Monday, June 4, 2018

பலஸ்தீன் விடுதலைக்கான சர்வதேச 'குத்ஸ்' தினம்








அல்லாஹ் அருள்பாலித்த பூமியும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்பட்டு இற்றைக்கு 51 வருடங்களாகின்றன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக பலஸ்தீன் மாற்றப்பட்டிருக்கின்றது.

என்றாலும் 1979 ஆம் ஆண்டில் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹும் இமாம் கொமைனி முன்னெடுத்த இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) சர்வதேச குத்ஸ் (பைத்துல் முக்கதிஸ்) தினம் முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. (அந்தவகையில் இவ்வருட குத்ஸ் தினம் வரும்  8ந் திகதி வெள்ளிக்கிழைம அனுஷ்டிக்கப்படுகிறது).

இந்த சர்வதேச தினத்தைப் பிரகடனப்படுத்திய இமாம் கொமெய்னி 'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாள்' என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும், ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.

என்றாலும் சிலர் குறிப்பிடுவது போன்று குத்ஸ் தினம் என்பது ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்று. அது இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன் மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட இத்தினத்தை அனுஷ்டிக்கின்றனர். குத்ஸ் தினம் அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றது, உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளையும் எடுத்து நோக்கினால் கூட குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விடவும் சுன்னிகளே அதிகமாகப் பங்கு கொள்கின்றனர்.

இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள், அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகள் முன்னெடுக்கப்படுவதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றே கோருகின்றனர்.

ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சியோனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல, பழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், சியோனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதேவேளை சியோனிஸவாதிகள் பல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோருகின்றனர். குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிலும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாக உள்ளனர். இதன் ஊடாக சியோனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன.

அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், சியோனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன. ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.

குத்ஸ் தினம் என்பது, சியோனிஸவாதிகளின் நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை முழுமையாக முன்னெடுத்து சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி ​ெடாலகளைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்துவதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.

வரலாறு

முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகவே திகழ்ந்து வந்தது.

சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்டத்தை ஸலாஹுத்தீன் அல்- அய்யூபி தலைமை தாங்கி முன்னெடுத்தார். அது கி.பி.1187ல் இடம்பெற்றதோடு ஜெருஸலமும், மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் அல் அக்ஸாவும் பலஸ்தீனும் சுதந்திரமானது.

என்றாலும் கி.பி.1918ல் நவீன கால பிரித்தானியரும், பிரான்ஸியரும் சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது

என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம் தான், 1947ல் சியோனிஸ இஸ்ரேலின் சட்ட விரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.

சியோனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில், அரபு ஆட்சியாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிப்பதற்கான இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தல்களளுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் சியோனிஸவாதிகளுடன் இணைந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உலக முஸ்லிம்களின் புனித தளங்களான மக்காவிலும் மதீனாவிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ, பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்பற்றியோ வாய் திறக்க முடியாதளவுக்கு தடுக்கப்பட்டுள்ளது

 ஆனால் சுமார் 39வருடங்களுக்கு முன்னர் இமாம் கொமெய்னியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் சியோனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்தும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய நிகழ்ச்சிகள், அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய சியோனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளன அதேநேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. பலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்பு அணியினர் சியோனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இத்தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து விடாமல் எரியச் செய்வது -இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.

Saturday, June 2, 2018

எழுச்சியூட்டும் இமாம் கொமெனியின் தலைமைத்துவம்

எழுச்சியூட்டும்  இமாம் கொமெனியின் தலைமைத்துவம்



ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி (ரஹ்)

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி (ரஹ்)

Imam Khomeini, 
the Great Leader and the Founder of Islamic Republic 

ஈரான் இஸ்லாமியக் குடிரசுக்கு வித்திட்ட இமாம் கொமய்னியின் 29வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு சில குறிப்புக்கள்

அயிமுகம்:

இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் றூஹுல்லாஹ் மூஸவி கொமெய்னி ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞராகவும் மர்ஜா எனப்படும் சமய ரீதியாக மற்றவர்கள் பின்பற்றக் கூடிய ஒரு மேதையாகவும் வாழ்ந்தவர். 

ஈரானில் நிலவிய பஹ்லவி ஆட்சி பீடத்தின் கடைசி ஷா மன்னராக இருந்த மெஹமட் றெஸா பஹ்லவியை ஆட்சியில் இருந்து கவிழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின் அரசியல் தலைவராகத் திகழ்ந்தவரும் இவரே ஆவார். 

இந்தப் புரட்சியைத் தொடர்ந்து இமாம் கொமெய்னி ஈரானின் பெரும் தலைவரானார். புதிய இஸ்லாமியக் குடியரசில் மிக முக்கிய நிலையில் கருதப்பட்ட இந்தப் பதவியை அவர் தனது வாழ்நாளின் கடைசி வரை வகித்தார்.

பல முஸ்லிம்களுக்கு அவர் ஒரு 'மர்ஜா'வாக (பின்பற்றக் கூடிய தலைவராக) இருந்தார். ஈரானில் அவர் பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக உத்தியோகப்பூர்வமாக இமாம் என்றே அழைக்கப்பட்டார். அரது ஆதரவாளர்கள் இந்த மரபை பின்பற்றினர். 

இமாம் கொமய்னி மிக உயர்ந்த செல்வாக்கு கொண்ட புதுமையான இஸ்லாமிய தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். இந்தத் துறையில் அவரது மிக உன்னதமான படைப்பாக நீதித்துறை கோட்பாடுகள் பற்றி அவர் எழுதிய புதிய தத்துவங்களைக் கொண்ட 'வெலாயத் ஏ பக்கிஹ்' அமைந்துள்ளது.

குடும்பமும் ஆரம்ப காலமும்:

றூஹுல்லாஹ் மூசவி, ஆயத்துல்லாஹ் செய்யித் மொஸ்தபா மூசவி மற்றும் ஹாஜியா ஹகா கானூம் ஆகியோருக்கு பிள்ளையாக ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தெற்காக சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கொமயின் என்ற இடத்தில் பிறந்தார். (இவர் 17 மே 1900 அல்லது 24 செப்டம்பர் 1902ல் பிறந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன). 

இந்தக் குடும்பம் முஹம்மத் நபி அவர்களின் வழித்தோன்றலில் வரும் செய்யித் வம்சத்தைச் சேர்ந்தது. அவரின் தந்தை வழி பாட்டனார் செய்யித் அஹமத் மூசவி. அவரின் மூன்றாவது மனைவி ஷகீனாவுக்கு 1856ல் பிறந்தவர்தான் இமாமின் தந்தை மொஸ்தபா. 

இமாம் கொமய்னியின் தாய் வழி பாட்டன் மிர்ஸா அஹமத் மெஜ்தஹேத் ஏ கொன்ஸாரி ஆவார். இவர் ஈரானின் மத்திய பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க சமயத் தலைவாகத் திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் ஷா மன்னர் பரம்பரையால் பிரிட்டிஷ் கம்பனி ஒன்றுக்கு புகையிலை உற்பத்திக்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்த புகையிலை உற்பத்திகளைப் பயன்படுத்துவதை தடை செய்து பகிரங்கமாக மார்க்கத் தீர்ப்பு 'பத்வா' அளித்தவர். இதன் விளைவாக அந்த சலுகையை இரத்துச் செய்ய வேண்டியதாயிற்று.

இமாம் கொமய்னி ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே அவரின் தந்தை கொலை செய்யப்பட்டார். அவருடைய தாயும் அத்தை ஒருவரும் தான் அவரை வளர்த்தனர். பிறகு இமாமுக்கு 15 வயதாக இருக்கும் போது ஒரே ஆண்டில் தாயும் அத்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். 

இமாம் தனது ஆறாவது வயதில் இருந்தே புனித வேத நூலான குர்ஆனை கற்கலானார். ஆரம்ப கல்வியை அவர் வீட்டிலும் உள்ளுர் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார். 18 வயது வரைக்கும் அவர் தனது மூத்த சகோதரரின் பாதுகாப்பில் இருந்தார். பிறகு எஷ்பஹான் மாநிலத்தில் உள்ள சமயக் கற்கை நிலையத்தில் அவர் மேலதிக கல்வியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவர் அராக்கில் உள்ள சமயப் பாடசாலையையே விரும்பினார். அந்தக் காலத்தில் கல்விப் புலமைக்கு மிகவும் பெயர் போன ஒரு இடமாக அது இருந்தமையே இதற்கு காரணம்.

1921ல் இமாம் அராக்கில் கல்வியைத் தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டு அராக் சமயப் பாடசாலை கொம் நகரில் உள்ள சமயக் கல்விக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. அராக் மாணவர்கள் அங்கு செல்லுமாறு கேற்கப்பட்டனர். இமாம் அவர்களும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அங்கு சென்றார். அங்கு பட்டம் பெற்ற பின்னர் அதே சமயக் கல்விக் கூடத்தில் அவர் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் (ஷரீஆ) இஸ்லாமிய நீதி நிர்வாகம்,மெய்யியல் ஆகிய பாடங்களை பல வருடங்கள் போதித்தார். இந்த விடயங்களில் அவர் பல நூல்களையும் எழுதி உள்ளார்.

கல்வித்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த காலப்பகுதியில் இமாம் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஆனால் சமயத் தலைவர்கள் தீவிர அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவர் உறுதியாகக் கொண்டிருந்தார் என்பதையே அவரது கல்விப் போதனைகள், எழுத்துக்கள் மற்றும் உரைகள் என்பன உணர்த்தி நின்றன. இதற்கு ஆதரவாக மூன்று முக்கிய காரணங்களையும் முன்வைக்கலாம். முதலில் இஸ்லாமிய கற்கைகளில் அவருக்கு இருந்த ஆர்வம் பாரம்பரியமான இஸ்லாமிய சட்ட விதிகள், நீதித்துறை மற்றும் கொள்கைகள் என்பனவற்றின் எல்லைகளைத் தாண்டி நின்றதை காண முடிந்தது. அவர் தத்துவஞானத்திலும் நெறிமுறையியலிலும் ஆகக் கூடிய அக்கறை காட்டினார். இரண்டாவதாக அவரின் கற்பித்தல் முறை சமயச் செயல்பாடுகளோடு மட்டும் மட்டுப்படாமல் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டியஅம்சங்களை வலியுறுத்துவதாகவும் காணப்பட்டது. மூன்றாவதாக ஈரானில் 1940களில் பெரும் பரவலாகவும் பகிரங்கமாகவும் பேசப்பட்ட மதச்சார்பற்ற போக்கிற்கு எதிராக குரல் கொடுத்த முதலாவது ஈரானின் சமயத் தலைவாகவும் அவர் காணப்பட்டார். அவர் தனது கருததுக்களை முன்வைத்து துறைசார் நூல்கள் பலவற்றையும் எழுதி வெளியிட்டார். அவர் கொம்மில் இருந்து டெஹ்ரானுக்கு விஜயம் செய்து அன்றைய ஈரான் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவி மடுத்தார்.

இமாம் கொமய்னி 1963ல் மர்ஜா ஆனார். அன்றைய பெரும் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹுசேன் பொருஜேர்தியின் மறைவை அடுத்து அவர் இந்த நிலையை அடைந்தார்.

ஆரம்பகால அரசியல் செயற்பாடு:

1961ல் ஆயத்துல்லாஹ் பொருஜேர்தியின் மரணமும், 1962ல் ஆயத்துல்லாஹ் அபுல் காஸெம் கஷானியின் மரணமம் ஷீஆ ஆன்மிகத் தலைமையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்த காலம் அது. இமாம் கொமய்னிக்கு தலைமைத்துவத்துக்கான கதவுகளை இது திறந்து விட்டது. தனது 60வது வயதில் இமாம் அவர்கள் மிக உன்னதமான ஒரு நிலையை அடைந்திருந்தார்கள். 1920கள் முதலே ஈரானில் பஹ்லவி மன்னரின் சமயச் சார்பற்ற மற்றும் சமயத் தலைவர்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டையே சமயப் பிரிவுத் தலைவர்கள் கொண்டிருந்தனர். 1960களில் சமயத்துக்கு எதிரான மன்னராட்சியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் உச்சத்தில் காணப்பட்டன. இது அன்றைய காலகட்டத்தில் 'வெள்ளைப் புரட்சி' என்று அழைக்கப்பட்டது.

வெள்ளைப் புரட்சிக்கு எதிர்ப்பு:

1962 முதல் தான் இமாம் கொமய்னி அரசியல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கினார். ஷாவின் ஆட்சியால் ஈரானில் பிரகடனம் செய்யப்பட்ட வெள்ளைப் புரட்சி காணிச் சீர்திருத்தம், காடுகளைத் தேசிய மயமாக்கல், அரச நிறுவனங்களை தனியார் நலன்களுக்காக விற்றல், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில் தேர்தல் மாற்றம், தொழில்துறையில் இலாபப் பகிர்வு, பாடசாலைகளில் எழுத்தறிவு இன்மைக்கு எதிரான பிரசாரம் என பல விடயங்களை உள்ளடக்கி இருந்தது. பாரம்பரிய வாதிகளால் இவற்றுள் பல விடயங்கள் ஆபத்தானவையாகவும் மேலைத்தேச மனோபாவம் கொண்டவையாகவும் நோக்கப்பட்டன. குறிப்பாக சக்தியும் சிறப்பும் மிக்க சமயக் கல்விமான்கள் (உலமாக்கள்) இதை பெரும் அச்சுறுத்தலாகக் கருதினர். இதனால் உலமாக்கள் நாடு முழவதும் அரச எதிர்ப்பு கலவரங்களுக்குத் தூபமிட்டனர். மன்னர் மொஹமட் ரெஸா ஷா பஹ்லவி தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதரவைத் திரட்டும் ஒரு மூலோபாயமாகவே வெள்ளைப் புரட்சியை அவர்கள் பார்த்தனர். ஷா தன்னை ஒரு புரட்சிகர சிந்தனைக் கொண்ட ஒருவராக் வெளிக்காட்டிக் கொள்ளவே தேசியவாதம் நவீனத்துவம் போன்ற சொற்களை ஒரு மாயையாகக் கையாண்டு வருகின்றார் என்று அவர்கள் கருதினர்.

1963ல் வெள்ளைப் புரட்சியின் ஆறு அம்ச மறுசீரமைப்புத் திட்டத்தை ஷா அறிவித்தார். தனது ஆட்சிக்கு தாராளவாத மற்றும் முன்னேற்றவாத முகப்பை அளிக்கும் வகையில் அமெரிக்க செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு பொதியாக இந்தத் திட்டங்கள் காணப்பட்டன. இமாம் கொமய்னி தனது ஏனைய அயத்துல்லாஹ் சகாக்களை கொம் நகருக்கு அழைத்து இந்தத் திட்டத்தின் தீய நோக்கங்கள் பற்றி விரிவான விளக்கமளித்து, ஷாவின் இந்த நயவஞ்சகத் திட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தனது வெள்ளைப் புரட்சித் திட்டத்துக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் மன்னர் ஷா திட்டமிட்டிருந்த சர்வஜன வாக்கெடுப்பை எதிர் கொள்ள வேண்டிய விதம் அதை தோல்லிவயுறச் செய்ய வேண்டியதன் அவசியம் என்பன பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. 

1963 ஜனவரி 22ல் மிகவும் கண்டிப்பான வார்த்தைகளைக் கொண்ட ஒரு பிரகடனத்தை இமாம் கொமய்னி வெளியிட்டார். அதில் அவர் தனது திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி இரு தினங்களில் ஷா வின் ஆயுதப் படை அணி ஒன்று கொம் நகர் நோக்கி அனுப்பப்பட்டது. அத்தோடு உலமாக்களை ஒரு தனி வர்க்கமாக வகைப்படுத்தி அவர்களைக் கண்டித்து உரை ஒன்றையும் ஷா நிகழ்த்தினார். ஆனால் இமாம் அசரவில்லை. ஷா வின் அராஜகத்துக்கு எதிரான அவரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஏனைய எட்டு சிரேஷ்ட கல்விமான்களின் கையொப்பத்தோடு ஷா வின் திட்டங்களைக் கண்டித்து விஞ்ஞாபனம் ஒன்றையும் இமாம் வெளியிட்டார். ஷா, ஈரானின் அரசியல் யாப்பை என்ன என்ன வகையில் மீறி உள்ளார் என அதில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அத்தோடு ஷா ஆட்சியின் ஊழல் பற்றிய விவரங்களும் அதில் அடங்கி இருந்தன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முழுமையாக சேவகம் புரியும் ஒரு மன்னரே ஷா என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய வருடத்தின் (1963 மார்ச் 21) பாரசீக புதுவருடமான நௌரூஸ் புத்தாண்டு நிகழ்வுகளை ஷா வின் அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்கள் கைவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

1963 ஜுன் 3ம் திகதி புனித ஆஷுரா தினத்தின் மாலை வேளையில் இமாம் நிகழ்த்திய உரையில் கொடுங்கோல் ஆட்சியாளன் யஸீத்துக்கும் ஷாவுக்கும் இடையிலான சமாந்தரங்களை அவர் மக்களுக்குத் தெளிவு படுத்தினார். ஷா தனது நிலைப்பாடுகளையும் வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் மக்களால் நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்படும் காலம் வரும் என்று உறுதியான எச்சரிக்கையையும் தனது உரையில் இமாம் விடுத்தார்.

இமாமின் பொதுவான மிக உறுதியான இந்தக் கண்டனங்களை அடுத்து மன்னர் ஷா மிக மோசமான பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் விளைவு இமாம் ஷாவின் படைகளால் கைது செய்யப்பட்டார். 1963 ஜுன் 5ல் இமாம் கொமய்னி கைது செய்யப்பட்டார். இதனால் மக்கள் திரண்டெழுந்தனர். இதனால் ஈரான் முழுவதும் பாரிய அளவிலான கலவரங்கள் வெடித்து 400க்கும் அதிகமான உயிர்களைக் காவு கொண்டது. இமாம் எட்டு மாத காலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு 1964ல் விடுதலை செய்யப்பட்டார்.

இமாமின் அரசியல் கண்ணோட்டப் பாதையில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமயத்தையும் சமய நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஈரானின் ஷீஆ உலமாக்களினால் காலாகாலமாக விடுக்கப்பட்டு வரும் வேண்டுகோள்கள் மற்றும் அறிவுரைகள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் ஈரானிய முடியாட்சியை ஒரு நவீன சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் திட்டங்களை ஷா முன்னெடுத்து வந்தார். இந்த நடைமுறைகளால் ஈரானிய மக்களின் சமய ரீதியான வாழ்வு முறை அச்சுறுத்தலுக்கு ஆளானது. அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமயத் தலைவர்கள் ஆட்சியின் எதிரிகளாகப் பார்க்கப்பட்டனர். இதன் விளைவாக சமயத் தலைவர்களை ஒன்றிணைத்த இமாம் ஈரானின் முடியாட்சிக்கு எதிரான சமய விழுமியங்களுடன் கூடிய ஒரு அரசை அந்த நாட்டில் ஸ்தாபிப்தற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

சரணாகதிக்கு எதிர்ப்பு:

அமெரிக்க இராணுவத்தினருக்கு ஈரானில் முழுமையான இராஜதந்திர விடுபாட்டு உரிமையை வழங்கும் தீர்மானத்தை ஷா அரசு மேற்கொண்டபோது 1964 நவம்பரில் இமாம் அவர்கள் அதை முழுமையாகவும் கண்டிப்பாகவும் எதிர்த்தார். இதை ஒட்டு மொத்த சரணாகதி என வர்ணித்த இமாம் மிகக் கடுமையாக அதை எதிர்த்தார். இதன் விளைவாக 1964 நவம்பரில் இமாம் மீண்டும் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அஞ்ஞாதவாச வாழ்வு:

இமாம் கொமய்னி 14 வருடங்கள் அஞ்ஞாதவாசம் இருந்தார். அதில் பெரும் பகுதியை அவர் ஈராக்கின் நஜாப் நகரில் கழித்தார். 1964 நவம்பர் 4ல் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் முதலில் துருக்கிக்கு சென்றார். அங்கு பர்ஸா நகரில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தை அவர் கழித்தார். 1965 அக்டோபரில் தான் அவர் அங்கிருந்து ஈராக்கின் நஜாப் நகரில் குடியேறினார். 1978ல் ஈராக்கின் அன்றைய உப ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுசேனால் அங்கிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படும் வரை இமாம் அங்கு தான் வாழ்ந்தார். அங்கிருந்து வெளியேறிய இமாம் பிரான்ஸின் வட மத்திய பகுதியில் உள்ள நேபள் லி சட்டோ என்ற இடத்தில் குடியேறினார்.

இமாம் கொமய்னி ஈரானின் அன்றைய அரசியல் யாப்பை முழுமையாக நிராகரித்தார். அது பெல்ஜியத்தில் இருந்து தருவிக்கப்பட்ட அந்நிய மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே ஆரம்பம் முதல் அவரின் நிலைப்பாடாக இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டபூர்வமான நிறுவனங்களை உள்ளடக்கிய, உயர் மட்ட சமயத் தலைமைத்துவ அதிகாங்களைக் கொண்டதாக, முஸ்லிம் சமூகம் ஆன்மிக ரீதியாகவும், உலகியல் பாதுகாப்பைக் கொண்டதாகவும் ஆளப்பட வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.

தன்னுடைய இந்த இஸ்லாமிய அரசு குறித்த சிந்தனைகளை உள்ளடக்கிய தொடர் விரிவுரைகளை 1970களில் அவர் நஜாப்பில் இருக்கும் போதே நிகழ்த்தி வந்தார். பின்னர் இந்த சிந்தனைகள் உள்ளடங்கிய விரிவுரைகளின் தொகுப்பு 'வெலாயத் ஏ பக்கி' எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. ஆட்சி முறை பற்றிய அவரின் மிகச் சிறந்த மிகவும் பிரபலமான கிரந்தமாக அது அமைந்தது.

ஈரானில் இமாம் கொமய்னி தலைமையிலான அதிகாரத்தின் போது இந்த முறைகள் முற்றாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டு, அதில் அவர் தெரிவித்திருந்த பாதுகாப்பாளர் அல்லது பெருந்தலைவர் என்ற பதவியையும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தனது மரணம் வரை அவரே வகித்தார்.

பிரான்ஸில் இருந்து அவர் நிகழ்த்திய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் என்பன ஷா வை மிக வன்மையாகச் சாடும் வகையில் அமைந்திருந்தன. ஷா ஒரு யூத முகவர் என்றும், அவர் ஒரு அமெரிக்கப் பாம்பு. அதன் தலை மக்களால் கல்லெறிந்து கொய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் அதில் அமைந்திருந்தன். இவை தனது இஸ்லாமிய வலையமைப்புக்குள் இருந்த எதிர்ப்பாளர்களுக்கு வெளியே பகிரப்படக் கூடாது என இமாம் விரும்பிய போதிலும் அதையும் மீறி ஈரானிய சந்தைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகக் கிடைக்கும் வகையில் இந்த உரைகள் அடங்கிய கெஸட்டுக்கள் அமைந்தன. இது மக்கள் மத்தியில் ஷாவின் ஆட்சியின் அதிகாரம் மற்றும் கௌரவம் என்பனவற்றை மேலும் தரம் தாழ்த்தியது. இதனால் ஷாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வேகமாக மங்கத் தொடங்கியதோடு இமாமை நோக்கி பல்வேறு தரப்பட்ட மக்களும் நேசக் கரம் நீட்டத் தொடங்கினர். தமது ஆன்மிகத் தலைவரின் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட உரைகளை மேலும் மேலும் கேற்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் மேலோங்கியது.

பெருந் தலைவர் இஸ்லாமியக் குடியரசுக்கு திரும்பி வரல்:

இமாமின் சிந்தனைகளால் உந்தப்பட்டு மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மன்னர் ஷா தனது பரிவாரங்களுடன் 1979 ஜனவரி 16ல் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். வெற்றிவாகையோடு ஷா எதிர்ப்பு சக்திகளின் அழைப்பை ஏற்று இமாம் கொமய்னி 1979 பெப்பரவரி 1ல் நாடு திரும்பினார். இமாமை வரவேற்க சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டதாக சில தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு வந்திருந்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர் இமாமிடம் இது பற்றி எப்படி உணருகின்றீர்கள்? என்று கேட்ட போது, சகலரும் அதிர்ச்சி அடையும் வகையில் எதுவும் இல்லை என்று இமாம் பதில் அளித்தார்.

தாயகம் திரும்பிய முதலாவது தினத்தில் மக்கள் மத்தியில்; உரை நிகழ்த்திய இமாம் ஷாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஷபூர் பக்தியாரின் அரசையும் வன்மையாகக் கண்டித்தார். இந்த அரசின் பற்களை உடைப்பேன் என்று முழங்கிய இமாம் அமையவுள்ள இஸ்லாமிய அரசின் நன்மைகள் பற்றிய வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கினார். அந்த அரசு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பிரபலமான ஒரு அரசாக இருக்கும் என்றும் கூறினார்.

புதிய அரசை ஸ்தாபிததல்:

பெப்ரவரி 11ல் இமாம் இடைக்கால அரசொன்றை பிரகடனம் செய்தார். 1979 மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அந்த இடைக்கால அரசு மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது. 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா தரப்பினருக்கும் அதில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. புதிய அரசின் வடிவமாகவும் அரசியல் யாப்பாகவும் இஸ்லாமியக் குடியரசை ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதுதான் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட கேள்வி. முடியாட்சியை நீக்கி இஸ்லாமிய குடியரசு முறையை ஆட்சி அமைப்பதாக ஏற்றுக் கொள்வதாக அந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 98 வீதமானவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து புதிய அரசியல் யாப்பின் அங்கீகாரத்துக்கான தேர்தல்களும் நடத்தப்பட்டன.  பெருந்தலைவர் பதவிக்கு அப்பால் மக்களால் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நியதியும் அதில் காணப்பட்டது. அந்த ஜனாதிபதி பதவிக்கு பாதுகாவலர் சபையின் அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே போட்டியிடவும் முடியும். 

இமாம் கொமய்னி ஆயுற்கால பெருந் தலைவரானார். அத்தோடு அவரே புரட்சியின் தலைவர் என்றும் உத்தியோகப்பூர்வமாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு இஸ்லாம் ஈரானின் புதிய அரசியல் யாப்பின் அடிநாதம் ஆனது. இஸ்லாமிய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அடிப்படை கடமையாகியது.

இமாம் தனது ஆயுள் காலத்தில் இஸ்லாமிய உலகை ஒன்றிணைப்பதற்கான பல வழிமுறைகளையும் காட்டித் தந்துள்ளார். இறைதூதர் மஹம்மது நபி பிறந்த மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் முதல் 17ம் நாள் வரையான வாரத்தை ஐக்கிய வாரமாக பிரகடனம் செய்தார். அதேபோல் புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக 'சர்வதேச குத்ஸ்' தினமாகப் பிரகடனம் செய்தார். இன்று உலகம் முழவதும் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.

பெர்லின் மதில் உடைக்கப்பட முன்பே 1988 டிசம்பரில் அப்போதைய ரஷ்ய ஜனாதிபதி மிக்கயல் கொர்பச்சேவுக்கு கம்யூனியஸம் உலகில் இருந்து விரைவில் வீழ்ச்சி அடைந்து விடும் என எதிர்வு கூறி கடிதம் ஒன்றை எழுதியதோடு இஸ்லாத்தைக் கற்று ஆய்வு செய்ய முன்வருமாறு அவருக்கு அழைப்பும் விடுத்தார். கம்யூனிஸம் என்பது விரைவில் உலக அரசியல் சரித்திர நூதனசாலையில் வைக்கப்படும் ஒரு விடயமாகி விடும் என்று இமாம் அதில் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளில் அது நடந்து இன்று அது யதார்த்தமாகி உள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

இமாம் கொமய்னியின் ஆட்சியின் கீழ் சகல துறைகளிலும் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுலுக்கு வந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஆடை விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளும் பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு உரிய முறையில் பாராளுமன்றத்திலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. ஷீஆ முஸ்லிம்களும் சுன்னாஹ் முஸ்லிம்களும் ஐக்கியப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இறுதியில் நோய்வாய்ப்பட்ட இமாம் சுமார் 11 தினங்ள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 1989 ஜுன் 3ல் தனது 89வது வயதில் காலமானார். ஈரானிய நகரங்கள் அனைத்தினதும் மத்திய பகுதிகளில் மக்கள் கூடி தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர். பல தினங்கள் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாகக் காணப்பட்டனர். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வரலாற்றில் ஒரு தலைவரின் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆகக் கூடுதலான மக்கள் தொகை இன்று வரை இதுவேயாகும்.