அல்லாஹ் அருள்பாலித்த பூமியும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையை ஆரம்பித்த தளமும், உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமுமான புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் முஸ்லிம் உம்மத்திடம் இருந்து அபகரிக்கப்பட்டு இற்றைக்கு 51 வருடங்களாகின்றன. இதனை ஆக்கிரமித்துள்ள சியோனிஸவாதிகளின் எல்லா விதமான அநீதிகளும் அக்கிரமங்களும் அரங்கேற்றப்படும் ஒரு கொலைக் களமாக பலஸ்தீன் மாற்றப்பட்டிருக்கின்றது.
என்றாலும் 1979 ஆம் ஆண்டில் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் மர்ஹும் இமாம் கொமைனி முன்னெடுத்த இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியை அடுத்து வந்த ரமழான் மாதத்தின் முதலாம் நாளன்று (16 ஆகஸ்ட் 1979) சர்வதேச குத்ஸ் (பைத்துல் முக்கதிஸ்) தினம் முதன் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. (அந்தவகையில் இவ்வருட குத்ஸ் தினம் வரும் 8ந் திகதி வெள்ளிக்கிழைம அனுஷ்டிக்கப்படுகிறது).
இந்த சர்வதேச தினத்தைப் பிரகடனப்படுத்திய இமாம் கொமெய்னி 'குத்ஸ் தினம் என்பது, வலிமை குன்றிய அடக்கியொடுக்கப்பட்ட மக்கள், அதிகாரச் செருக்கு கொண்ட சக்திகளை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்கான ஒரு நாள்' என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் உலகம் முழுவதிலும் குத்ஸ் தின நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவதை நாம் காணக் கூடியதாயிருக்கின்றது. வாழ்க்கை வசதிகளை இழந்த மக்களின் பசிக் கொடுமையையும் தாகத்தையும், ஏறத்தாழ ஒரு மாத காலம் நோன்பு நோற்பதால் உணர்ந்து கொண்டவர்கள், இப்பொழுது தங்களின் பார்வைகளை அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியின் பக்கம் திருப்பவும், குரலெழுப்ப முடியாது நசுக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக ஓங்கி குரலெழுப்பவும் செய்கிறார்கள். இதன் காரணமாக, முஸ்லிம் உம்மத்திற்கு மத்தியில் முழுமையான உயிர்த் துடிப்பிற்கான இணைப்பை உருவாக்கி விடுகிறார்கள்.
என்றாலும் சிலர் குறிப்பிடுவது போன்று குத்ஸ் தினம் என்பது ஷீஆக்களின் ஓர் ஒன்றுகூடல் அன்று. அது இஸ்லாத்தின் எல்லாப் பிரிவினரும், ஏன் மனித மாண்புகளைப் போற்றும் முஸ்லிமல்லாத சமூகத்தினரும் கூட இத்தினத்தை அனுஷ்டிக்கின்றனர். குத்ஸ் தினம் அடையாளப்படுத்தும் இந்த ஒற்றுமை உணர்வு, அந்நாளில் உலகெங்கிலும் இடம் பெறும் கூட்டங்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றது, உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் பல்வேறு சிந்தனைப் பிரிவுகளையும் எடுத்து நோக்கினால் கூட குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் ஷீஆக்களை விடவும் சுன்னிகளே அதிகமாகப் பங்கு கொள்கின்றனர்.
இந்த குத்ஸ் தின நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள், அந்த பூமியில் இரத்தஞ் சிந்தப்படுவதையும் சட்டவிரோத குடியிருப்புகள் முன்னெடுக்கப்படுவதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றே கோருகின்றனர்.
ஆயினும், அவர்கள் இஸ்ரேலின் அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் சியோனிஸக் கொள்கைவாதத்திலிருந்தே வேர் பிடித்து எழுந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் மட்டுமல்ல, பழைமைவாத யூதர்களின் நெடுரீ கார்டா குழுவினர் மற்றும் அமெரிக்க அறிஞர் நோர்மன் ஃபிங்கள்ஸ்டீன் (இவருடைய பெற்றோர் நாஸிகளின் யூதப் படுகொலைப் படலத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்) போன்ற யூத உலகின் அறிஞர்கள் பலரும், சியோனிஸத்தை ஓர் இனவாத மற்றும் சட்டவிரோதக் கொள்கையெனப் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதேவேளை சியோனிஸவாதிகள் பல ஐரோப்பிய நாடுகளில் குத்ஸ் தினத்தைத் தடை செய்ய வேண்டுமெனக் கோருகின்றனர். குத்ஸ் தினத்தை ஸெமிதிய இனத்திற்கு எதிரான - 'யூதர்களைக் கொல்லுங்கள்' எனக் கூறும் ஒரு வெறுப்பு இயக்கமாகச் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், மேற்குலகில் நடைபெறும் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிலும் யூதப் பிரமுகர்கள் ஏராளமாக உள்ளனர். இதன் ஊடாக சியோனிஸவாதிகளின் பொய்கள் படு தோல்வி கண்டுவிட்டன.
அவர்கள், குத்ஸ் தினத்தை ஆதரிக்கும் தீரமிக்க யூதர்களைப் பயமுறுத்தி அவ்வாறு செய்வதினின்றும் தடுத்து நிறுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும், சியோனிஸத்திற்கு எதிரான யூத சமூகத்தின் பரந்ததொரு பகுதியினர், 'பலஸ்தீனில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்பதால், அவர்களின் இம்முயற்சியும் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
உலகெங்கிலுமுள்ள பல பிற்போக்குத்தனமான ஆட்சிகள், குறிப்பாக முஸ்லிம் நாடுகள் கூட, குத்ஸ் தினம் என்றாலே அஞ்சுகின்றன. ஏனெனில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பு பலஸ்தீனையும் தாண்டி செல்லக் கூடியது என்பதை அவை நன்கு அறிந்திருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த நாடுகள் பலவற்றில், குத்ஸ் தின நிகழ்ச்சிகள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. சிறுவர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி உள்ளனர்.
குத்ஸ் தினம் என்பது, சியோனிஸவாதிகளின் நாசகார சூழ்ச்சித் திட்டங்களைப் பற்றிய உண்மையை முழுமையாக முன்னெடுத்து சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
இஸ்ரேலை எதிர்கொண்டு தங்கள் தாய்நாட்டை தங்கள் பெறுமதி வாய்ந்த உயிர்களைத் தியாகம் செய்து கூடப் பாதுகாப்பதற்கு முன்வருகின்றவர்களையும், இஸ்ரேலின் நலன்களை பலஸ்தீனர்களின் உயிர்களை பலி கொண்டாவது பாதுகாப்பதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் ஷைத்தான் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் பல்லாயிரம் கோடி ெடாலகளைக் கண்டும் தங்கள் தைரியத்தை இழக்காமலிருக்கின்றவர்களையும் பற்றி பேசுவதற்கும் கண்ணியப்படுத்துவதற்கும் இதுதான் தகுந்த நேரமும் இடமும் ஆகும்.
வரலாறு
முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் குத்ஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். அங்கிருந்துதான், அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) தங்கள் தூதுத்துவப் பணியின் பன்னிரண்டாவது வருடத்தில் மிஹ்ராஜ் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் ஜெருஸலம் (படங்கள் பலவற்றில் நாம் காணும் தங்க நிறத்திலான குவிமாடம், மஸ்ஜிதுல் அக்ஸா அன்று என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது பல்லாண்டுகளின் பின்னர் கட்டப்பட்ட கற்பாறை மாடமாகும்) முஸ்லிம்களினால் ஹிஜ்ரி 15(கி.பி.638)ம் ஆண்டில் விடுவிக்கப் பெற்றது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் போது, சிலுவைக் காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்த கி.பி.1099 முதல் 1187 வரையிலான ஓர் இடைப்பட்ட குறுகிய காலப் பகுதியைத் தவிர, ஜெருஸலம் ஒரு சுதந்திரப் பூமியாகவே திகழ்ந்து வந்தது.
சிலுவைக்காரர்கள் அல் குத்ஸை ஆக்கிரமித்திருந்த வேளையில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பதற்கான போராட்டத்தை ஸலாஹுத்தீன் அல்- அய்யூபி தலைமை தாங்கி முன்னெடுத்தார். அது கி.பி.1187ல் இடம்பெற்றதோடு ஜெருஸலமும், மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் அல் அக்ஸாவும் பலஸ்தீனும் சுதந்திரமானது.
என்றாலும் கி.பி.1918ல் நவீன கால பிரித்தானியரும், பிரான்ஸியரும் சிலுவைக்காரர்கள் கோதாவில் வந்திறங்கி, பலஸ்தீனையும் ஜெருஸலத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வரையில், பலஸ்தீன் எல்லா மதங்களைப் பின்பற்றும் மனிதர்களும் வாழும் ஒரு பூமியாக இருந்தது. இந்த நவீன சிலுவைக்காரர்கள், புனித பூமிகளை ஆக்கிரமித்து தாங்கள் நீண்ட நெடும் நாட்கள் கைவசம் வைத்திருக்க முடியாது
என்பதைத் தெரிந்திருந்ததினால், ஜோர்தானிலும் அரேபியாவிலும் அரபு தேசிய ஆட்சியாளர்கள் என்ற வடிவத்தில் தங்கள் முகவர்(ஏஜென்டு)களை பதவியில் அமர்த்தினர். இவர்களின் தோற்றம் தான், 1947ல் சியோனிஸ இஸ்ரேலின் சட்ட விரோத உருவாக்கத்திற்கும், அதன் இறுதியில் 1967 ஜுன் யுத்தத்தில் ஜெருஸலத்தின் ஆக்கிரமிப்பிற்கும் வழியமைத்துக் கொடுத்தது.
சியோனிஸவாதிகள் தங்கள் கோர கூரிய நகங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் ஆழமாகப் பதித்து, அதன் அடித்தளங்களைப் பலவீனப்படுத்தும் கொடிய வேலையில் இறங்கியிருக்கும் அதே வேளையில், அரபு ஆட்சியாளர்களோ அவர்களுடன் இணைந்து, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல் அக்ஸாவை விடுவிப்பதற்கான இஸ்லாமிய ரீதியிலான வலியுறுத்தல்களளுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீனைச் சூழவுள்ள ஆட்சிகள் அனைத்தும் சியோனிஸவாதிகளுடன் இணைந்து பலஸ்தீனின் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்புப் பணிகளுக்கு குழி பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உலக முஸ்லிம்களின் புனித தளங்களான மக்காவிலும் மதீனாவிலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றியோ, பலஸ்தீன் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடுமைகளையும் அட்டூழியங்களையும்பற்றியோ வாய் திறக்க முடியாதளவுக்கு தடுக்கப்பட்டுள்ளது
ஆனால் சுமார் 39வருடங்களுக்கு முன்னர் இமாம் கொமெய்னியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் குத்ஸ் தின நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, புனித பைத்துல் முக்கதிஸ் பள்ளிவாசலும் பலஸ்தீனப் பூமியும் சியோனிஸவாதிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்தும் இருந்து வருவது பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக ஏற்படுத்தி வருகிறார்கள்.
இத்தகைய நிகழ்ச்சிகள், அரபு ஆட்சியாளர்களையும் அவர்களின் மேற்கத்திய சியோனிஸ எஜமானர்களையும் பீதியடைய வைத்துள்ளன அதேநேரம் இவை, உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் நம்பிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளன. பலஸ்தீனிலும் லெபனானிலும் இஸ்லாமியச் சக்திகளின் எதிர்ப்பு அணியினர் சியோனிஸ அடாவடித்தனத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் இத்தருணத்தில், முஸ்லிம்களும் இந்த பூகோளத்தில் வாழும் சுதந்திரத்தை நேசிக்கும் ஏனைய மக்களும், இந்தப் போராளிகளுக்கு ஆதரவாக தங்கள் குரல்களைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பலஸ்தீனப் பூமியையும் முஸ்லிம்கள் மீட்டெடுக்கும் விஷயத்தை அணைந்து விடாமல் எரியச் செய்வது -இறந்து போக விடாமல் எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருப்பது- ஒரு புனிதக் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலியன்ற அதிகப்பட்ச அளவுக்கு பங்குபற்றி கொள்வது அவசியமாகும்.