகள் பயிற்சி அளிக்கும்' என அமெரிக்க அரசு வெளிப்படையான உத்தரவை வெளியிட்டது. சிரியாவின் பிரதமர் உள்ளிட்டு, பல இராணுவ உயர் அதிகாரிகள் விலைக்கு வாங்கப்பட்டு, சிரிய அரசிலும் இராணுவத்திலும் பிளவை உண்டாக்கும் சதிகள் அரங்கேற்றப்பட்டன. ஹோம்ஸ் மற்றம் ஹெளலா நகரங்களில் பொதுமக்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்தது எந்தத்தரப்பு என்பதை உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மேற்குலக ஊடகங்கள் அஸாத் அரசின் மீது பழியைப் போட்டு, இந்த மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. எனினும் அந்நகரங்களில் இப்படுகொலையை நடத்தியது சுதந்திர சிரிய இராணுவத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பதும், கோஃபி அன்னானின் அமைதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன்தான் ஹெளலா படுகொலை நடத்தப்பட்டது என்பதும் பின்னர் அம்பலமானது.
சுதந்திர சிரிய இராணுவத்துக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்கள் மற்றும் ஜிஹாதிகள் நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக, இதுவரை ஏறத்தாழ 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இறந்தவர்களுள் கணிசமான பேர் சிறுபான்மையினரான அலாவி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தானென்றும் கூறப்படுகிறது. சுதந்திர சிரிய இராணுவக் கும்பல் நடத்திய தாக்குதல் காரணமாக ஹோம்ஸ் நகரிலிருந்து மட்டும் 50,000 கிறித்தவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது இப்பொழுது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ, மிடன் நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. டமாஸ்கஸிலும், அலெப்போவிலும் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் அல் காய்தா அமைப்பின் ஒரு பிரிவான அல் நுஸ்ரா வெளிப்படையாகவே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியங்களுடான உறவில் இரட்டைத் தன்மை என்ற பலவீனங்கள் ஒருபுறம் இருந்தபோதும், பஷார் அல் அஸாத்தின் அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்துவருகிறது. பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சிரியாவில் பாத் கட்சியின் ஆட்சியின் கீழ் மத இன மோதல்கள் நடந்ததில்லை என அரசியல் வல்லுனர்கள்; குறிப்பிடுகிறனர்;.
சிரியாவின் மீது ஒரு நேரடியான தாக்குதலை நடத்துவதற்கு ஏற்ப இராணுவத்தை ஒதுக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடேயே ஒத்த கருத்து ஏற்படாததால், ரஷ்யாவும் சீனாவும் நேரடித் தாக்குதலை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால், பிரித்தாளும் சூழ்ச்சியினையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பஷார் அல் அஸாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட முயன்று வருகின்றன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள். சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சி வீழ்த்தப்பட்டால், அவர்கள் கூறுவதுபோல, அங்கு ஜனநாயகம் மலர்ந்துவிடப் போவதில்லை. மாறாக, மத இனரீதியாக நாடு துண்டாடப்படும். தனது மேலாதிக்க நலன்களுக்காக ஜிஹாதிகளை, முஸ்லீம் பயங்கரவாதிகளை அமெரிக்கா ஊட்டி வளர்க்கத் தயங்காது என்பதற்கு சிரியா இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது. பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.