இமாம் கொமெய்னியின் (ரஹ்) வின் இருபத்தைந்தாவது
நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (04/06/2014) இக் கட்டுரை பிரசுரமாகின்றது.
நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (04/06/2014) இக் கட்டுரை பிரசுரமாகின்றது.
இஸ்லாமிய
மக்கள் புரட்சியின் மூலம் ஈரான் இஸ்லாமியக் குடியரசை ஸ்தாபித்தவரே இமாம்
கொமெய்னி (ரஹ்) ஆவார். இவர் வபாத்தாகி இற்றைக்கு இருபது வருடங்களாகிவிட்டன.
என்றாலும் அவர் இஸ்லாமிய
புரட்சியின் மூலம் இட்ட அடித்தளம் ஆழ, அகலமானது. உறுதியான பலம்மிக்கது.
இதன் பயனாக ஈரான் எவரது தயவிலும் தங்கி நிற்காது சுயமாக எழுந்து நிற்கும்
நாடாக விளங்குகின்றது.
அதேநேரம் வல்லரசுகளின்
அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் தலை சாய்க்காத நாடாக நிமிர்ந்து
நிற்கின்றது. என்னதான் அழுத்தங்களும், நெருக்குதல்களும் பிரயோகிக்கப்பட்ட
போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது மத்திய கிழக்கில் துரிதமாக வளர்ச்சி
பெற்றுவரும் நாடாகவும் திகழுகின்றது ஈரான்.
இதேவேளை இமாம் கொமெய்னி (ரஹ்)
வின் சிந்தனை, மற்றும் செயற்பாட்டுத் தாக்கம் இப்போதும் உலகில்
பிரதிபலிக்கவே செய்கிறது. அவர் முஸ்லிம்களின் ஐக்கியத்தையும்,
ஒற்றுமையையும் பெரிதும் வலியுறுத்தினார். அதுவே முஸ்லிம் உலகின்
மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படை ஆதாரமாக அமையும் என்பதையும்
அவர் பலமுறை சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில் முஸ்லிம்களது
ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவென அவர் ஒற்றுமை வாரத்தைப்
பிரகடனப்படுத்தினார். இவ்வாரம் இஸ்லாமிய வருடக் கணிப்பில் மூன்றாவது மாதமான
ரபியுல் அவ்வலின் நடுப்பகுதியில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு
வருகின்றது.
இவ்வாரத்தில் முஸ்லிம்களது
ஒற்றுமையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் வகையிலான
மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக நடத்தப்படுகின்றன. அது தொடர்பான
விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வகையில்தான் இமாம்
கொமெய்னி (ரஹ்) அவர்கள் முஸ்லிம்கள் உலகில் எங்கு பாதிக்கப்பட்டாலும்
அவர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக இருந்தார்.
அடக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மானசீக ரீதியாக ஆதரவும்
நல்கினார்.
அந்த வகையில்தான் இமாம்
கொமெய்னி (ரஹ்), அல் அக்ஸாவும், பலஸ்தீனமும் யூதர்களின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட வேண்டும். அவை முஸ்லிம்களின் பூர்வீக சொத்து என்பதில்
உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தார். அது தொடர்பான கருத்துக்களையும்
திட்டங்களையும் அவர் முன்வைத்தார். அல் - அக்ஸா மற்றும் பலஸ்தீன்
விவகாரத்தை, அவர் முழு முஸ்லிம்களினதும் பிரச்சினையாகவே
பார்த்தார்.
ஏனென்றால் அல் அக்ஸா என்பது
உலகில் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் பழமையான இரண்டாவது பள்ளிவாசல். இது முழு
முஸ்லிம்களுக்குமான மூன்றாவது புனித தலம். இங்கு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு
தொழுகையும் அல்லாஹ்விடத்தில் ஐநூறு தொழுகைகளுக்குச் சமமாகும்.
அதே நேரம் சர்வவல்லமை மிக்க அல்லாஹ்தஆலாவின் இறைத்தூதர்கள் பலரும், இறை விசுவாசிகளும், வாழ் ந்து வழிபட்ட புனித பிரதேசம் இது.
இஸ்லாத்தின் இறுதித் தூதரான
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி ஒரே இரவில் ‘இஸ்ரா’
பயணம் மூலம் மக்காவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலமும் அதுவே. முஹம்மத்
(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்திப்பதற்கான மிஃறாஜ் எனும் விண்ணுலக
யாத்திரையை ஆரம்பித்த இடமும் அல் - அக்ஸாவேதான்.
இவ்வாறு சிறப்புற்று விளங்கும்
அல்- அக்ஸாவும், பலஸ்தீனமும் ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய புனித பூமி. இதனையே
யூதர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இஸ்ரேலை +(திrதிருக்கிறார்கள்.
பலஸ்தீனின் பூர்வீக மக்களான முஸ்லிம்களை நாடற்றவர்களாக்கியுள்ளார்கள்.
அவர்களை அடக்கி, ஒடுக்கி வருகின்றார்கள். துன்புறுத்துகின்றார்கள்.
இதனால் தான் இமாம் கொமெய்னி
(ரஹ்) ஒரு முறை “அல்- அக்ஸா விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சினையோ,
அல்லது ஒரு நாட்டுக்குரிய பிரச்சினையோ அல்ல. அது தற்கால முஸ்லிம் உலகுடன்
மாத்திரம் தொடர்புபடும் பிரச்சினையுமல்ல. மாறாக அது உலகிலுள்ள
ஏகத்துவவாதிகளினதும், கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால இறை
விசுவாசிகளினதும் கவனத்தை ஈர்க்க வேண்டிய பிரச்சினை என்று
குறிப்பிட்டார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில்
“அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முன்னெடுக்கப்படும் அறப்
போராட்டத்திலேயே அல் - அக்ஸாவின் மீட்சியும், விடுதலையும் தங்கியுள்ளது”
என்றும் குறிப்பிட்டார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இதே நேரம் “அல்- அக்ஸாவையும்,
பலஸ்தீனையும் மீட்டெடுப்பது தொடர்பாக ஒவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் தேசமும்
கவனம் செலுத்துவது அவசியம்” என்றும் அவர் பிறிதொரு சமயத்தில்
வலியுறுத்தினார்.
இதேவேளை ‘அல்-
அக்ஸாவிலிருந்தும், பலஸ்தீன இஸ்லாமிய பூமியிலிருந்தும் இன்ஸா அல்லாஹ்
இஸ்ரேலிய யூதர்கள் விரட்டியடிக்கப்படுவர். அப்போது நாமனைவரும் ஒன்றாகச்
சென்று அல் அக்ஸாவில் ஒற்றுமையாக பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்றும்
நம்பிக்கை தெரிவித்தார் இமாம் கொமெய்னி (ரஹ்).
இவ்வாறு அல்- அக்ஸா
தொடர்பாகவும், பலஸ்தீன் குறித்தும் நிறையவே கருத்துக்களையும்,
அபிப்பிராயங்களையும் முன்வைத்திருக்கிறார் இமாம் கொமெய்னி (ரஹ்). அவை
உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக முஸ்லிம் உலகிலும் தாக்கங்களையும்
பாதிப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
என்றாலும் அத்தோடு
நின்றுவிடாது அல்- அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவத்தை
உலகிற்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் புரியவைப்பதற்கா கவும்,
தெளிவுபடுத்துவதற்காகவும் அவர் சர்வதேச குத்ஸ் தினத்தையும்
பிரகடனப்படுத்தினார்.
ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்)
தலைமையிலான புரட்சி வெற்றி பெற்ற பின் வந்த முதலாவது ரமழான் மாதத்தின்
கடைசி வெள்ளிக்கிழமையே சர்வதேச குத்ஸ் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று தொடக்கம் வருடா வருடம் ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை சர்வதேச
குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் அல்- அக்ஸா மற்றும்
பலஸ்தீன் தொடர்பாக விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்கான ஊர்வலங்களும் மாநாடுகளும், கருத்தரங்குகளும் பரவலாக
நடத்தப்படுகின்றன.
ஈரானில் இஸ்லாமிய
புரட்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவரும் அல்- அக்ஸா மற்றும்
பலஸ்தீன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மாநாடுகளில்
உரையாற்றி இருக்கிறார்கள். அவ்வாறு உரையாற்றுவதற்குத் தவறிய ஈரானிய தலைவர்
எவருமே இல்லை. அந்தளவுக்கு அல்-அக்ஸா மற்றும் பலஸ்தீன் விவகாரத்தை உலக
மயப்படுத்துவதில் ஈரான் பங்களிப்பு செய்து
வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக
பலஸ்தீனர்களின் விவகாரம் என்றிருந்த அல் அக்ஸா பலஸ்தீன பிரச்சினை உலக
முஸ்லிம்களின் பிரச்சினையாக பார்க்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு
இமாம் கொமெய்னி (ரஹ்) வின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் பாரிய பங்களிப்பு
செய்துள்ளன என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
No comments:
Post a Comment