எழுச்சியூட்டும் இமாம் கொமெனியின் தலைமைத்துவம்
ஸபர் பாங்காஷ்
முஸ்லிம் உலகில் நல்ல தலைவர்களுக்கான வெற்றிடத்தைத் தோற்றுவித்துவிட்டு ஜூன் 1989 இல் மீளாத்துயிலில் ஆழ்ந்த இமாம் கொமெய்னி, தலைமைத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி நின்றார்.
இமாம் கொமெய்னி அவர்கள், வரலாற்றின் போக்கை அறிவார்ந்த வழிகளில் மாற்றிய அற்புதமான ஒரு ஆளுமையைப் பெற்றவராக விளங்கினார். அவர், உலகை விட்டு மறைந்த 29வது ஆண்டு நிறைவை (ஜூன்3) உலகளாவிய நினைவு தினமாக முஸ்லிம்கள் கொண்டாடுவதன் மூலம், உலக அரங்கில் அன்னாரது பாரம்பரியம் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. அவர் 20ஆம் நூற்றாண்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் புரட்சிகரவாதியாக இருக்கின்றார் என்பதை மிக உறுதியுடன் கூறிவைக்க முடியும்.
அவர் ஒரு முஜ்தஹீத், ஃபாக்கிஹ், ஆரிஃப், அரசியல் மேதை, புரட்சிவாதி மற்றும் கவிஞர் என பல்பரிமாண ஆளுமை படைத்தவராக இருந்தார். அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றை அதிகமான மக்கள் இன்னும் அறியாமலேயே இருக்கின்றனர். வெளி உலகமும், அதேபோல பெரும்பாலான முஸ்லிம்களும் 1978-1979ல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சியைத் தோற்றுவித்;த தலைவராகவே இமாம் கொமெய்னியை நன்கு அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிம்களின் வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். ஏனெனில் இதுவரை முஸ்லிம்கள் தோல்வியையும் அவமானங்களையும் மட்டுமே எதிர்கொண்டு வந்திருந்தனர். 1878 பால்கன் பகுதியில் ஒட்டோமான் துருக்கியர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசிடம் அடைந்த தோல்வியிலிருந்து 1924 மார்ச் மாதம் துருக்கியில் முஸ்தபா கமால்; மூலம் கிலாபா அகற்றப்படும் வரை முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் தோல்வியையே தழுவினர்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் முடிவைத் தொடர்ந்து பாக்கிஸ்தானின் உருவாக்கம் ஏற்படுத்திய நம்பிக்கை, உம்மா மீது சுமத்தப்பட்ட கமாலிஸத்தின் மாபெரும் அவமதிப்பை ஓரளவு சீர்படுத்துவதற்கு ஏதுவாயிற்று. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட பாக்கிஸ்தான் அரசின் உயர்குல ஆளும் வரக்கத்தினர் உலகெங்கிலும் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அதே அரசியலில் ஈடுபட ஆரம்பித்தபோது இந்த நம்பிக்கைகளும் விரைவில் சுக்குநூறாயின. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு இன்னும் பல இழிவுகள் காத்திருந்தன: ஜூன் 1967 சியோனிஸ்ட்டுகளின் கைகளில் அரேபிய படைகள் தோல்வியடைந்து, டிசம்பர் 1971 ல், அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) இந்திய இராணுவ நடவடிக்கையின்போது 90,000 பாகிஸ்தானிய துருப்புக்கள் சரணடைந்தமை என்பன அவற்றுள் சிலவாகும். இது, உண்மையிலேயே, முஸ்லிம்கள் மறுபடியும் திரும்பிப் பார்ப்பதைவிட மறந்துவிட நினைக்கும் சமகால இஸ்லாமிய வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களாகும்.
இந்த இருள் மண்டிய பின்னணியில் ஊடுறுவிய ஒரு ஒளிக் கீற்றாகவே இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி அமைந்தது. எவ்வாறான சூழலில் இமாம் கொமெய்னி வெற்றிகொண்டார் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. முந்தைய பல தசாப்தங்களில் முஸ்லிம் உலகில் ஏற்பட்ட அனேக ஆட்சிமாற்றங்களைப் போன்ற, மற்றொரு ஆட்சி மாற்றம் அல்ல இது. அதிகமானவை இராணுவ சதிப் புரட்சிகள்; அல்லது ஆர்ப்பாட்டமிக்க அரண்மனை மறுசீரமைப்புகள்; அதாவது ஒரு உயர் ஆளும் வர்க்கத்தை மற்றொரு உயர் ஆளும் வர்க்கத் தினரால் மாற்றீடு செய்தல். இதன் மூலம் நடைமுறையிலிருந்த இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணான மக்களுக்கு எதிரான அதே சுரண்டல் அரசியலே இடம்பெற்றது. மக்களுக்கு இந்த மாற்றத்தினால் எந்த விமோசனமும் கிடைக்கவில்லை.
இமாம் கொமெய்னியின் பாரம்பரியத்தை அறியவேண்டுமானால், கடந்த 200 ஆண்டுகால வரலாற்றில், குறிப்பாக முஸ்லிம் உலகத்துடன் தொடர்புடைய வரலாற்றை நாம் சுருக்கமாக பரிசீலனை செய்ய வேண்டும். இது இமாம் எதிர்கொண்ட மகத்தான சவால்களையும் எவ்வாறு அவற்றையெல்லாம் வெற்றிகொண்டு இஸ்லாமியப் புரட்சியை அவர் வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
கடந்த 60-70 ஆண்டுகளில் காலனித்துவத்தின் கர்ப்பவறைகளிலிருந்து பிரசவிக்கப்பட்டவையே பெரும்பாலான முஸ்லிம் நாடுகள். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிளர்ச்சிகளும் தேசியவாத இயக்கங்களும் தலைதூக்கியதோடு சுதந்திரத்தையும் கோரி நின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேயான இரத்தக்களரிகளால் பலவீனமடைந்த காலனித்துவவாதிகள் தங்கள் காலனித்துவ உடைமைகள் மீதான பௌதீகக் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தனர்.
ஒல்லாந்தர் கிழக்கிந்திய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்;, துணைக்கண்டம் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் எனத் துண்டாடுவதற்கு வழிவகுத்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள மலாயா (பின்னர் மலேசியா என பெயர்மாற்றம் பெற்றது), கென்யா, டான்சானியா, நைஜீரியா, சோமாலியா, போன்ற நாடுகளுக்கும் இதேகதி ஏற்பட்டது. ஆனால் காலனித்துவவாதிகளைப் பொறுத்தவரை அவர்களது பார்வையில் அவர்கள் முற்றிலும் தோல்வியடையவில்லை. அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், வெள்ளையனின்; “நாகரிகப் பணிகளைத்” தொடர்வதற்காக சுதேச உயர் குடிகளைத் தயார் நிலையில் வைத்து விட்டுத்தான் சென்றனர். 200 ஆண்டு கால காலனித்துவ ஆட்சியில் அவர்கள்; சமூக-அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளை மட்டுமன்றி கல்வி முறைமையையும் மாற்றியமைத்தனர். அத்துடன், சுதேச மொழிகளோடு காலனித்துவ மொழிகளைப் பிரயோகித்தல், சுவை, பழக்கவழக்கம் மற்றும் காலனித்துவ சமூகங்களின் கலாச்சாரங்கள் ஆகியவற்றையும் மாற்றியமைத்தனர். பூர்வீக மக்களைப் போல தோற்றமளித்த, ஆனால் வெள்ளைக் காலனித்துவ எஜமானர்கள் போல் செயல்பட்ட ஒரு புதிய வர்க்கத்தை அவர்கள் உருவாக்கினர், சுருக்கமாகக் கூறுவதாயின் அவர்கள் பரிபூரண “கறுப்பு ஆங்கிலேயர்களாக" வாழ்ந்தனர். இந்நிலையில் சுதந்திரம் ஒரு கட்டுக்கதையாகவும் ஒரு கொடூரமான ஏமாற்று வித்தையாகவுமே இருந்தது.
ஷாவின் கீழ் ஈரான் இதற்கு விதிவிலக்காயிருக்கவில்லை. பாரிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றிருந்த போதிலும், ஈரானில் பெரும்பான்மையினர் வறுமையில் வாடினர்;. ஷாவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய ஒட்டுண்ணி வர்க்கம் மட்டுமே பெரும் செல்வத்தைச் சூறையாடியது. ஷா தன்னை, ஷாஹின்ஷா (மன்னர்களுக்கு மன்னர்), மகா சைரஸின் தலைமுறை என்றெல்லாம் பீற்றிக்கொண்ட போதிலும், மேற்குக்கு முற்றிலும் அடிபணிந்தவராகவே வாழ்ந்து வந்தார்.
இந்த அமைப்புக்கு எதிராகவே இமாம் கொமெய்னி வெகுண்டெழுந்தார். அவரது அரசியல் வாழ்க்கையைப் படிப்பதன் மூலம், ஒருவர், முக்கிய அரசியல் முடிவுகளும் மக்களுடைய வாழ்க்கையில் அதன்; தாக்கங்கள் உட்பட இஸ்லாத்தின்; ஆழமான ஆய்வு மற்றும் அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தின் முக்கிய விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவரது அரசியல் செயற்பாடு அமைந்திருந்தமையைக் கண்டுகொள்வர். முஸ்லிம் உலகின் மற்ற பகுதிகளில், குறிப்பாக “சுன்னி" உலகின் முன்னைய ஆட்சியாளர் அல்லது சமகாலத்தவர்கள் போலல்லாமல், இமாம் மூன்று முக்கிய தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது. முதலாவது, உள் விவகாரம், ஷீஆ அரசியல் சிந்தனைக்கு உட்பட்டது, இரண்டாவதாக, அடக்குமுறை ஆட்சி மற்றும் அதன் அரச இயந்திரம். மூன்றாவது பலவீனமான அரசுகளின் கொள்கைகளை மேலாதிக்கம் செய்து, கையாள்வதற்காக மேற்கினால் திணிக்கப்பட்ட உலக ஒழுங்கு.
வரலாற்றின் தேக்க நிலைளை வெற்றிகொள்வதென்பது, குறிப்பாக நூற்றாண்டுகால இறையியல் மூலம் அதனை சாதிப்பது உண்மையிலேயே நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அரும் பணியாகும். இமாம் ஹிக்மா மற்றும் தைரியத்துடன் அதனை அடைந்தது கொண்டார்.
ஈரானின் இளைஞர்களையும் யுவதிகளையும் - அவர்களது சொந்த விவகாரங்களில் ஈடுபட அவர்களை ஊக்குவித்தார்; அதன் மூலமே ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழியுமஎன அவர் கருதினார்;. இந்த இளைஞர்களே புரட்சியின் போது ஷாவின் ஆயுதமேந்திய பலம் வாய்ந்த இராணுவத்தைத் தோற்கடித்ததோடு மேற்கின் சீர்குலைப்புக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு அரணாக தொடர்ந்து நிற்கின்றனர். மேற்கத்தியக் கல்வியைப் பெறாமலேயே, மேற்குலகின் படித்த பெரும்பான்மையான முஸ்லிம்களை விட இமாம் மேற்கத்திய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை நன்கு புரிந்து வைத்திருந்தார்;. அல்லாஹ்வின் மீதான அசையாத நம்பிக்கையே இஸ்லாமிய அரசு நிறுவும் போராட்டத்தில் மகத்தான சவால்களை வெற்றிகொள்ள அவருக்கு உதவியது.
தமிழில் முஹம்மத் றஸீன்
By Razeen Mohamed
No comments:
Post a Comment