ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் ஸெய்யித் அலி காமனெயி அவர்கள், சென்ற 2012 ஓகஸ்ட் 30ம் திகதி தெஹ்ரானில் நடைபெற்ற அணி சேரா இயக்க நாடுகளின் 16வது உச்சி மாநாட்டில் நிகழ்த்திய துவக்கவுரையின் முழு உள்ளடக்கம் இங்கு தரப்படுகிறது:
-ஈரான் தலைவர் ஆயத்துல்லாஹ் காமனெயி-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
எல்லாப் புகழும் ஈருலக நாயனான அல்லாஹ்வுக்கு உரியதாகும்ளூ மேலும், சாந்தியும் நல்லாசிகளும், மகத்தானவரும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் தூய்மை வாய்ந்த சந்ததியினர் மீதும், அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மீதும், எல்லா தீர்க்கதரிசிகள், இறைத் தூதுவர்கள் மீதும் உண்டாவதாக!
நான் மதிப்பிற்குரிய விருந்தாளிகளான உங்களை - அணி சேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகளைப் பிரதிநிதித் துவப்படுத்தும் தலைவர்களையும் தூது குழுக்களையும், இம்மாபெரும் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ஏனைய அனைவரையும் வரவேற்கிறேன்.
அணி சேரா இயக்கத்திற்கு புத்துயிர் வழங்குவதற்கான ஒன்றுகூடல்
இறைவனின் வழிகாட்டலுடனும் உதவியுடனும், உலகின் இன்றைய நிலைமைகளையும் தேவைகளையும் கருத்திற் கொண்டு, ஓர் இயக்கத்திற்கு புத்துயிரையும் உந்துசக்தியையும் அளிப்பதற்கு நாம் இங்கு ஒன்று குழுமியிருக்கிறோம். இந்த இயக்கம், ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அறிவு நுட்பமும் துணிவும் கொண்ட- கவலையும் பொறுப்புணர்வுமுள்ள- அவர்களின் காலத்தினது சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் நன்கறிந்த- அரசியல் தலைவர்கள் ஒரு சிலரினால் ஸ்தாபிக்கப்பட்டது.
தொலைவிலும் அருகிலுமுள்ள பல்வேறு பூகோளப் பகுதிகளிலிருந்து, பல்வேறு கொள்கைவாத -கலாச்சார-வரலாற்றுக் குணாம்சங்களைக் கொண்ட பல்வேறு தேசியங்களையும் இனங்களையும் சார்ந்த நமது விருந்தாளிகள் இங்கு ஒன்று குழுமியிருக்கிறார்கள். ஆயினும், இந்த இயக்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான அஹ்மது சுகர்னோ 1955ம் ஆண்டு பிரசித்தி பெற்ற பாண்டுங் மாநாட்டில் சொன்னது போல, அணி சேரா இயக்கத்தை அமைப்ப தற்கான அடிப்படைக் காரணம், பூகோளரீதியான அல்லது இன-மதரீதியான ஒற்றுமை அன்றுளூ மாறாக, அது தேவைகளுக்கான ஒற்றுமையாகும். அந்த காலக்கட்டத்தில், அணி சேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகளை, தங்களை அதிகாரம் செலுத்தும் மமதை கொண்ட- மன நிறைவடையாத பொறிவலைகளின் பின்னலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக, தங்களுக்கிடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் தேவையிருந்தது. இன்றுங் கூட, ஆதிக்கச் சக்திகளின் சாதனங்கள் முன்னேற்றம் கண்டிருப்பதாலும் பரவலாகியிருப்பதாலும் அந்தத் தேவை இருந்து கொண்டிருக்கிறது.
இஸ்லாத்தின் ஒளியில் சர்வதேச மனித இயற் பண்பின் தனித்துவம் வாய்ந்த ஆற்றல்
இன்னோர் உண்மையையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மனிதர்கள் தங்களுக்கிடையிலான இன-மொழி-கலாச்சார வேறுபாடுகளுக்கு மத்தியிலும், ஒரே விதமான இயற்கைத் தன்மையைக் கொண்டிருப்பதால், அவர்கள் தூய்மை, நீதி நியாயம், அன்பு, இரக்கச் சிந்தனை, ஒத்துழைப்பு போன்ற பண்புநலன்களை நோக்கிச் செல்ல வேண்டும் என இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. தவறான உணர்வுகளிலிருந்தும் நோக்கங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்தி தடம் அமைத்துக் கொள்ள முடியுமானால், இந்த சர்வதேச மனித இயற் பண்புதான், மனித ஆத்மாக்களுக்கு ஓரிறைக் கொள்கை மற்றும்; மனித அறிவைக் கடந்த- மிகச்சிறந்த- அதிமேம்பட்ட இறைவனின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள வழி காட்டுகிறது.
ஒளிமயமான இந்தப் பேருண்மை எத்தகைய உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டதெனில், சுதந்திரமும் பெருமிதமும் கொண்ட சமூகங்களின் அடித்தளத்தை அதனால் நிறுவ முடியும் என்பது மட்டுமல்லாமல், அதே வேளை முன்னேற்றத்தையும் நீதியையும் துய்க்கச் செய்யவும் முடியும். மனித குலத்தின் அனைத்து லௌகீக- உலகாயத முயற்சிகளுக்கும் ஆன்மீகத்தின் ஒளியை அதனால் காட்ட முடியும். மேலும், தெய்வீக மதங்களினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கும் மறுவுலகச் சுவர்க்கத்திற்கு முன்பதாகவே, மனிதப் பிறவிகளுக்கு இவ்வுலகிலேயே ஒரு சுவர்க்கத்தை உருவாக்க முடியும். இந்த பொதுவான பிரபஞ்ச உண்மைதான், வெளிப்படையான அமைப்பு முறை கள், சரித்திரப் பின்னணி, பூகோள இட அமைவு போன்றவற்றைப் பொறுத்த வரையில் எத்தகைய ஒத்த தன்மை யையும் கொண்டிராத நாடுகளுக்கு மத்தியில், சகோதரப்பூர்வமான ஒத்துழைப்பின் அடித்தளங்களை அமைத்துக் கொடுக்க முடியும்.
இத்தகையதோர் அடித்தளத்தின் மீது எப்போது சர்வதேச ஒத்துழைப்பு அமையப் பெறுகின்றதோ, அப்போது அரசாங்கங்கள் தங்களுக்கிடையிலான பரஸ்பர உறவுகளை, பீதி மற்றும்; பயமுறுத்தல்கள், அல்லது பேராசை மற்றும் ஒரு பக்கச் சார்பான நலன்கள், அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்யும் மற்றும் இலஞ்ச லாவண்யங்களுக்கு விலை போகும் தனிநபர்களின் மத்தியஸ்தங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அல்லாமல், நன்மை பயக்கின்ற ஆரோக்கியமான மற்றும் பகிர்ந்து கொள்கின்ற நலன்களின், இன்னும் சொல்லப் போனால், மிக முக்கியமாக மனித சமுதாயத்தின் நலன்களின் அடிப்படையில் கட்டியெழுப்ப முடியும். இவ்விதமாக அரசாங்கங்கள,; விழிப்படைந்த தங்கள் மனச்சாட்சிகளையும் உள்ளுணர்வுகளையும் வலிநீக்கி, தங்கள் மக்களின் உள்ளங்களை அமைதியடையச் செய்ய முடியும்.
தகுதி மாண்புகளின் மீது அமைந்த இந்த ஒழுங்குமுறை, ஆதிக்க ஒடுக்குதல்களின் மீது அமைந்த ஒழுங்குமுறைக்கு நேர் எதிரானதாகும். பின்னைய ஒழுங்குமுறையைத்தான் அண்மைய நூற்றாண்டுகளில் மேற்கத்திய ஆதிக்கச் சக்திகளும், இன்று ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற- எவரையும் சட்டை செய்யாமல் சண்டித்தனமாக வலிந்து மூர்க்கத்தனமாகத் தாக்குகின்ற அமெரிக்க அரசும், தலைமை தாங்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டும் விஸ்தரித்துக் கொண்டும் இருக்கின்றன.
அணி சேரா இயக்கத்தின் பிரதான மாண்புகளின் உயிர்த் துடிப்பு
அன்பிற்குரிய விருந்தினர்களே! இன்று ஏறத்தாழ ஆறு தசாப்தங்கள் கழிந்த பின்னருங் கூட, அணி சேரா இயக்கத்தின் பிரதான மாண்புகள் உயிர்த் துடிப்புடனும் உறுதியுடனும் நிலையாக இருந்து வருகின்றன. அவை: காலனித்துவ எதிர்ப்பு, அரசியல் பொருளாதார கலாச்சாரச் சுதந்திரம், எந்தவொரு வல்லரசு அணியுடனும் கூட்டுச் சேராமை, மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் சீர்படுத்தல் என்பன வாகும்;. இம்மாண்புகளை அடைவதற்கு இன்றைய உலகின் உண்மை நிலை இன்னும் வெகு தூரம் பிரயாணப்பட வேண்டியுள்ளது. ஆன போதிலும், களத்தில் காணப்படும் மெய்ப்பாடுகளை மாற்றி அமைத்து, இம்மாண்புகளை அடைவதற்கான கூட்டுரீதியான விருப்பமும் பரந்த புரிந்துணர்வுடனான பிரயத்தனங்களும், ஏராளமான அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், எதிர்காலத்தில் நம்பிக்கை தரக் கூடியனவாகவும் பலனளிக்கக் கூடியனவாகவும் காணப்படுகின்றன.
நாம் கடந்து வந்த அண்மைக்காலத்தில், பனிப்போர் யுகக் கொள்கைகளும் அதனைத் தொடர்ந்து வந்த ஒரேயொரு வல்லரசு ஆதிபத்தியக் கொள்கைகளும் தோல்வி கண்டதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து பாடம் படித்துக் கொண்ட உலகம், புதியதொரு சர்வதேச ஒழுங்கமைப்பை நோக்கி மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அணி சேரா இயக்கம் புதியதொரு பங்களிப்பை வழங்க முடியும்ளூ வழங்க வேண்டும். இந்த புதிய ஒழுங்கமைப்பு, எல்லா நாடுகளும் கலந்து கொள்வதாகவும் எல்லா நாடுகளுக்கும் சரிசமமான உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில், இந்த புதிய ஒழுங்கு முறையை இன்றைய யுகத்தில் நிலை நிறுத்துவதற்கு, நமது ஒருமைப்பாடு ஐயத்துக்கிடமின்றி மிக அவசியமானதொன்றாகும்.
அதிர்ஷ்டவசமாக, உலகளாவிய அபிவிருத்திகளின் கண்ணோட்டம் ஒரு பன்முக அமைப்புமுறைக்கு கட்டியங் கூறுவதாகக் காணப்படுகிறது. இந்த அமைப்புமுறையில் பாரம்பரிய ஆதிக்கச் சக்திகளின் இடத்தை, பல்வேறு பொருளாதார சமூக கலாச்சார அரசியல் மூலங்களிலிருந்து உருவான நாடுகளின் குழுக்களும் கலாச்சாரங்களும் நாகரிகங்களும் நிரப்புவதாயிருக்கும். சென்ற மூன்று தசாப்தங்களாக நாம் பிரத்தியட்சமாக சந்தித்து வந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், மிகத் தெட்டத் தெளிவாகவே பாரம்பரிய ஆதிக்கச் சக்திகள் வீழ்ச்சியடையும் அதே நேரத்தில், புதிய சக்திகள் தோற்றம் பெறுவதை நமக்கு காண்பிப்பதாக அமைந்திருந்தன. இந்த படிப்படியான மாற்றம், அணிசேரா நாடுகளுக்கு உலக அரங்கில் மிக முக்கியமானதும் பெறுமதி வாய்ந்ததுமான ஒரு பாகத்தை வகிப்பதற்கும், உண்மையில் எல்லாரும் பங்கு கொள்ளும் நீதியான ஒரு உலகளாவிய நிர்வாகத்திற்கான களத்தைத் தயார்படுத்துவதற்குமான வாய்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. பலதரப்பட்ட கண்ணோட்டங்களும் சூழ்நிலைச் சார்புகளும் நமக்கு மத்தியில் காணப்பட்ட போதிலும், இந்த இயக்கத்தின் அங்கத்துவ நாடுகளான நாம், நீண்ட காலமாக நமது ஒருமைப்பாட்டையும் பிணைப்பையும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகுதி மாண்புகளின் கட்டமைப்பிற்குள் பழுதுபடாமல் காப்பாற்றி வந்திருக்கிறோம். சொல்லப் போனால், இதுவொன்றும் சாதாரணமான- சிறியதொரு சாதனையன்று. இந்தப் பிணைப்பினால் நீதியும் நியாயமும் கொண்ட, கருணையும் மனிதாபிமானமும் உள்ள ஓர் அமைப்பு முறைக்கு மாறுவதற்கான களத்தை ஆயத்தப்படுத்த முடியும்.
இன்றைய உலக நிலவரங்கள் உணர்த்தும் உண்மைகள்
இன்றைய உலக நிலவரங்கள், அணிசேரா இயக்கத்திற்கு பின்னெப்போதும் தலைதூக்காத ஓர் அரிய சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்றன. ஒரு சில மேற்கத்திய நாடுகளின் சர்வாதிகார நாட்டத்தினால் நிர்வகிக்கப் படும் கட்டுப்பாட்டு அறையாக முழு உலகமும் விளங்கக்கூடாது என்பதே எமது அபிப்பிராயமாகும். சர்வதேச விவகாரங்களை நிர்வகிப்பதற்கு எல்லாரும் பங்கு கொள்கின்ற ஓர் உலகளாவிய மற்றும் ஜனநாயக அமைப்பு முறையை நிர்மாணிக்க முடியுமாயிருக்க வேண்டும். முரட்டுத் தனமாக நடந்து பிறரை வம்புக்கிழுத்து வதை செய் கின்ற- சண்டித்தனமாக பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்துகின்ற ஒரு சில நாடுகளின் அத்துமீறல்களின் விளைவாக நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கும் எல்லா நாடுகளுக்கும் இத்தகையதொரு தேவை நிச்சயமாக இருந்து கொண்டிருக்கிறது.
ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை என்பது, அறிவுக்குப் பொருந்தாத- அநீதியான- முற்றிலும் ஜனநாயகத்திற்கு மாற்ற மான அமைப்பு முறையையும் செயல் முறைமையையும் கொண்டிருக்கிறது. இது காலங் கடந்து போன- வழக் கொழிந்து போன- மிகவும் புராதனப் பாணியிலான- சர்வாதிகாரத்தின் ஒரு சீர்கெட்ட வடிவமாகும். இந்தத் தகுதியற்ற தவறான முறைமையை அமெரிக்காவும் அதன் தீய கூட்டாளிகளும் துஷ்பிரயோகம் செய்து, பிறரை வம்புக்கிழுக்கும் தங்கள் பாதகத்தை மறைத்து, அதனை உயர்ந்த கோட்பாடாகக் காட்டி, உலகின் மீது சுமத்தி வருகின்றனர். அவர்கள் 'மனித உரிமைகள்' என்ற பெயரில் மேற்கு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கின்றனர். அவர்கள் 'ஜனநாயகம்' என்ற பெயரில் மற்ற நாடுகளில் இராணுவ ரீதியாகத் தலையிடுகின்றனர். அவர்கள் 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம்' என்ற பெயரில் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் பாதுகாப்பற்ற மக்களை, தங்கள் குண்டுகளையும் ஆயுதங்களையும் கொண்டு குறி வைத்துத் தாக்கி துவம்சம் செய்கின்றனர். அவர்களின் பார்வையில், மனித சமுதாயம் முதல்தர, இரண்டாம்தர மற்றும் மூன்றாம்தர பிரஜை களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.
மனித உயிர் என்பது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் மலிவானதாகவும், அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் அது பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பாதுகாப்பு முக்கிய மானதாகவும், அதே வேளை ஏனைய மனித சமுதாயத்தின் பாதுகாப்பு முக்கியமற்றதாகவும் கருதப்படுகின்றது. சித்திரவதை களும் படுகொலைகளும் அமெரிக்காவினாலும் ஸியனிஸவாதிகளினாலும் அவர்களின் அடிவருடிகளினாலும் மேற்கொள்ளப்படு மானால், அவற்றை அனுமதிக்கப்பட்டனவாகக் கருதி கண்டுங் காணாததைப் போன்று இருந்து கொள்ள வேண்டுமெனச் சொல்லப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் இரகசிய சிறைக்கூடங்களை வைத்திருப்பதும், அவற்றில் பாதுகாப்பற்ற பலா,; தங்களுக்கு சட்டரீதியான பிரதிநிதிகளை அமர்த்த முடியாமலும் ஒரு சட்ட விசாரணை மன்றின் முன் சமாப்;பிக்கப்படாமலும், மிகவும் கொடூரமாகவும் ஆழ்ந்த வெறுப்புக்குரிய விதத்திலும் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதும், அவர்களின் மனதை உறுத்தவில்லை.
நன்மையும் தீமையும் முற்றிலும் ஒருதலைப்பட்சமாகவும் அவர்களுக்குத் தகுந்ததாகவும் வரையறுத்துக் கூறப்படுகின்றது. அவர்கள் தங்கள் நலன்களை, 'சர்வதேசச் சமூகம்' என்ற பெயரில் உலக நாடுகளின் மீது திணித்து வருகின்றனர். அவர்கள் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற- தங்கள் சட்டவிரோதக் கோரிக்கைகளை, 'சர்வதேசச் சட்டம்' என்ற பெயரில் முன் வைக்கின்றனர். அவர்கள் தங்களின் தனிப்பட்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்தி, தங்கள் பொய்களையும் பித்தலாட்டஙகளையும் உண்மைகளாகவும், தங்கள் நேர்மையின்மையையும் வஞ்சகத்தையும் நல் லெண்ணமாகவும், தங்கள் அநீதிகளையும் கொடுமைகளையும் நீதியை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளாகவும் மூடி மறைத்துச் சித்தரித்துக் காட்ட முனைகின்றனர். இதற்கு மாற்றமாக, அவர்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் எல்லா உண்மைக் கூற்றுகளையும் பொய்கள் எனச் சின்னமிடுகின்றனர்ளூ எந்தவொரு சட்டப்பூர்வமான கோரிக்கைக்கும் கயமையான தெனப் பெயர் சீட்டு ஒட்டத் துணிகின்றனர்.
தீமை பயக்கக்கூடிய இந்த நிலவரம் மாற வேண்டும்
நண்பர்களே! குற்றங்குறைகளுள்ள- தீமை பயக்கக்கூடிய இந்த நிலவரம் தொடரமுடியாது. இந்தப் பிழையான சர்வதேச அமைப்பு முறையால் எல்லாருமே சோர்வடைந்து போய்விட்டனர். அமெரிக்காவின் செல்வ வள மற்றும் அரசியல் அதிகார மையங்களுக்கு எதிரான அமெரிக்க மக்களின் '99 சதவீத இயக்க'மும், மேற்கு ஐரோப்பிய மக்களின் தங்கள் அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான பரவலான கண்டன ஆர்ப்பாட்டங்களும், மக்கள் இந்த நிலவரம் குறித்து பொறுமையிழந்து வருகின்றனர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அறிவுக்குப் பொருந்தாத இந்த நிலவரத்திற்கான நிவாரணம் காண்பது அத்தியாவசியமான தொன்றாகும். அணிசேரா இயக்க உறுப்பு நாடுகளின் உறுதியான- தர்க்கரீதியான- ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் பிணைப்புகள், இதற்கானதொரு தீர்;வையடைவதற்கு முக்கியப் பங்காற்ற முடியும்.
மதிப்பிற்குரியவர்களே! சர்வதேச அமைதி- சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பன. இன்றைய உலகில் மிக ஆபத்தான பிரச்சினைகளாகத் திகழ்கின்றனளூ பேரழிவுக்கான நாசகார ஆயுதங்களை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்பது, மிகவும் அவசரமும் அவசியமுமான ஓர் இன்றியமையாத தேவை மட்டுமன்றி, முழு உலகத்தின் ஒரு தேட்டமுமாகும். இன்றைய உலகில், பாதுகாப்பு என்பது எல்லாராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஓர் அத்தியாவசியத் தேவையாகும்ளூ இதில் பாகுபாட்டிற்கு இடமில்லை. தங்கள் படைக்கலப் பண்டகசாலையில் மனித இனத்தை அழித்தொழிக்கும் தங்கள் ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பவர் களுக்கு, 'பூகோளப் பாதுகாப்பின் காவலர்கள்' எனத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு எந்த உரிமை யும் இல்லை. சந்தேகமில்லாமல், இஃது அவர்களுக்கே எந்தப் பாதுகாப்பையும் வழங்காது. மிகப் பெரிய அணு வாயுதக் கிடங்குகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கு, இந்த அபாயகரமான ஆயுதங்களைத் தங்கள் இராணுவக் கோட்பாடுகளிலிருந்து அகற்றிக் கொள்வதற்கு உளப்பூர்வமான- உண்மையான எண்ணம் எதுவும் கிடையாது என்பது துரதிர்ஷ்டவசமானதொன்றாகும். இந்நாடுகள், இத்தகைய ஆயுதங்களை பயமுறுத்தல்களை விரட்டி யடிக்கும் ஒரு சாதனமாகவும், அரசியல் அதிகாரம் மற்றும் சர்வதேச மட்டத்தில் தங்கள் அந்தஸ்தை நிர்ணயிக்கும் முக்கியமானதொரு தகுதியாகவும் இன்னும் கருதி வருகின்றன. இந்த எண்ணக்கரு முழுமையாக ஒதுக்கித் தள்ளப்படவும் உறுதியாகப் புறக்கணிக்கப்படவும் வேண்டியதொன்றாகும்.
அணுவாயுதங்களினால் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அல்லது அரசியல் அதிகாரத்தைக் கெட்டிப்படுத்தவோ முடியாது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவை பாதுகாப்பிற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் -இரண்டிற்குமே- ஓர் அச்சுறுத்தலாகும் இத்தகைய ஆயுதங்களை வைத்துக் கொண்டிருப்பதானது சோவியத் யூனியன் போன்றதோர் ஆட்சியைக் கூடக் காப்பாற்ற முடியாமல் போனது என்பதை 1990ல் இடம்பெற்ற நிகழ்வுகள் எடுத்துக் காண்பிக்கின்றன. மேலும், இன்று சில நாடுகள், தங்களிடம் அணு குண்டுகளை வைத்துக் கொண்டி ருக்கும் போதிலும் கூட, மிகவும் அபாயகரமான அளவுக்கு பாதுகாப்பின்மை அலைகளால் சூழப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
'அணுவாயுதங்களிலிருந்து விடுதலை பெற்ற மத்திய கிழக்கு'
அணுக்கரு, இரசாயனம் மற்றும் அவற்றையொத்த ஆயுதங்களை உபயோகிப்பது, மன்னிக்க முடியாத ஒரு மாபெரும் குற்றச் செயல் என ஈரான் இஸ்லாமியக் குடியரசு கருதுகிறது. 'அணுவாயுதங்களிலிருந்து விடுதலை பெற்ற மத்திய கிழக்கு' என்ற எண்ணத்தை நாம் முன்மொழிந்திருக்கின்றோம்ளூ இந்தக் கருத்துக்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம். இதனால், அணுச் சக்தியை சமாதான வழிகளில் உபயோகப்படுத்துவதற்கும், அணு உலை எரிபொருளை உற்பத்தி செய்வதற்குமான எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம் என அர்த்தப்படாது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், அணுச் சக்தியை சமாதான வழிகளில் உபயோகப்படுத்து வதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள ஓர் உரிமையாகும். இந்த உரிமையை நடை முறைப்படுத்துவதற்கு பிறரைச் சார்ந்திராமல், தங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், இந்த பயனுள்ள ஆற்றல் மூலத்தை பல்வேறுபட்ட இன்றியமையாப் பயன்பாடுகளில் உபயோகப்படுத்த அனைவருக்கும் முடியுமாயிருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள் சில, தாங்களே அணுவாயுதங்களை வைத்திருந்து, இந்த சட்ட விரோதச் செயலினால் குற்றவாளிகளாக நிற்கும் போது, அணு உலை எரிபொருளை உற்பத்தியையும் ஏகபோக உரிமை யாக்கிக் கொள்ள விரும்புகின்றன. ஒரு சர்வதேசப் பெயர் சீட்டைத் தாங்கியிருக்கும் மையங்களில், ஆயினும் உண்மையில், ஒரு சில மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டினுள், அணு உலை எரிபொருள் உற்பத்தியையும் விற்பனையையும் ஏகபோக உரிமையாக நிரந்தரமாக ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, கள்ளத்தனமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மிகப் பெரிய அளவில் அபாயகரமான அணு ஆயுதங்களையும் பேரழிவுக்கான ஏனைய நாசகார ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களையும் குவித்து வைத்துக் கொண்டிருப்பதுடன். அதனைப் பயன்படுத்திய குற்றத்திற்கு ஆளான ஒரே நாடான அமெரிக்காவின் அரசு, இன்று அணு ஆயுதங்களின் பரவலுக்கு எதிராக கொடி பிடிக்க ஆவல் கொண்டுள்ளது என்பதுதான், நமது யுகத்தின் மிகவும் கசப்பானதோர் உண்மையாகும். அமெரிக்காவும் அதன் மேற்கத்தியக் கூட்டாளிகளும், (பலஸ்தீனை அபகரித்த) ஸியனிஸ ஆட்சியாளர்களுக்கு அணு ஆயுதங்களை வழங்கி, உணர்வலைகள் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இந்தப் பிரதேசத்தில், பெரிய அளவிலான ஓர் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கின்றன. இருந்த போதிலும், அணுச் சக்தி சமாதான வழிகளில் சுதந்திரமான நாடுகளினால் உபயோகப்படுத்தப்படுவதை இதே ஏமாற்றுக் குழுவினால் சகித்துக் கொள்ள இயலவில்லை. மேலும் இந்தக் குழு, கதிரியக்க மருந்தாக்கத்திற்கும் ஏனைய சமாதான வழிகளிலும்; மனிதாபிமான நோக்கங் களுக்கும் பயன்;படுத்துவதற்காக அணு உலை எரிபொருளை உற்பத்தி செய்வதைக் கூட தனது முழு பலத்துடன் எதிர்க் கின்றதுளூ அணுவாயுதங்களைத் தயாரிக்கலாம் என்ற அச்சமிருக்கின்றது என ஒரு காரணத்தைக் கூறுகின்றது. ஈரான் இஸ்லாமியக் குடியரசைப் பொறுத்த வரை, அவர்கள் பொய் சொல்கின்றனர் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், ஆன்மீகத்தின் மிகச் சிறிய அளவிலான தடங்களைக் கூடப் பெற்றிராத- முழுமையாக உலகாயதத்தை இலக்காகக் கொண்ட- அவர்களின் அரசியலில் பொய்கள் அனுமதிக்கப்பட்டவையாகும். 21ம் நூற்றாண்டில், அணு சம்பந்தமான அச்சுறுத்தலைச் செய்து அதனைப் பற்றி வெட்கப்படாத ஒருவன், எவ்வாறு பொய் சொல்வதைப் பற்றி வெட்கப்படப் போகிறான்?
'அணுச்சக்தி எல்லாருக்கும் உரியதுளூ அணுவாயுதங்கள் எவருக்கும் தேவையில்லை'.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு, அணுவாயுதங்களின் பின்னால் ஒருபோதும் சென்றது கிடையாதுளூ மேலும் அது, அதன் மக்கள் அணுச்சக்தியை சமாதான வழிகளில் உபயோகப்படுத்துவதற்கிருக்கும் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்பதை நான் வலியுறுத்துகிறேன். எங்கள் குறிக்கோள் இதுதான்: 'அணுச்சக்தி எல்லாருக்கும் உரியதுளூ அணுவாயுதங்கள் எவருக்கும் தேவையில்லை'. நாங்கள் இந்த இரண்டு விதிகளுள் ஒவ்வொன்றைக் குறித்தும் ஊன்றி அழுத்தமாகக் கூறுகிறோம். மேலும், அணு பரவல் தடை ஒப்பந்தத்தின் கட்டமைப்பில், அணுச்சக்தியை உற்பத்தி செய்யும் ஒரு சில மேற்கத்திய நாடுகளின் ஏகபோகத்தைத் தொடர விடாமல் முறித்துப் போடுவதில்தான், அணி சேரா இயக்கத்தின் உறுப்பினர் நாடுகள் உட்பட சுதந்திரமான எல்லா நாடுகளின் நலன்களும் தங்கியிருக்கின்றன
அமெரிக்காவினாலும் அதன்; கூட்டாளிகளினாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வம்புக்கிழுத்து வதை செய்கின்ற போக்கிற்கும் ஒன்றையொன்று சார்ந்த அழுத்தங்களுக்கும் எதிராக, ஈரான் இஸ்லாமியக் குடியரசு மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் வெற்றிகரமான அனுபவத்தைக் கொண்டு, ஒன்றுபட்ட- தீர்க்கமான உறுதியுடன் கூடிய ஒரு தேசத்தின் துணிந்து எதிர்த்து நிற்கும் தன்மையின் மூலம், எல்லா குரோத-விரோதங்களையும் பகைமை-பயமுறுத்தல்களையும் தோல்வியுறச் செய்யலாம் எனவும் அதன் உயர்ந்த இலட்சியங்களை நோக்கிச் செல்லும் மகிமை பொருந்திய பாட்டையைத் திறந்து விடலாம் எனவும் அது திடமாக நம்புகிறது. நமது நாடு சென்ற இரண்டு தசாப்தங்களில் அடைந்த பரந்த விரிந்த அளவிலான முன்னேற்றங்கள் அனைவருமே கண் முன்னால் காணும் நிதர்சனமான உண்மைகளாகும். உத்தியோகப்பூர்வ சர்வதேசப் பார்வையாளர்கள் இதனை தொடர்ந்து பலமுறை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இவையனைத்தும், அமெரிக்காவுடனும் ஸியனிஸவாதிகளுடனும் இணைந்து, வலையமைப்புகள் அமுல்செய்த தடைகள், பொருளாதார அழுத்தங்கள், பிரச்சார நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு உட்பட்ட நிலையில் நிகழ்ந்தவையாகும். இத்தடைகள் எங்களை முடக்கிப் போட்டு விடும்- செயலிழக்கச் செய்து விடும் என அறிவற்ற ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். எங்களை முடக்கிப் போடவில்லை என்பது மட்டுமல்லாமல், எங்களை முடக்கிப் போடவும் செய்யாதுளூ மாறாக, எங்கள் காலடிச் சுவடுகளை நிலைப்படுத்தியுள்ளனளூ எங்கள் மனோதிடத்தை மேன்மைப்படுத்தியுள்ளனளூ எங்கள் ஆய்வுகளைப் பற்றியும், எங்கள் மக்களினது உடன்பிறந்த- இயல்பான ஆற்றல்கள்- திறமைகள் பற்றியுமான எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளனளூ இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு தெய்வீக உதவி கிடைக்கப் பெற்றதை நாங்கள் தொடர்ந்து பலமுறை எங்கள் கண்களினால் கண்டிருக்கிறோம்.
பலஸ்தீன் பிரச்சினை மனித சமூகங்களின் அதிமுக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று
மதிப்பிற்குரிய விருந்தாளிகளே! மிக முக்கியமானதொரு பிரச்சினையைப் பற்றிப் பேசுவது அவசியமானது என நான் எண்ணுகிறேன். இது எங்கள் நிலப்பகுதியைச் சார்ந்ததாக இருந்த போதிலும், இதன் பரிமாணங்கள் தாண்டிச் சென்று, பல தசாப்தங்களாக உலகளாவிய கொள்கைகள் பலவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் பிரச்சினைதான் மன வேதனை மிகுந்த பலஸ்தீன் பிரச்சினையாகும். இவ்விஷயத்தைப் பற்றிய சுருக்கம் என்னவெனில், 1940களில், மிக மோசமானதொரு மேற்கத்திய சதியின் காரணமாக, இங்கிலாந்தின் வழிகாட்டுதலின் கீழ், ஆயுதங்களையும் கொலைகளையும் ஏமாற்று வேலைகளையும் பயன்படுத்தி, மிகத் தெளிவானதொரு வரலாற்று அடையாளத்தைக் கொண்டு 'பலஸ்தீன்' என அழைக்கப்பட்ட ஒரு சுதந்திரமான நாடு அதன் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு, பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய ஒரு மக்கள் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில், நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த பாதுகாப்பற்ற அப்பாவி மக்களைப் படுகொலை செய்து, மேலும் அம்மக்களை தங்கள் வீடுகளிலிருந்தும் தாய்நாட்டிலிருந்தும் சூழவிருக்கும் பிற எல்லைப்புற நாடுகளுக்குத் துரத்தியடிப்பதன் மூலம் நிகழ்த்தப்பட்டது. இந்த மிகப்பெரும் அபகரிப்பு-ஆக்கிரமிப்பு, கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இதே மாதிரியான குற்றச் செயல்களின் காரணமாக, இன்றைய தினம் வரை தொடர்கின்றது. இது மனித சமூகங்களின் அதிமுக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாகும்.
ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ஸியனிஸ ஆட்சியின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், இந்த காலப் பகுதியில் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யாமல் தவிர்ந்து கொண்டதில்லை. மக்களை கொன்று குவிப்பதுளூ அவர்களின் வீடுகளை யும் பண்ணைகளையும் நிர்மூலமாக்குவதுளூ ஆண்களையும் பெண்களையும், ஏன் அவாகளின் குழந்தைகளையும் சிறை பிடிப்பது -சித்திரவதை செய்வதுளூ ஸியனிஸ ஆட்சியினர் விலக்கப்பட்ட(ஹராமான)தை விழுங்கும் தங்கள் வயிறுகளில் ஜீரணிப்பதற்காக, அந்த தேசத்தவர்களை இழிவுபடுத்துவது மற்றும் தாழ்வு படுத்துவதுளூ எனத் துவங்கி, பலஸ்தீனிலும் அயல் நாடுகளிலும் அகதிகளாக முகாம்களில் இலட்சக்கணக்கில் வசிப்போரை, அந்த அகதி முகாம்களிலேயே தாக்குவதென இப்பட்டியல் நீளுகிறது. ஸப்ரா-ஷடில்லா, காஹ்னா, டேர் யாஸீன் போன்ற அகதி முகாம்களின் பெயர்கள், எங்கள் நிலப்பகுதியின் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் இரத்தத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
65 வருடங்களுக்குப் பின்னருங் கூட, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் மிஞசியிருக்கின்ற பலஸ்தீனர்களின் மீது மிருகத்தனமான அந்த ஸியனிஸ நரிகள், அதே விதமான குற்றச் செயல்களைத்தான் கட்டவிழ்த்து விட்டிருக் கின்றன. இப்போது அவர்கள் ;ஒன்றன் பின் ஒன்றாக புதுப்புது குற்றச் செயல்களை இழைத்து, இப்பகுதியில் புதிய நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றனர். படுகொலைகள், படுகாயங்கள், தங்களின் தாய்நாட்டையும் தங்களின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கும், தங்களின் வீடுகளும் பண்ணைகளும் அழிக்கப்பட்டதை எதிர்த்து கண்டனந் தெரிவிப்பதற்குமாக எழுச்சி கொள்ளும் இளைஞர்களை கைது செய்வது பற்றிய அறிக்கைகள் வராத நாளில்லை. தசாப்தங்களாக மிகுந்த நாசங்களை விளைவிக்கும் யுத்தங்கள், மனிதக் கொலைகள், அரபுப்பிரதேசங்களின் ஆக்கிரமிப்பு, எனபன மூலம் படுகொலைப் படலங்களையும் மோதல் களையும் உருவாக்கியும் குற்றங்களை ஈவிரக்கமில்லாமல் செய்தும் வருகின்ற ஸியனிஸ ஆட்சி, தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பலஸ்தீன் மக்கiளுக்குப் 'பயங்கரவாதிகள்' எனப் பெயர் சூட்டுகின்றது! ஸியனிஸவாதிகளுக்குச் சொந்தமான ஊடக வலையமைப்புகளும். பல மேற்கத்திய மற்றும் பணத்துக்காக வேலை செய்யும் ஊடகங்களும், அறநெறி மாண்பு களையும் பத்திரிக்கைத் துறை நேர்மையையும் மீறிச் சென்று, இந்த மாபெரும் பொய்யைத் திரும்பவும் எழுதியும் வெளி யிட்டும் வருகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றுகிறோம் என உரிமை பாராட்டும் அரசியல் தலைவர்கள், இந்த எல்லாக் குற்றச் செயல்களைக் கண்டும் தங்கள் கண்களை இறுக்க மூடிக் கொள்கின்றனர். அத்தோடு நில்லாமல், இவர்கள் வெட்கங் கெட்ட விதமாக தைரியமாக அந்த படுபாதக ஆட்சியை ஆதரிக்கின்றனர்ளூ அந்த ஆட்சிக்கு சார்பாக வக்காலத்து வாங்கவும் துணிகின்றனர்!
பலஸ்தீன் பலஸ்தீனர்களுக்கே சொந்தமானதுளூ அதன் ஆக்கிரமிப்பு ஒரு பெரும் அநீதி
பலஸ்தீன் பலஸ்தீனர்களுக்கே சொந்தமானது என்பதும், அதனைக் கைப்பற்றி அங்கு தன் ஆக்கிரமிப்பைத் தொடர்வது ஒரு பெரும்- சகித்துக் கொள்ள முடியாத அநீதி என்பதும,; உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அது தலையாய ஓர் அச்சுறுத்தல் என்பதும்தான் எங்கள் நிலைப்பாடாகும். மேற்கத்தியவாதிகளாலும் அவர்களின்; கூட்டாளிகளினாலும் 'பலஸ்தீன் பிரச்சினையின் தீர்;வு'க்காகக் கூறப்பட்டும் பின்பற்றப்பட்டும் வரப்படுகின்ற எல்லா ஆலோசனைகளும் தவறானவை மட்டுமல்ல, தோல்வியடைந்தும் விட்டன என்பதோடு, எதிர் காலத்திலும் அவை அவவாறே அமைந்திருக்கும். நாங்கள் நீதமான- முற்றிலும் ஜனநாயகரீதியிலான தீர்வொன் றைச் சமர்ப்பிக்கிறோம். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் உட்பட எல்லாப் பலஸ்தீனர்களும்- பலஸ்தீனின் தற்போதைய பிரஜைகளும் மற்ற நாடுகளில் குடியேறுவதற்காக பலாத்காரமாக அனுப்பப்பட்டவர்கள் ஆயினும் பலஸ்தீன் அடையாள அட்டையைத் தம்முடன் வைத்திருப்பவர்களும், -மிகக் கவனமாகக் கண்காணிக்கப்பட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் ஒரு வெகு ஜன வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்கள் நாட்டிற்கான அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பல்லாண்டுகளாக தங்கள் நாட்டிற்கு வெளியே அல்லற்படும் பலஸ்தீனர்கள் அனைவரும் நாட்டிற்குத் திருமபி வந்து, அந்த வாக்கெடுப்பில் பங்கு கொள்வதுடன், அதன் பின்னர் ஓர் அரசியல் அமைப்புச் சட்ட சாசனத்தை வரைவதற்கும் தேர்தல்களை நடத்துவதற்கும் உதவ வேண்டும். அமைதியும் சமாதானமும் அதன் பின்னர்தான் ஏற்படும்.
எப்போதுமே ஸியனிஸ ஆட்சிக்குச் சார்பாகவும் அதற்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்க அரசியல்வாதி களுக்கு, இப்போது நான் கருணையுடனான சிறு ஆலோசனையொன்றைக் கூற விரும்புகிறேன். இதுவரையில், இந்த ஆட்சி உங்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணியிருக்கின்றது: அந்தப் பகுதி மக்களிடத்தில் உங்களை வெறுப்பதற்குரிய ஒரு தோற்றத்தை அது சமர்ப்பித்திருக்கின்றதுளூ ஆக்கிரமிப்பாளர்களான ஸியனிஸவாதி களின் குற்றச் செயல்களுக்கு நீங்களும் ஓர் உடந்தை என்ற வகையில் உங்களின் தோற்றம் அமைந்திருக் கின்றது. இச்செயல்களின் பொருள்ரீதியான மற்றும் தார்மீகரீதியான செலவுகளுக்காக அமெரிக்க அரசும் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள பங்கு எக்கச் சக்கமானதாகும். இந்நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் செலவுத் தொகை பெரும் சுமையாக அமையலாம். ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஒரு வெகு ஜன வாக்கெடுப்பிற்கான முன் மொழிவைப் பற்றி சிந்தியுங்கள்ளூ துணிவானதொரு முடிவை எடுத்து, உங்களை தற்போதைய இக்கட்டான நிலவரத்திலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். ஐயத்திற்கிடமின்றி, இந்த நிலப்பரப்பின் மக்களும், உலகெங்கு முள்ள சுதந்திரச் சிந்தனையாளர்களும் இதனை வரவேற்பார்கள்.
புதியதோர் உலகை உருவாக்குவதில் அணிசேரா இயக்கத்தின் பிரதானமானதொரு பங்கு
மதிப்பிற்குரிய விருந்தாளிகளே! இப்போது நான் ஆரம்பமாகச் சொன்ன விஷயத்திற்கு திரும்பி வர விரும்புகிறேன். உலக ளாவிய நிலவரங்கள் உணர்வுகளைத் தளும்பச் செய்திருக்கின்றன. உலகம் மிகவும் முக்கியமானதொரு கால கட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. புதியதோர் ஒழுங்கமைப்பு தோற்றம் பெறும் என னதிர்பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட உலக சமூகத்தின் மூன்றில் இரண்டு பகுதியினரைக் கொண்டிருக்கும் அணி சேரா இயக்கம், அத்தகைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் பிரதானமானதொரு பங்கு வகிக்க முடியும். இந்த மகத்தான மாநாடு தெஹ்ரானில் நடத்தப்படுவதுவே ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட வேண்டும். நமது வளங்களையும் ஆற்றல்களையும் ஒன்று குவித்ததன் மூலம், இந்த இயக்கத்தின் அங்கத்தவர்களான நாம், உலகை பாதுகாப்பின்மை, போர், ஆதிக்கச் சக்திகளின் பிடி ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ;நமது பயணத்தில் புதியதொரு வரலாற்றுப்பூர்வமான- நிலையான பங்கை வழங்க முடியும்.
இந்த இலட்சிய இலக்கை, நம் ஒவ்வொருவர்க்கும் இடையிலான பரந்த-விசாலமான-ஒட்டுமொத்தமான ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். நமக்கு மத்தியில், மிகுந்த செல்வ வளங் கொண்ட நாடுகள் மிகச் சிலவே. சில நாடுகளே சர்வதேச செல்வாக்கு உள்ளனவாகத் திகழ்கின்றன. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, பொருளாதார மற்றும் ஊடகத் துறை ஒத்துழைப்பின் வாயிலாகவும், நம்மைச் சீர்படுத்தி முன்னேற்றம் காண்பதற்கு உதவியாயிருந்த நமது அனுபவங்களை மற்றவர்களுக்கு சொல்வதன் வாயிலாகவும், முற்றாக அடைந்து கொள்ள முடியும். நமது மனோதிடத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது குறிக்கோள்களுக்கு நாம் விசுவாசமாயிருக்க வேண்டும். முரட்டுத்தனமாக நடந்து நம்மை வம்புக்கிழுக்கின்ற சக்திகள் நம்மை உறுத்துப் பார்க்கின்ற போது, நாம் பயப்படக் கூடாது. அவர்கள் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்தால், நாம் சந்தோஷமடையக் கூடாது. இறைவனின் விருப்பத்தையும் படைப்பு விதிகளையும் நமது துணையாக எடுத்துக் கொள்ள வேண்டும்;. இரு தசாப்தங்களுக்கு முன்னர் கம்யூனிஸ முகாமுக்கு நிகழ்ந்ததிலிருந்து நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் 'மேற்கத்திய சுதந்திர ஜனநாயகம்' என அழைக்கப்படும் கொள்கைகளின் தோல்வியிலிருந்தும் நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இதன் அடையாளங்களை ஐரோப்பிய நாடுகளின் மற்றும் அமெரிக்காவின் வீதிகளிலும், இந்நாடுகளின் தீர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளிலும் அனைவருமே காணலாம். இன்னும் இறுதியாக, இந்த நிலப் பகுதியில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய விழிப்புணர்வையும், அமெரிக்காவில் தொங்கி நின்ற- ஸியனிஸ ஆட்சியின் கூட்டாளியான- வட ஆபிரிக்காவின் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ந்ததையும் ஒரு பெரும் வாய்ப்பாக நாம் கருத வேண்டும். உலகம் முழுவதற்குமான ஆட்சி நிர்வாகத்தில், அணி சேரா இயக்கத்தின் 'அரசியல் உருவாக்க ஆற்றலை' செம்மையும் செழுமையும்படுத்த நம்மால் உதவ முடியும். இந்த ஆட்சி நிர்வாகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதையும், அதன் முகாமைத்துவக் கருவிகளுக்கு உரிய தரவுகள் வழங்குவதை யும் நோக்காகக் கொண்டு, குறிப்பிடத்தக்க ஆவணமொன்றை நம்மால் தயார்படுத்த முடியும். பலன் நல்கும் பொருளாதாரக் கூட்டுறவிற்கு நாம் திட்டமிட முடியும். நமக்கு மத்தியிலான கலாச்சார உறவுகளின் வடிவங்களையும் தராதரங்களையும் வரையறுத்தக் கொள்ள முடியும். சந்தேகமின்றி, இந்த நிறுவனத்திற்காக செயலூக்கமும் செயல்திறனும் கொண்ட செயலகமொன்றை ஸ்தாபிப்பது, இந்த குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு மிகப்பெரும்-அர்த்தமுள்ள உதவியாக அமையும்
உங்களுக்கு நன்றி.