Friday, March 20, 2015

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த இளவல்களே! -செய்யித் அலீ காமெனயி.

LETTER OF THE SUPREME LEADER TO THE YOUTH IN EUROPE AND NORTH AMERICA (TAMIL LANGUAGE)
نامه مقام معظم رهبری به جوانان غرب
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த இளவல்களே!
======================================================
அண்மைக் காலமாக பல மேற்குலக நாடுகளிலும் குறிப்பாக பிரான்சிலும் அண்மையில் நடந்தேறிய நிகழ்வுகளின் பின்னர் நேரடியாகவே உங்களுடன் உரையாடுவது சிறந்தது என எனக்குத் தோன்றியது. நான் இளம் வயதினராகிய உங்களை விளிப்பதன் மூலம் உங்களது பெற்றோரை நான் அலட்சியப் படுத்தியதாக ஆகாது. உங்களது தேசங்களினதும் சமுதாயங்களினதும் எதிர்காலம் உங்கள் கையிலே தங்கியுள்ளதாக நம்புகின்றேன். அத்துடன் சத்தியத்தைத் தேடியறியும் வேட்கையும் ஆர்வமும் உங்கள் இதயங்களில் முழு வீச்சோடு குடிகொடுள்ளதையும் காண்கிறேன்.
இந்தக் கடிதத்தில் நான் உங்கள் அரசியல்வாதிகளையோ ராஜதந்திரிகளையோ கூட விளிக்கவில்லை. அவர்களோ அரசியலின் செல்நெறியை உண்மை மற்றும் நேர்மை என்பவற்றில் இருந்து திசை திருப்பி விட்டுள்ளார்கள்.

நான் உங்களுடன் இஸ்லாம் பற்றி, குறிப்பாக இஸ்லாம் பற்றி உங்களுக்கு வரைந்து காட்டப்பட்டுள்ள சித்திரம் பற்றி உரையாட விழைகிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, ஏறத்தாழ சோவியத் ஒன்றியம் சிதறுண்டதில் இருந்து, மகிமைக்குரிய இந்த சமயத்தை பயங்கரமான ஒரு பகைவனாக சித்தரித்துக் காட்டுவதற்கான முயற்சிகள் தாரளமாக நடந்தன. பீதியையும் துவேசத்தையும் தூண்டுவதும் அதனை துஷ்பிரயோகம் செய்வதும், மேற்குலக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக இடம் பெற்று வருவது துரதிர்ஷ்டமாகும்.

இற்றை வரைக்கும் மேற்குலக சமுதாயங்கள் மீது திணிக்கப் பட்டுள்ள பல்வேறு பீதிகள் பற்றி நான் இங்கு விபரிக்க வரவில்லை. ஏனைய சமுதாயங்கள் மற்றும் கலாசாரங்கள் பற்றிய மேற்கத்திய அரசாங்கங்களின் ஓரவஞ்சனை மற்றும் போலித் தனமான போக்கு பற்றி, புதிய வரலாற்றுப் பதிவுகளில் இருந்து தணிக்கை செய்யப் பட்டுள்ளதை அண்மைய நடப்புகள் பற்றிய மேலோட்டமான விமர்சனப் பார்வை, உங்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும்.

ஐரோப்பாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் வரலாறுகள் அடிமைத்தனத்தின் அசிங்கத்தையும் காலனித்துவத்தின் கரடுமுரடுகளையும் கிறிஸ்தவர் அல்லாத மற்றும் கறுப்பினத்தவர் மீதான ஒடுக்குமுறையின் தலைகுனிவையும் தன்னகத்தே கொண்டவை. முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்களின் போது மதத்தின் பெயரால் கத்தோலிக்கர் மற்றும் புரோதஸ்தாந்தியர் இடையிலும் அல்லது தேசியத்தின் பேரால் அல்லது இன அடையாளத்தின் பெயரால் ஓட விடப்பட்ட இரத்த ஆறுகள் உங்களது ஆய்வாளர்களையும் சரித்திர அறிஞர்களையும் கூட தலை குனிய வைத்துள்ளன. இது மெச்சப்பட வேண்டிய விடயம் தான்.

நீண்ட வரலாற்றின் சிறு துணுக்குகளை மட்டும் சுட்டிக் காட்டுவதன் மூலம் வரலாற்றை குறை காண்பது எனது நோக்கம் அல்ல. மேற்குலகின் மக்கள் மனச்சாட்சி பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் கழிந்து மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவது ஏன் என நீங்கள் உங்களது புத்திஜீவிகளிடம் வினா தொடுக்க வேண்டுமென விரும்புகிறேன். கூட்டு மனச் சாட்சியின் புனர்ஜென்மம், இன்றைய பிரச்சினைகளைத் தவிர்த்து விட்டு பழசு பட்ட விவாகரங்களின் மீது கவனக் குவிப்பை மேற்கொள்கிறது ஏன்? இஸ்லாமிய கலாசாரம் மற்றும் சிந்தனை பற்றி நடந்து கொள்ளும் விதம் போன்ற அதி முக்கிய விவகாரங்கள் பற்றி பொதுசனக் கருத்தாடல் உருவாகுவதை தவிர்க்க முயல்வது ஏன்?
‘மற்றவர்கள்’ என அழைக்கப் படுவோரை கேவலப் படுத்துவதும் துவேசத்தையும் பீதியையும் உருவாக்குவதும் அடக்குமுறையால் கொள்ளை லாபம் ஈட்டுவோரின் பொதுவான பகைப் புலமாகக் காணப்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்கள். பீதியையும் காழ்ப்புணர்வையும் பரப்பும் இந்த பழைய உபாயத்தை தற்போது முன்னுதாரணம் இல்லாத அளவுக்கு செறிவுடன் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப் படுவதற்கு என்ன காரணம் என நீங்கள் உங்களையே வினவிக் கொள்ள வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமிய சிந்தனை ஓரங்கட்டப்பட்டு முடக்கப்பட வேண்டுமென உலக அதிகாரக் கட்டமைப்பு ஆர்வம் காட்டுவது ஏன்? வல்லரசுகளின் திட்டங்களையும் நலன்களையும் பாதிக்கின்ற இஸ்லாமிய கோட்பாடுகளும் விழுமியங்களும் எவை? இஸ்லாம் பற்றிய சித்தரிப்பை சீரழிப்பதன் மூலம் பாதுகாக்கப் படும் வல்லரசுகளின் நலன்கள் எவை? 

ஆகவே, உங்களிடம் எனது முதலாவது வேண்டுகோள் இஸ்லாமின் பிரதிமையை திரித்துக் காட்டும் இந்த முயற்சியைத் தூண்டும் காரணிகள் பற்றி ஆய்ந்தறிய வேண்டும் என்பதாகும்.

கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காழ்ப்புணர்வு மற்றும் தகவல் திரிபு வெறியாட்டத்துக்குத் தெறிசெயலாக இந்த சமயம் பற்றிய முதற் தர நேரடி அறிவை பெற்றுக்கொள்ள முயலுங்கள் என்பது எனது இரண்டாவது வேண்டுகோள் ஆகும். உங்களை கிலி கொள்ளச் செய்து தூர விலகிச் செல்ல வைக்க அவர்கள் விரும்பும் சிந்தனையின் இயல்பையும் அந்தரக்கத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுவே முறையான தர்க்கமாகும்.

இஸ்லாம் பற்றிய எனது விளக்கத்தையோ வேறு வாசிப்புகளையோ நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்த மாட்டேன். நான் சொல்ல வருவது இது தான். இன்றைய உலகின் காத்திரமான மற்றும் செயல்வீச்சுள்ள யதார்த்தம் பற்றி குரோதமும் அதிருப்தியும் வாயிலாக அறிமுகப்படுத்த நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்களாகவே தொழிலுக்கு அமர்த்தியுள்ள பயங்கரவாதிகளை இஸ்லாமின் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்தும் வஞ்சகமான முயற்சிக்கு இடமளிக்க வேண்டாம். இஸ்லாம் பற்றிய தெளிவை அதன் பிரதான அடிப்படை மூல நூற்களில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். புனித குர்ஆனில் இருந்தும் மேன்மைக்குரிய இறைதூதரின் வாழ்க்கையில் இருந்தும் இஸ்லாம் பற்றிய தகவல்களை சேகரியுங்கள். முஸ்லிம்களின் புனித கிரந்தமான குர்ஆனை நீங்கள் இதுவரை நேரடியாக வாசித்துப் பார்த்ததுண்டா என உங்களிடம் வினவ விரும்புகிறேன். இஸ்லாமின் இறைதூதருடைய போதனைகள், மனிதமானம் பற்றி, அவரது பண்பாட்டுக் கோட்பாடுகள் பற்றி நீங்கள் படித்துள்ளீர்களா? ஊடகம் தவிர்ந்த வேறு மூலங்களில் இருந்து இஸ்லாம் பற்றி தகவல் பெற்றதுண்டா? உலகின் மிகச் சிறந்த அறிவுசார் நாகரிகம் ஒன்றை இஸ்லாம் தோற்றுவித்தது. பல நூற்றாண்டு காலமாக உலகுக்கு தலை சிறந்த கண்டுபிடிப்பாளர்களையும் விஞ்ஞானிகளையும் வழங்கி வந்தது. இது எந்தப் பெறுமானங்களின் அடிப்படையில் சாத்தியமாகிற்று என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றவில்லையா?
விரக்தியூட்டும் இழிவானதொரு பிரதிமையை கட்டியெழுப்பி உங்களுக்கும் உண்மைக்கும் இடையில் வெறும் உணர்ச்சிபூர்வமான பாரிய இடைவெளியைத் தோற்றுவிக்கவும் அதன் மூலம் நடுநிலையான தெளிவு ஒன்றை அடைந்து கொள்வதற்கான வாய்ப்பை பறித்துக் கொள்ளவும் இடமளிக்கக் கூடாது. தொடர்பாடல் ஊடகம் மூலமாக புவியியல் எல்லைகளுக்குள் மட்டுப்படாத உலகம் தோன்றியுள்ளது. ஆதலால் யாரும் உம்மை மாயையில் உருவான, உளவியல் வரையறைகளுள் முடக்கி விட நீங்கள் அனுமதிக்கக் கூடாது.

தோற்றுவிக்கப் பட்டுள்ள இடை வெளிகளைக் குறைப்பதற்கு தனி நபர்களால் முடியாது என்ற போதிலும் இந்த இடைவெளிக்கு மேலால் அறிவினதும் நியாயத்தினதும் பாலத்தை நிர்மாணிக்க உங்கள் ஒவ்வொருவராலும் முடியும். இதன் மூலம் உங்களுக்கும் உங்களது சுற்றுச் சூழலுக்கும் ஒளியூட்ட முடியும்.

இளைஞர்களாகிய உங்களுக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் இடையில் திட்டமிட்டு மூட்டிவிடப்பட்டுள்ள இந்தப் நெருக்கடி ஆரோக்கியமானது அன்று. எனினும் தேடலும் வேட்கையும் கொண்ட உங்கள் இதயத்தில் புதிய பல வினாக்களை இது உருவாக்கும். அத்தகைய வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியில் மேலும் புது உண்மைகளைப் புரிந்து கொள்ளும் பொருத்தமான வாய்ப்பு உருவாகிறது. 

எனவே, இஸ்லாம் பற்றிய முறையான, சரியான, பக்கசார்பற்ற தெளிவைப் பெறுவதற்கான இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாம். உண்மை பற்றிய உங்களது பொறுப்புணர்ச்சியின் நற்பலனாக இஸ்லாமுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான இந்த பரஸ்பர உறவாடலைப் பற்றிய வரலாற்றை வெறுப்புக் கலக்காத தெளிவான நல்லுணர்வுடன் வரும் சந்ததியினர் எழுதி வைப்பார்கள் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.

செய்யித் அலீ காமெனயி.
(விலாயத் மீடியா)

No comments:

Post a Comment